பரிதிமாற்கலைஞர் வி.கோ. சூரியநாராயண சாஸ்திரியார்
தமிழ்க் களத்தில் ‘பரிதிமாற்கலைஞர்' என்ற புனைபெயரால் அறியப்பெற்றவர் பேராசிரியர் வி.கோ. சூரிய நாராயண சாஸ்திரியார் (1870-1903). இவர் சென்னைக் கிறிஸ்துவக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர். தமிழ், தமிழர் குறித்து அதிகம் சிந்தித்தவர். தமிழை உயர்தனிச் செம்மொழி என்று 1902ஆம் ஆண்டே மெய்ப்பித்தவர். இருபதாம் நூற்றாண்டில் உருப்பெற்ற தமிழியல் சிந்தனையின் விருத்திக்குத் தளமும் வளமுமாக இருந்தவர். இதைவிடச் சில துறைகளில் முன்னோடிச் சிந்தனையாளராகவும் செயற்பட்டாளராகவும் விளங்கியவர். தாம்; வாழ்ந்த 33 ஆண்டுகளுக்குள் எண்ணற்ற அரும்பணிகள் பல புரிந்தவர்.

மதுரைக்கு அருகே உள்ள விளாச்சேரியில் 1870 ஜூலை 6 அன்று சூரியநாராயண சாஸ்திரியார் பிறந்தார். இவரது குடும்பம் வடமொழி அறிவில் ஆழமிக்கது. இவரது தந்தையார் கோவிந்த சிவனார். வடமொழி அறிவு நிரம்பியவர். தனது மகனுக்கு வரன்முறையாக இந்த அறிவை ஊட்டி வந்தவர். அத்துடன் சாஸ்திரியார் தமிழ்ப்பள்ளியில் சேர்ந்து தமிழும் ஆரம்பக் கல்வியும் கற்று வந்தார். 1880 ஆண்டு பசுமலைக் கல்லூரியில் (தற்பொழுது அமெரிக்கன் கல்லூரி) சேர்ந்து கல்வி கற்றார். இளமையிலேயே வடமொழி ஆர்வமும் திறமையும் பெற்றிருந்தார். தமிழ்ப் பயிற்சியில் அதிகம் கவனம் செலுத்தாது இருந்தார். இருப்பினும் பசுமலைக் கல்வி நிலையத்தி ல் பணிபுரிந்த தமிழாசிரியர் சாஸ்திரியாருக்கு தமிழார்வத்தை ஊட்டித் தமிழை நன்கு ஆழமாகப் பயிலச் செய்தார். இக்கால கட்டத்தில் சாஸ்திரியார் மதுரை யானை மாவுத்தர் பாலகிருஷ்ண நாயுடு என்பவாரிடம் சிலம்பம் மல்யுத்தம் போன்ற கலைகளையும் கற்றார்.

##Caption##தொடர்ந்து சாஸ்திரியார் மேற்படிப்பை முன்னிட்டு மதுரை நகாரிலுள்ள ஜில்லா உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார். தமிழில் தன் மகனுக்குரிய ஆர்வத்தைக் கண்ட கோவிந்த சிவனார் மதுரைக் கலாசாலையில் ஆசிரியராக இருந்த மகாவித்துவான் சு. சபாபதி முதலியாரிடம் தமிழ் பயில 1885இல் சேர்த்தார். மகாவித்துவான் மிகப்பெரும் புலமையாளர். வடமொழியும் ஆங்கிலமும் நன்கு கற்றவர். இதைவிடக் கணிதநூல், அறிவுநூல், தர்க்க நூல் போன்றவற்றையும் அறிந்தவர். இத்தகு புலமையாளாரிடம் வரன்முறையான கற்றலை மேற்கொண்டார். குறிப்பாக தொல்காப்பியம் போன்ற இலக்கண நூல்களையும் சங்க இலக்கியங்களையும் ஏறத்தாழ நான்காண்டுகள் கற்றார். மகாவித்துவானின் நன்மதிப்புக்குரிய மாணவராக சூரியநாராயண சாஸ்திரியார் விளங்கி வந்தார். தனது புலமையை, ஆளுமையை நன்கு வளர்த்து வந்தார். 1889ஆம் ஆண்டு தமது 19வது வயதில் சாஸ்திரியார் ‘மாலா பஞ்சகம்' எனும் தோத்திர நூலை இயற்றினார். இந்நூல் கிடைக்கப்பெறவில்லை. இதைவிட யாழ்ப்பாணத்து ஆறுமுக நாவலர் எழுதிய ‘சாதன சதுஷ்டய தர்ப்பணம்' என்னும் சிறு நூலுக்கு சபாபதி முதலியாரும் சாஸ்திரியாரும் இணைந்து ‘சாதன சதுஷ்டய தர்ப்பண வச்சிர சூசிகா' என்ற கண்டன நூலை வெளியிட்டார் எனவும் அறிய முடிகிறது. 1890ல் சாஸ்திரியார் சென்னைப் பல்கலைக்கழகத்தில் எப்.ஏ. தேர்வில் முதல்வராகத் தேர்ச்சி பெற்று பாஸ்கர சேதுபதி அரசர் உதவிச்சம்பளமும் பெற்றார். சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் பி.ஏ. வகுப்பில் சேர்ந்தார். விசுவநாத முதலியார் என்னும் நண்பருடன் கூட்டாகச் சென்னையில் ஒரு வீட்டின் மாடியில் தங்கிக் கல்லூரியில் பயின்று வந்தார். அக்காலத்தில் சென்னையில் உயர்கல்வி கற்க விரும்பும் மாணவர்கட்குப் பயன்பட்டு வந்த கல்லூரிகள் மாநிலக் கல்லூரி, கிறிஸ்துவக் கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி ஆகிய மூன்றுமே. இந்தக் கல்லூரிகளைச் சாந்தவர்களே பின்னர் தமிழ்நாட்டின் செல்வாக்குமிக்க புலமையாளர்களாக, தலைவர்களாக வெளிப்பட்டார்கள் என்பது வரலாறு.

சாஸ்திரியார் 1892ம் ஆண்டு நிகழ்ந்த பி.ஏ. தேர்வில் தமிழிலும் வேதாந்த தத்துவ சாத்திரத்திலும் பல்கலைக்கழக அளவில் முதல்வராகத் தேறினார். 1893ல் பி.ஏ. பட்டம் பெற்றார். பொற்பதக்கமும் பெற்றார். அப்பொழுது சி.வை. தாமோதரம் பிள்ளை (பார்க்க: முன்னோடி, தென்றல், பிப்ரவரி 2004) பல்கைலக்கழக அளவில் தமிழில் முதல்வராகத் தேர்ச்சி பெறுபவரைத் தம் இல்லத்திற்கு அழைப்பார். சி.வை.தா. சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதன்முதலில் 1858ஆம் ஆண்டு பி.ஏ. தேர்வில் தேறிய இருவருள் ஒருவர். இவர் கலித்தொகை, சூளாமணி முதலிய இலக்கியங்களையும், தொல்காப்பியம், வீரசோழியம், இலக்கணவிளக்கம் முதலிய இலக்கண நூல்களையும் முதன்முதலாகப் பதிப்பித்தவர். இதைவிட சென்னைப் பல்கலைக்கழகத் தழிழ்ப்பாடப் புத்தகக் குழுவின் தலைவராகவும் இருந்தார். இத்தகு பல்வேறு சிறப்புக்களைக் கொண்ட சி.வை.தா. தமிழில் முதல்வராகத் தேர்ச்சி பெறுபவருக்குத் தாமும் அவர்களுக்கு தேர்வு நடத்திப் பரிசுகள் வழங்குவார். அவ்வாறே சாஸ்திரியாரும் சி.வை.தா. இல்லத்துக்கு வரவழைக்கப்பட்டார்.

இருவருக்கும் இடையே ஏற்பட்ட உரையாடல் மூலம் சி.வை.தா. சாஸ்தியாரது புலமையை நன்கு மதிப்பிட்டார். அவரது தமிழ்நடை வெகுசிறப்பாக இருப்பதை சி.வை.தா. உணர்ந்தார். மேலும் முறைப்படி ஒரு வினாத்தாள் கொடுத்து ஒரு மணி நேரத்தில் விடையளிக்குமாறு பணித்தார். சாஸ்திரியார் அரைமணி நேரத்தில் முடித்தார். தம்மை வந்து மறுநாள் காணுமாறு சாஸ்திரியாருக்கு விடைகொடுத்து அனுப்பினார். மறுநாள் சாஸ்திரியாரைக் கண்ட சி.வை.தா., உமது விடைகள் உயரிய செந்தமிழ் நடையில் புதுக் கருத்துக்களைக் கொண்டு விளங்குகின்றன. உம்மைத் 'திராவிட சாஸ்திரி” என்று அழைத்தலே சாலப் பொருந்தும் என்றார்.

சாஸ்திரியாரின் கவிதை நடை எளிமையாகவும் வசனநடை கடினமாகவும் திகழ்வது கண்ட சி.வை.தா. இதே உயரிய வசன நடையில் ஒரு நூல் எழுதித் தருமாறு வேண்டுகோள் விடுத்தார். இதன்படி இயற்றப்பட்ட புதினமே ‘மதிவாணன்'. இந்த நூலின் உயரிய செந்தமிழ் நடைக்கு இதுவே காரணம். மதிவாணன் ‘ஞானபோதினி' மாத இதழில் 1897ம் ஆண்டு முதல் வெளிவரத் தொடங்கியது. 1902ஆம் ஆண்டு இது நூலாக வெளியிடப்பட்டது.

டாக்டர் மில்லர் சாஸ்திரியார் மீது அன்பு கொண்டவர். இவரது புலமையை மதித்தவர். இதனால் தத்துவ சாத்திர ஆசிரியர் பணியை சாஸ்திரியாருக்குக் கொடுக்க முன்வந்தார். அப்போது தமிழாசிரியர்களுக்கு ஊதியம் குறைவு. இருப்பினும் சாஸ்திரியார் தமிழ்மீது கொண்ட காதலால் தமக்குத் தமிழாசிரியர் பதவியை அளிக்குமாறு வேண்டினார். சாஸ்திரியார் விருப்பப்படி தமிழாசிரியர் பதவியை அளித்தார், ஆனால் தத்துவ ஆசிரியருக்குரிய ஊதியம் வழங்கப்பட்டது. சூரியநாராயண சாஸ்திரியார் தனது இருபத்து மூன்றாம் வயதில் கிறிஸ்துவக் கல்லூரியில் உதவித் தமிழாசிரியர் பணியை (1893) மேற்கொண்டார். கல்லூரி அளவில் தமிழாசிரியர் பணியை விரும்பி மேற்கொண்ட முதல் பட்டதாரி இவரே ஆவார். 1895ஆம் ஆண்டில் இதே கல்லூரியில் தலைமைத் தமிழாசிரியராகவும் பதவி உயர்வு பெற்றார்.

பி.ஏ. மாணவர்களுக்கு நன்னூல், யாப்பருங்கலக்காரியை, தண்டியலங்காரம் போன்ற இலக்கண நூல்களும் கம்பராமாயணம், பெரியபுராணம், சங்கநூல்கள் போன்ற இலக்கியங்களும் பாடப்பகுதிகளாக அமைந்திருந்தன. இலக்கணத்தையும் இலக்கியத்தையும் சுவைகுன்றாது மேலும் மேலும் கற்கவேண்டுமென்ற ஆவலைத் தூண்டும் வகையில் கற்றல்-கற்பித்தல் பணியில் சாஸ்திரியார் முழுமையாக ஈடுபட்டார். இதைவிடச் சமகாலக் கருத்துக்களைப் பண்டைய இலக்கியம் கொண்டும் தமிழர் பண்பாடு, நாகாரிகம், மொழி வரலாறு ஆகியவற்றை ஆராய்ச்சி முறையில் வரலாற்றுச் சான்றோடும் விளக்குவார் (வி.சு.கோவிந்தன், 2007). சாஸ்திரியார் பாடம் நடத்தும் பொழுது வகுப்பில் மாணவர் கூட்டம் அதிகமாக இருக்கும். பிற வகுப்பு மாணவர்கள் கூடத் தங்கள் வகுப்புக்களைப் புறக்கணித்துவிட்டு சாஸ்திரியாரின் வகுப்பில் கூடிவிடுவார்கள். அந்த அளவுக்கு மாணவர்களை ஈர்க்கும் திறன் கொண்டவராக சாஸ்திரியார் இருந்தார். மாணவர்கள் எழுப்பும் வினாக்களுக்குச் சுவைபட மட்டுமல்லாமல் மாணவர்களது சுயதேடலையும் சுயகற்றலையும் விரிவாக்கும் வகையிலும் பதில் கூறுவார். சாஸ்திரியார் கல்லூரியில் பணிபுரியத் தொடங்கிய பொழுது மாணவர்களில் பலரும் சாஸ்திரியாரின் வயதை ஒத்தவர்களாகவே இருந்தனர். இதனால் மாணவர்களது அறிவினாக்களையும் குறும்பான வினாக்களையும் ஒரே நேரத்தில் எதிர்கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது. ஆனால் இவரது ஆளுமைத் திறன், அறிவு, மனப்பாங்கு யாவும் சிறந்த ஆசிரியருக்குரிய பண்புகளின் மொத்த வடிவமாக வெளிப்பட்டது.

இதைவிட சாஸ்திரியாருக்கு தமிழ், வடமொழி, ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் புலமை இருந்தது. உளவியலையும் நன்கு பயின்றிருந்தார். இவை சாஸ்திரியாரின் ஆளுமை உருவாக்கத்தில் பெரும் செல்வாக்குச் செலுத்தின. அக்காலத்தில் மாணவர்கள் வேலை பெறுவதற்குரிய தகுதியாக ஆங்கிலத்தைக் கருதினார்கள். கல்வி நிலையங்களில் மாணவர்கள் தமிழ்மீது ஆர்வம் அதிகம் கொள்ளவில்லை. தமிழாசிரியர்களுக்கு அதிகம் மதிப்பு இருக்கவில்லை. ஆனால் இந்த நிலைமைக்கு மாறாக சாஸ்திரியாரது பணிகள் அமைந்திருந்தன. மாணவர்களும் இவர்மீது அதிக மரியாதையும் மதிப்பும் வைத்திருந்தார்கள். ஏனைய தமிழாசிரியர்களுக்கு முன்மாதிரியாக இவர் விளங்கி வந்தார்.

சாஸ்திரியாரால் இயற்றப்பட்டு இன்று நமக்கு கிடைக்கும் நூல்கள் பன்னிரண்டு. அவற்றுள் ‘ரூபாவதி அல்லது காணாமற் போன மகள்', ‘கலாவதி', ‘மானவிஜயம்', ‘தனிப்பாசுரத்தொகை', ‘பாவலர் விருந்து', ‘முதல் நாள்', ‘நாடகவியல்', ‘மதிவாணன்', ‘தமிழ் மொழியின் வரலாறு', ‘ஸ்ரீமணிய சிவனார் சாரித்திரம்', ‘சித்திரக்கவி விளக்கம்' ஆகிய பத்து நூல்களும் சாஸ்திரியாரின் வாழ்நாளிலேயே பதிப்பிக்கப்பட்டு வெளிவந்தன. ‘தமிழ் வியாசங்கள்', ‘தமிழ்ப்புலவர் சரித்திரம்' ஆகிய இரண்டு நூல்களும் இவரது மறைவுக்குப் பிறகு வெளிவந்தன.

இதைவிட, சாஸ்திரியார் இயற்றி அல்லது இயற்ற நினைத்துக் கிடைக்கப் பெறாத நூல்கள் பல. ஆக சாஸ்திரியார் உரைநடை செய்யுள் ஆகியவற்றில் புத்தாக்கமாக இயங்கியுள்ளார். குறிப்பாக தமிழ், வடமொழி, ஐரோப்பிய இலக்கிய இலக்கணங்களைச் செரித்துக்கொண்டு நாடகத் தமிழுக்கு முதன்முதலாக நூற்பாக்களால் ஓர் இலக்கணம் வகுத்தவர் இவரே எனலாம். முதன்முதலில் தமிழில் செய்யுளால் துன்பியல் நாடகம் ஒன்று (மானவிஜயம்) இயற்றிய பெருமையும் இவரையே சாரும். ‘சானெட்' என்ற இலக்கிய வகைமையைத் தமிழில் 'தனிப்பாசுரம்” என்னும் பாடல் வகையாகப் புகுத்தி வளர்த்தெடுத்தார். இந்த வகையை பாரதியார் போன்றோரும் பின்பற்றிச் சில பாசுரங்கள் இயற்றினார். இவ்வாறு பல்வேறு துறைகளில் சாஸ்திரியார் முன்னோடியாக இருந்து செயற்பட்டுள்ளார்.

##Caption## கல்லூரி ஆசிரியர், கவிஞர், நாடக ஆசிரியர், நடிகர், ஆராய்ச்சியாளர், பத்திரிகையாளர், பற்பல நூல்களின் பதிப்பாசிரியர் என்று பன்முகத் தளங்களில் இயங்கியுள்ளார். இவரிடம் தமிழ்-தமிழர் பற்றிய சிந்தனையும் தேடலும் ஆய்வும் பன்முகப் பாங்கில் வெளிப்பட்டுள்ளன. தமிழ் வளம் பெற்றுள்ளது. தமிழ்மொழி, இலக்கிய வரலாறுகளை ஆய்வு முறையில் அணுகி ஆய்வு நோக்கில் கருத்து வெளிப்படுத்த முயன்றவர். தமிழின் மேம்பாடு குறித்தே அதிகம் அக்கறை கொண்டவர். வெறும் உணர்ச்சித் தளங்களில் இருந்து மட்டுமல்லாது ஆய்வு, புலமை நிலைப்பட்ட கண்ணோட்டங்களில் இருந்து செயற்பட்டவர். இதுவே பின்னர் எமக்கு அறிகைமரபாகவும் கையளிக்கப்பட்டுள்ளது.

சாஸ்திரியார் மாணவர்களுக்கான பாடநூல் உருவாக்கத்திலும் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். 1899 இல் கா.ஸ்ரீ. கோபாலசாரியார், தி.கோ. ஸ்ரீரங்காசாரியார், ஆ. சேதுராம பாரதியார் ஆகிய மூவருடன் சேர்ந்து ‘சென்னை செந்தமிழுரைச் சங்கம்' என்ற அமைப்பை நிறுவினார். இதன்வழி 1899ஆம் ஆண்டு மெட்ரிகுலேஷன் பாடங்கட்கும் 1999ஆம் ஆண்டின் எப்.ஏ. பாடங்கட்கும் 1901ஆம் ஆண்டில் பி.ஏ பாடங்கட்கும் உரை எழுதினார். சாஸ்திரியார் இறந்த பிறகு 1904ஆம் ஆண்டில் பச்சையப்பன் கல்லூரிப் பேராசிரியரான தி. செல்வக்கேசவராய முதலியார் (இவர் சாஸ்திரியாரின் மாணவர்) சாஸ்திரியார் தொகுத்துத் தயார் செய்து வைத்திருந்த எட்டாம் வாசக புத்தகம், ஒன்பதாம் வாசக புத்தகம் என்பவற்றை நிறைவு செய்து வெளியிட்டார். அவற்றுள் சில பாடங்களைப் பள்ளி மாணவர்களுக்காகச் சாஸ்திரியார் எழுதியுள்ளதாகச் செல்வக்கேசவராய முதலியார் குறிப்பிட்டுள்ளார்.

மதுரையில் 'மதுரைத் தமிழ்ச்சங்கம்' நிறுவப்பட வேண்டும் என்று சாஸ்திரியார் தீவிரமாக முயற்சி செய்தார். 1901ல் மதுரையில் நான்காவது தமிழ்ச் சங்கம் உருவாக்கப்பட்டது. இதன் பின்னணியில் இருந்தவர்களுடன் சாஸ்திரியாரும் உடனிருந்து செயற்பட்டார். இச்சங்கத்தைப் பற்றி தம்முடைய ‘தமிழ் மொழியின் வரலாறு' முடிவுரையிலும் விரிவாகக் கூறியுள்ளார்.

பல்கலைக்கழகப் பட்டப்படிப்பு அளவில் தமிழ் பாடமாக இருக்க வேண்டாம். ஏனென்றால் அது வட்டார மொழி. தமிழுக்குப் பதிலாகச் செம்மொழியாம் வட மொழியை மாணவர்கள் பயிலட்டும் என்று அரசு தீர்மானமொன்றை உருவாக்கியது. இதனைக் கண்டு சாஸ்திரியார் கோபப்பட்டார். மு.சி. பூரணலிங்கம் பிள்ளையையும் உடன் அழைத்துக் கொண்டு ஆசிரியர் மன்ற உறுப்பினர்களை அவர்களுடைய இல்லங்களிலேயே சந்தித்து இம்முடிவால் தமிழுக்கு நேரக்கூடிய தீங்குகளை எடுத்துக் கூறினார். பல்கலைக்கழகம் இது தொடர்பாகக் கூட்டிய கூட்டத்தில் இத் தீர்மானம் தோற்குமாறு செய்ய வேண்டும் என்று அவர்களிடம் வலியுறுத்தினார். பல மட்டங்களில் இத்தீர்மானத்துக்கு எதிராகத் தீர்மானங்களை நிறைவேற்றி அரசுக்கு அனுப்பச் செய்தார். தாமும் ‘ஞானபோதினி' இதழ் வழியாகவும் ‘செந்தமிழ்' இதழ் வழியாகவும் கட்டுரைகள் எழுதினார்.

இந்தியாவின் வட பகுதியில் இருக்கும் மொழிகளுள் வடமொழியே செம்மொழி. அதேபோல் தெற்கே இருக்கும் மொழிகளுள் தமிழே செம்மொழி. தமிழை வட்டாரமொழி என்று கூறுவதும் எழுதுவதும் மிகப் பெரிய தவறு. தமிழ் உயர்தனிச் செம்மொழி ஆகும். இந்தக் கருத்துக்களை எல்லாம் 1902ம் ஆண்டு நவம்பரில் மதுரைத் தமிழ்ச் சங்கத்திலிருந்து ‘செந்தமிழ்' இதழ் தொடங்கப் பெற்ற பொழுது, அவ்விதழில் ‘உயர் தனிச் செம்மொழி' என்று தாம் எழுதிய கட்டுரையில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

சாஸ்திரியாரின் விடாமுயற்சியால் பல்கலைக்கழகக் கூட்டத்தில் தமிழ்மொழி வென்றது. பட்டப்படிப்பு அளவில் எப்போதும் போல் தமிழ் பாடப்பகுதியாக விளங்கும் என்று தீர்மானிக்கப்பட்டது. சாஸ்திரியார் அன்று முயற்சி செய்திராவிட்டால் கல்லூரிப் பாடத்தில் இருந்து தமிழ் நீக்கப்பட்டிருக்கும். தாய்மொழி வளர்ச்சிக்கு அது மிகப்பெரும் கேடாக முடிந்திருக்கும். இன்று தமிழ், தமிழர் பற்றிப் பேசுவதற்கும் எழுதுவதற்கும் நாம் பெரும் போராட்டமே நடத்த வேண்டியதாக இருக்கும். சாஸ்திரியார் வழிவந்த தமிழ்-தமிழர் பற்றிய சிந்தனையும் செயலும் இருபதாம் நூற்றாண்டில் உருப்பெற்ற தமிழியல் சிந்தனைக்கு புதுத்தடம் அமைத்தது. சாஸ்திரியார் வழிவந்த வளமும் தளமும் இங்கு முக்கியமாகவும் திருப்புமையமாகவும் விளங்குகின்றது.

தமிழ்-தமிழர் மேம்பாடு பற்றியே தாம் வாழ்ந்த 33 ஆண்டுகளிலும் சிந்தித்துச் செயலாற்றிய வி.கோ. சூரியநாராயண சாஸ்திரியார் 1903 நவம்பர் 2ஆம் தேதி காலமானார். சாஸ்திரியார் மறைவு குறித்துப் பலரும் பற்பல இதழ்களும் செய்திகள் வெளியிட்டன. ஆனால் சாஸ்திரியாரின் தமிழ்ப் பற்று தமிழ் உணர்வு சமாகாலப் பொருத்தப்பாட்டுடன் இன்னும் தொடரக் கூடியதாகவே உள்ளது.

தெ.மதுசூதனன்

© TamilOnline.com