ஒலி வடிவத்தில் கேட்க - Audio Readings by Vijayalakshmi Raja, Texas
முதன்முறையாக அமெரிக்க விஜயம் செய்யும் பெற்றோர்களுக்கு என்று தயார் செய்யப்பட்ட 'Do's & Dont's in your Daughter-in-laws' House'
பெற்றவர்கள் அதிலும் குறிப்பாக மாமியார்களுக்கு:
(நான் எழுதுவதில் ஏதேனும் தவறு இருந்தாலோ அல்லது உங்கள் மனதைப் புண்படுத்துவது போல இருந்தாலோ எந்தக் கோணத்திலிருந்து நான் எழுதியிருக்கிறேன் என்பதைப் புரிந்துகொண்டு மன்னிப்பீர்களாக)
இங்கே அமெரிக்கக் கலாசாரத்தில், அமெரிக்க இந்தியக் கலாசாரம் இருக்கிறது. அதில் வட இந்திய, தென்னிந்திய வழக்க முறைகள், மாகாண விதிமுறைகள், நகர, கிராமத்துப் பழக்க வழக்கங்கள், பொருளாதார வசதியை ஒட்டிய பழக்கங்கள், வீட்டைவிட்டு வெளியே வந்து படித்து, வேலை பார்த்தவர்கள் ஏற்படுத்திக் கொண்ட வாழ்க்கை முறை என்று குடும்பத்துக்குக் குடும்பம் மட்டுமல்ல; ஒவ்வொரு தனி நபருக்கும் Cultural Package இருக்கிறது. எல்லோருமே தாங்கள் அந்தக் காலகட்டத்தில் பாவித்து வரும் வழக்கங்களையே நியாயப்படுத்தி வாதிட்டுக் கொண்டிருப்பார்கள். ஒரு கிராமத்தில் புது மணப்பெண்ணாக, புடவை கட்டிக்கொண்டு வெட்கத்துடன் தன்னை நமஸ்காரம் செய்த அந்த முகத்தை அன்பாக ஏற்றுக் கொள்ளும் மாமியாருக்கு இங்கே வந்து வெயில் பொறுக்காமல் ஒரு அரைப் பேண்ட், பாதிச் சட்டையோடு தலையைக் குட்டையாக்கிக் கொண்டு விட்ட அதே பெண்ணைப் பார்த்து அதிர்ச்சியாக இருக்கிறது.
##Caption## சிலர் மனதில் குமைவார்கள். கணவரிடம் பொருமுவார்கள். பிள்ளையிடம் கேட்டுப் பார்ப்பார்கள். ஒருநாள் பொறுக்க முடியாமல் அவளிடமே வெடித்து விடுவாள். ஒரு குட்டி மலை இருவர் உள்ளத்திலும் உருவாகும். இத்தனைக்கும் அந்த மாமியார் மருமகளுக்கு ஆசையாக வைர வளையல், அவளுக்கென்று வீட்டில் செய்த பட்சணம் என்று என்ன என்னவெல்லாமோ கட்டிக் கொண்டு வந்திருப்பார். மருமகளும், மாமியார் வந்தால் இந்த இந்த இடங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று திட்டம் போட்டிருப்பார். ஒருவர் அன்பை இன்னொருவர் புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள் என்று இருவர் மேலும் குற்றச்சாட்டு. வந்தவர்களுக்கு எப்போதடா திரும்பப் போவோம் என்று நினைக்கத் தோன்றும். மகனுக்கு இரண்டு பக்கமும் சமரசம் செய்ய முடியாமல் அடி. எத்தனையோ மகிழ்ச்சியான கதைகளையும் கேட்டிருக்கிறேன்.
உறவுகளில் பெரிய பள்ளங்கள் ஏற்படுவதே இரண்டு காரணங்களால்தான். ஒன்று, ஏதேனும் மனதில் நெருடல் ஏற்பட்டால் அதை நாசூக்காக எடுத்துச் சொல்லாமல் உரிமை என்ற பெயரில் வெளிப்படையாகப் பேசுவது அல்லது ஒன்றும் சொல்லாமலே அந்த நெருடலை பெரிதாகவிட்டு மற்றவரிடம் இலைமறையாகக் குறை சொல்லி மனது வெடித்துப் போகும் அளவுக்கு வளர விடுவது. ஒரு சிறிய உதாரணம், ‘எத்தனை தடவைம்மா சொல்றது, இப்படிச் செய்யக் கூடாது என்று' என்று ஒரு பெண் சொன்னால் அதை யதார்த்தமாக எடுத்துக் கொள்ளும் ஒரு தாயால், அதே வார்த்தைகளை மருமகள் சொல்லும்போது ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. ரோஷம், அவமானம், கோபம் எல்லாம் மனதைத் தாக்கும். இது எல்லாமே சின்ன விஷயங்கள்தாம். ஆனால் உள்ளேயும், வெளியேயும் பிரளயத்தை ஏற்படுத்திவிடக் கூடிய சக்தி சின்னச்சின்ன விஷயங்களுக்கும் உண்டு. இதைக் குப்பையாக எடுத்துக் கொண்டு தூக்கித் தள்ளிவிடலாம். இல்லை, உள்ளுக்குள்ளேயே புழுங்கி அவஸ்தைப் படலாம். இல்லை, நாம் செய்தது தவறு என்று மருமகள் கருதினால் நம் அறியாமையை ஏற்றுக்கொண்டு, பெருந்தன்மையாக அந்த நிகழ்ச்சியை மறந்துவிடலாம். எது எப்படியோ, கீழே குறிப்பிட்ட சில விஷயங்களை அமெரிக்கப் பயணத்துக்கு முன்னாலேயே அறிந்து கொள்வது நல்லது:
1. எவ்வளவுக்கெவ்வளவு நம் எதிர்பார்ப்புகளைக் குறைத்துக் கொள்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு இன்னும் நன்றாக நம்மைக் கவனித்துக் கொள்வார்கள்.
2. ஆசாரம், அனுஷ்டானம் என்று இருப்பவர்கள் இன்னும் நிறைய நிறைய விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும்.
3. இந்தியாவிலேயே பச்சைக் காய்கறிகளையும் கொஞ்சம் சாப்பிடப் பழகிக் கொண்டு விட்டால் வெளியிடங்களுக்குப் போகும்போது சாப்பாட்டுப் பிரச்சனை என்பது வராது.
4. மகன், மருமகள் - பண விஷயம், குழந்தை வளர்ப்பு விஷயம் - தயவு செய்வது தவிர்ப்பது மிகவும் நல்லது (அவர்களே ஆலோசனை கேட்டால் ஒழிய).
5. மருமகளின் பெற்றோர்களும் உடன் வந்து இருந்தால் என்னதான் நாம் ஆசையாக இருந்தாலும் அவள் தன் தாயிடம்தான் சில உரிமைகளை எடுத்துக் கொள்வாள். இதுதான் இயற்கை. இதற்கு நாம் வருத்தம் கொள்ளக் கூடாது.
6. தலைமுறைகள் மாறுகின்றன. பழக்க வழக்கங்கள் மாறுகின்றன. இதுதான் எங்கள் வழக்கம் என்று பிடிக்காததைத் திணிக்காதீர்கள். நாம் நல்லதாகச் செய்தாலும் திணிக்கப்படும்போது அவர்கள் புறக்கணித்து விடுவார்கள்.
7. போனில் பேசிக் கொண்டேதான் இருப்பார்கள். இந்த இயந்திர உலகத்தில், உடன் பிறப்புக்கள் பக்கத்தில் இல்லாத நிலையில் அவர்களுக்கு இந்தத் தோழமை மிகவும் வேண்டியிருக்கிறது. ‘எப்போதும் போனிலேயே இருக்கிறாள், எங்களைக் கவனிக்க எங்கே நேரம்?' என்று அலுத்துக்கொண்டால் என்ன பிரயோசனம்?
8. உங்களால் என்ன உதவி முடியுமோ, அதை மட்டும் செய்யுங்கள். முடியாததை, முதலிலேயே அழகாகச் சொல்லி விடுங்கள். (நிறைய மாமியார்கள், மருமகளுக்கு பயந்து போய் எதையாவது செய்து கொண்டே இருப்பார்கள்).
9. நீங்கள் உங்கள் மாமியாரிடம் பட்டக் கஷ்டங்களைக் கேட்க உங்கள் மருமகளுக்கு நேரமும் இல்லை; இஷ்டமும் இல்லை.
##Caption## 10. அமெரிக்கா வந்தாலே தனிமை உங்களுடைய சொத்தாகி விடுகிறது. ஆகவே, அதை எப்படி அனுபவிப்பது என்பதை இந்தியாவிலிருக்கும் போதே திட்டமிட்டு விடுங்கள்.
11. கணவன், மனைவி சச்சரவுகளை தயவுசெய்து கண்டு கொள்ளாதீர்கள்.
12. ‘பாசத்துடன் பார்த்துப் பார்த்து வளர்த்தேனே, என் பிள்ளையைப் பாத்திரம் தேய்க்க வைக்கிறாளே...' என்று வருத்தப்படாதீர்கள். இங்கே இதுதான் நியதி. நீதி.
13. உங்கள் பெண்ணின் திறமைகளையும், அறிவையும் பற்றி உங்கள் மருமகள் கேட்கத் தயாராக இல்லை. நீங்கள் உங்கள் பெண்ணுக்கு விமரிசையாகத் திருமணம் செய்தீர்கள் என்பதைப் பற்றியும் அவருக்கு அக்கறையில்லை. (அவரே ஆர்வத்துடன் கேட்டால் ஒழிய...)
14. உங்கள் மகனுக்கு என்ன பிடிக்கும், பிடிக்காது என்பதைப் பற்றி உங்களுக்குத்தான் அதிகம் தெரியும் என்று தெரியப்படுத்திக் கொண்டே இருக்காதீர்கள். எந்த அம்மாவுக்குத் தான் தன் பிள்ளையைப் பற்றித் தெரியாது?!
15. வீட்டில் உள்ள உபகரணங்களையெல்லாம் எப்படி இயக்குவது என்பதை முதலிலேயே தெரிவிக்கச் சொல்லுங்கள். அதே உபகரணங்கள் நாம் உபயோகித்தாலும் இயக்கும் வகை வீட்டுக்கு வீடு மாறுபடும். எழுதியும் வைத்துக் கொள்ளுங்கள்.
16. இங்கே உணவைப் பொறுத்த வரையில் 'கெட்டுப் போனது', ‘கெட்டுப் போகாதது' என்ற வித்தியாசமே தவிர பழையது, புதியது என்ற வித்தியாசம் எதுவும் கிடையாது. எனவே கொஞ்சம் அல்ல; நிறையவே அட்ஜஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
17. ‘அவனுக்குப் பிடிக்குமே என்று செய்தேன்' என்று சொல்வதை விட, ‘அவளுக்குப் பிடிக்குமே என்று செய்தேன்' என்று சொன்னால் அங்கே உங்கள் அரவணைப்பு தெரியும்.
18. பார்ட்டிக்கு அவர்களுடன் போனால் கொஞ்சம் 'போர்'தான் அடிக்கும். தனிமையாகத்தான் இருக்கும். ‘கெக்க பிக்கே'வென்று எல்லோரும் சிரித்துக் கொண்டுதான் இருப்பார்கள். இளைஞர் சமுதாயம் அவர்கள் வழியில் வாழ்க்கையை ரசிக்கிறார்கள். அதை நாம் ரசிப்பதை விட்டுவிட்டு 'நம்மைத் தனிமைப்படுத்திப் பார்க்கிறார்கள்' என்ற உணர்வை நெருங்க விடாதீர்கள்.
19. நாம் நன்றாகச் சுத்தப்படுத்தி வைத்து விட்டோம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது அதே இடத்தை மருமகள் திரும்பித் தேய்த்தால் உடனே ரோஷப்பட்டுக் கொள்ளாதீர்கள். இந்தியாவில் உள்ள நிறையப் பேருக்கு ‘வேலைக்காரர்கள்' என்ற வர்க்கம் இருப்பதால், துலக்கிப் பெருக்கும் அனுபவம் இல்லை.
20. உங்கள் மகன்தான். ஆனால் உங்கள் மருமகளின் கணவன். முழு உரிமை முதலில் அவருக்குத்தான். நாம் கொஞ்சம் இடம்பெயர்ந்து கொள்ளத்தான் வேண்டும்.
இதுபோன்று இன்னும் நூற்றுக்கணக்கில் எழுதிக் கொண்டே போக ஆசை. ஆனால், இப்போதே உங்களுக்குப் பொறுமையிழந்து போயிருக்கும்.
வாழ்த்துக்கள்!
அன்புடன் - டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன் |