மெய்நிகர்மாயத்தின் மர்மம் - பாகம் 2
இதுவரை...

Silicon Valley-இல் தொழில் நுட்ப நிபுணராக இருந்து, முழு நேரத் துப்பறிவாள ரானவர் சூர்யா. அவரது நண்பர் மகன் கிரணும் மகள் ஷாலினியும் ஆர்வத்துடன் அவருக்கு உதவி செய்கின்றனர். கிரணின் தொழில் பங்குவர்த்தகம், ஆனால் கணினி விளையாட்டுகளில் மிக்க வெறி. ஷாலினி ஸ்டான்·போர்டு மருத்துவ மனையில் மருத்துவராகவும் Bio-Medical ஆராய்ச்சி நிபுணராகவும் பணி புரிபவள். சூர்யாவை மானசீகமாகக் காதலித்தாலும், அவர் தன்னை வெளிப்படையாக நெருங்கக் காத்திருக்கிறாள். சிறுவயதில் சூர்யாவோடு பள்ளியில் படித்த நாகநாதன் தன் மெய்நிகர் விளையாட்டு நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனையைத் தீர்க்க சூர்யாவை அழைத்துள்ளார். சூர்யா, கிரண், ஷாலினி மூவரும் அவரது ஆராய்ச்சி சாலைக்குள் சென்று பார்த்தபோது...


நாகநாதனின் ஆராய்ச்சிக் கூடத்தைப் பார்த்துக் கிரண் பிரமித்துப் போனான். வெளியில் சிறிதாகவே தெரிந்த கட்டிடம், உள்ளே பிரம்மாண்டமாகத் தோற்ற மளித்தது. நிலமட்டத்துக்கு அடியில் ஆழமாகக் குடைந்து சென்ற கீழ்த்தளம் மிகவும் விரிவாகப் பரந்திருந்தது.

நுழைவுத் தளத்திலிருந்தே கீழே என்ன நடக்கிறது என்று முழுவதும் பார்க்க வசதியாக, கிராமிய வீடுகளிலுள்ள முற்றம் போல் நடுவில் விஸ்தாரமாகத் திறந்திருந்தது. அந்த முற்றத்தைச் சுற்றி மேல்தளத்தில் அலுவலக அறைகளும் கூட்டங்களுக்கான கூடங்களும் இருந்தன. கீழ்த்தளத்தில் அறைகளே இல்லை. பளபளவென தரையும் அதன் மேல் வரிசை வரிசையாகச் சாதனங்களும் மட்டுமே இருந்தன. அவற்றை யும் சுற்றி நடந்த நடவடிக்கைகளையும் கண்டு கிரண் வாய் பிளந்தது தெரியாமல் ஆச்சர்யத்துடனும் கவனித்தான்.

பிரும்மாண்டமான நீள அகலம் வாய்ந்த அக்கீழ்க் கூடத்தின் நாற்புறச் சுவர்களையும் சார்ந்து வரிசை வரிசையாக, ஆயிரக் கணக்கான கணினிகள் அடுக்கப் பட்டிருந்தன. தடையின்றி மின்சாரம் செலுத்தும் கருவிகளும், குளிர்க்காற்றை வீசத் தேவையான குளிர்பதன சாதனங் களும் மற்றும் அவைகளை மின்வலையாகப் பிணைக்கத் தேவையான மின்கம்பிகளும் நேர்த்தியாக பொருத்தப் பட்டிருந்தன. அவை எவ்வளவுக்கெவ்வளவு நேர்த்தியாக இருந்தனவோ, அதற்கு நேர்மாறாகக் களேபரக் காட்சியளித்தது கூடத்தின் நடுப்பரப்பு.

அங்கு பிரமிட், அரைக்கோளம் போன்ற பல்வேறு வடிவுகளில் சிறு அறை அளவுக்கு இருந்த அமைப்புகள் ஆங்காங்கு சிதறியது போல் அமைக்கப் பட்டிருந்தன. மின் கம்பிகள் அவற்றிலிருந்து கணினிக் கூட்டங்களுக்குத் தொடர்பளித்தன. அவற்றுக் கிடையில் ஆராய்ச்சிக் கூட மேஜைகள் இருந்தன. அவற்றின் மேல் கணினிகளுடன் வேலை செய்யும் மின்திரைகள் பல வண்ணங்களில் மினுக்க, அவற்றில் பல விதமான வடிவங்கள் தோன்றிக் கண் சிமிட்டி மறைந்து மாயாஜால வித்தை காட்டிக் கொண்டிருந்தன.

அதற்கெல்லாம் மேலாகக் கிரணுக்கு வியப்பளித்தது அந்தப் பலவடிவச் சிறு கூடார அறைகளிலிருந்து அவ்வப்போது வெளிவந்து அந்த மின்திரைகளுக்கு முன் ஏதோ செய்துவிட்டு மீண்டும் அறைகளுக் குள் மறைந்து கொண்டிருந்த வினோத உருவங்கள்தாம். அவற்றைப் பார்த்தால் முதலில் எதோ ராக்கெட்டில் பயணம் செய்யும் விண்வெளி வீரர்களைப் போன்றிருந்தன.

அல்லது, இன்டெல் போன்ற நிறுவனங் களின் சிப்களைத் தயாரிக்கும் பரிசுத்த அறைகளில் வேலை செய்பவர்கள் போல என்றும் கூறலாம். உடல் முழுதும் பளபள வென மினுக்கிய உடை. கைகளில் பருமனான கையுறை. முதுகில் செவ்வக வடிவில் சிறு பெட்டி. ஆனால் ஒரு முக்கிய வித்தியாசம்.

தலையை முழுவதும் மூடாமல், முன் பக்கத்தில் முகத்துக்கு மட்டும் கவசமாக எதையோ தரித்திருந்தனர்.

நாகநாதன், கிரணின் மலைப்பைக் கண்டு நகைத்தார். "என்ன கிரண் இப்படி மலைச்சுப் போயிட்டே?

இங்கேந்து பாத்தே இப்படின்னா அங்க உள்ள போய் பார்த்தா...?"

கிரண் பிளந்த வாயை மூடிக்கொண்டு, "அம்மாடியோவ்! வெறும் 3D விர்ச்சுவல் விளையாட்டுக்கள் உருவாக்கவா இம்மாம் பெரிய ஸெட்டப்!" என்றான்.

நாகு சிலிர்த்துக் கொண்டு, சற்று ஆவேசத் துடனேயே பேசினார். "சே, சே, ஏன் அப்படிக் கேட்டுட்டே கிரண்? நாங்க செய்யற மூணு பரிமாண மெய்நிகர் வேலை வெறும் விளையாட்டுகளுக்காக மட்டுந்தான்னு நெனச்சுட்டயா? இல்லவே இல்லை.

விளையாட்டுகளுக்கும் செய்யறோம். உண்மைதான். அதோட, அதைவிட மிக முக்கியமான வேலைகளுக்கும் அதை எப்படிப் பயன்படுத்தலாம்னு இங்க ஆராய்ச்சி நடக்குது."

ஷாலினி மிகுந்த ஆர்வத்துடன், "கேட்க ரொம்ப சுவாரஸ்யமா இருக்கே நாகு! ப்ளீஸ் இன்னும் என்னென்ன துறைக்கெல்லாம் ஆராய்ச்சி செய்யறீங்கன்னு சொல்லுங் களேன்" என்று கொஞ்சும் குரலில் கேட்கவும் நாகு உச்சி குளிர்ந்து போய் விவரித்தார். "முதலாவது, மெய்நிகர் தொழில் நுட்பத்தால் நிஜ உலகம் போலவே ஸிமுலேஷனால் உருவாக்கி, பயிற்சி அளிக்க பயன்படுத்தறது.

உதாரணமா, விமானம் செலுத்தும் பைலட்கள், மிகவும் நுணுக்கமான சாதனங் களைப் பராமரிக்கறவங்க, ஏன், உங்க துறையில கூட--உடலில் அறுவை சிகிச்சை செய்யற மருத்துவர்களுக்குக் கூட பயிற்சி அளிக்க உதவலாம். இன்னும், வெளியி லிருந்து மட்டும் பார்க்கக் கூடிய முப்பரிமாண மாடல்களா இல்லாம, கார்களுக்கெல்லாம் உள்ளே போய் உட்கார்ந்து, உள்ளமைப்பு எப்படி இருக்கும், அதை ஓட்டிப் பார்த்தா எப்படி இருக்கும், அதோட சாதனங்க ளெல்லாம் எப்படி இருக்கும்னு காட்டலாம். மேலும்..." என்று சொல்லி மூச்சு வாங்க நிறுத்தினார்.

கிரண் பரபரப்புடன் "மேலும் என்ன, சொல்லுங்க" என்று அவசரப்படுத்தவும் நாகு தொடர்ந்தார். "வீடு வாங்கறவங்க இப்ப மின்வலையில வீடியோ, படங்கள் எல்லாம் பாக்கமுடியுது இல்லையா? அது சிறு பிள்ளைத்தனம்! இந்த மெய்நிகர் தொழில் நுட்பம் அதை எப்படி ஆக்கப்போகுது தெரியுமா? வீட்டுக்குள்ளயே போய் நடந்து பாக்கறா மாதிரிச் செய்யமுடியும். அது மட்டுமில்லை, இப்ப நடக்கிற மின்வலை மற்றும் வீடியோ கூட்டங்கள் எல்லாத்தையும் ஒரேயடியா தூக்கிச் சாப்பிட்டுடறா மாதிரி, நேரடியா உக்காந்து பேசற மாதிரி உணர்வுகூடக் கொடுக்க முடியும். இன்னும்..." என்று தன் கனவுலகில் சஞ்சரித்தபடிப் பேசிக் கொண்டே போன நாகுவைச் சூர்யாவின் குரல் நிஜவுலகுக்கு இழுத்தது.

"கேட்க ரொம்ப சுவாரஸ்யமாத்தான் இருக்கு நாகு. ஆனா நீங்க எங்களைக் கூப்பிட்ட விஷயம் என்னன்னு பேசலாமா?" என்றார் சூர்யா.

நாகு ஒரு மாதிரி அசடு வழிய "ஆமாமாம்! என்னை விட்டா மணிக் கணக்கா சொல்லிக்கிட்டே இருப்பேன். நீங்க சொல்றது சரி, தற்போதைய விஷயத்துக்கு வருவோம்.

அதுக்கு முக்கியமானவரைப் பாக்கத்தான் போய்க்கிட்டிருக்கோம் வாங்க" என்று சொல்லி, அவர்களை ஒரு பெரிய அலுவலக அறைக்கு அழைத்துச் சென்றார். அங்கு, பார்த்தவுடனேயே விஞ்ஞானி என்று சொல்லி விடக்கூடிய தோற்றத்துடன் இருந்த ஒருவரை அறிமுகம் செய்து வைத்தார். "இவர்தான் ரிச்சர்ட் ஷெல்டன். எங்க நிறுவனத்தோட தலைமை விஞ்ஞானி. ரிச், இவர்தான் நான் உங்களுக்கு முன்னமே சொன்னேனே, அந்த சூர்யா. இது கிரண், இவங்க ஷாலினி. அவங்க ரெண்டு பேரும் சூர்யாவுக்கு உதவியா வந்திருக்காங்க" என்று அறிமுகப்படுத்தினார்.

முதலில் ஒன்றும் பேசாமல் கைகுலுக்கிய சூர்யா ரிச்சர்டைத் தனக்கே உரித்தான வகையில் விரைந்து தீர்க்கமாகக் கவனித்து விட்டு, அவரது அலுவலக அறையைச் சில நொடிகளுக்குள் முழுவதாய் நோட்டம்விட்டு முடித்தபின் வெகு சாதாரணமாக, "உங்களைச் சந்திக்கறதுல ரொம்ப சந்தோஷம். உங்க வீட்டுப் பின் தோட்ட மாற்று வேலை எப்படிப் போய்க்கிட்டிருக்கு? இங்க இருக்கற வேலைகள் எல்லாத்துக்கும் நடுவில அதையும் செஞ்சுகிட்டு அதுக்கும் மேல உங்க பழைய கல்லூரியோட விஞ்ஞான ஆராய்ச்சி கூடத்தைப் புதுப்பிச்சு பெரிசாக் கட்டற முயற்சிக்கும் தலைமை தாங்கி உழைக்கிற உங்களைப் பாராட்ட றேன். எப்படித்தான் சமாளிக்கறீங்களோ!" என்று பாராட்டினார்.

ரிச்சர்ட், நாகு இருவருமே அதிர்ந்து போய்விட்டனர். ரிச்சர்ட் வாயடைத்துப் போய் சூர்யாவின் கையைப் பிடித்தபடி நிற்கவே நாகுதான் முதலில், "சூர்யா, ஆச்சர்யமா இருக்கே.

உங்களுக்கு ரிச்சர்டை முதலிலேயே நல்லாத் தெரியும்னு சொல்லவே இல்லையே?" என்றார்.

ரிச்சர்ட் சூர்யாவின் கையை விட்டுவிட்டு இன்னும் கலையாத அதிர்ச்சியுடன் தலையாட்டி மறுத்தார். "இல்லை நாகு. இப்பத்தான் முதல் முறையா இவரை நான் பாக்கறேன். எப்படி அதுக்குள்ள இவர்... எனக்கு ஒண்ணும் புரியவே இல்லையே" என்று இழுத்தார்.

நாகு பலமடங்கு அதிக வியப்புடன், "என்ன, இப்பத்தான் முதல் முறையா பாக்கறீங்களா?

அப்ப எப்படிப் பல வருடம் பழகினா மாதிரி வீட்டு, வெளி விஷயங்களெல்லாம் பத்தி ஆழமாக் குசலம் விசாரிக்கறாரே? சூர்யா, எப்படி அது?" என்றார்.

சூர்யா முறுவலுடன் இன்னொரு அதிர் வேட்டையும் வீசினார். "எனக்கு நீங்க சமீபத்துலதான் சிவகாசிங்கற தமிழ்ப் பட வீடியோ பாத்தீங்கன்னு எப்படித் தெரியுமோ அதே மாதிரிதான்."

நாகு மனத்துக்குக்குள் முளைவிட்ட ஒரு வித பயத்துடனே தடுமாறினார். "ஹ¥ம்... நிஜந்தான். ஆனா அதெப்படி?" பிறகு திடீரென எதோ தோன்றவும், முளைவிட்ட வெறுப்புடன் தொடர்ந்தார். "சூர்யா, உன்னை எங்க ஆராய்ச்சி சாலையில இருக்கற பிரச்சனையைத் துப்புத் துலக்கித் தீர்த்து வைக்கத்தான் கூப்பிட்டேனே ஒழிய இந்த மாதிரி எங்களைத் தனிப்பட்ட முறையில இவ்வளவு சீக்கிரம் பின் தொடர்ந்து, வீட்டுக்குள்ள எல்லாம் புகுந்து கவனிச்சு எங்க சொந்த விஷயங்களை யெல்லாம் குடாய்வேன்னு துளிக்கூட நினைக்கவே இல்லை.

அதுவும் கூப்பிட்டனுப்பிச்ச ஒரு நாளுக் குள்ள இவ்வளவு ஆழமா நோண்டிப் பாத்திருக்கே.

அவசியமே இல்லை. சே! திஸ் இஸ் ஜஸ்ட் டூ மச்! இது அனாவசியம், அவமானம்!"

ரிச்சர்டும் தன் பங்குக்கு வெடித்தார். "அப்ஸொல்யூட்லி ரைட் நாகு! என் சொந்த விஷயங்களை என் வீட்டு வரைக்கும் வந்து கவனிச்சது மன்னிக்க முடியாது..." என்று ஆரம்பித்தார். ஆனால் முடிக்க முடிய வில்லை!

ஷாலினி சூடாக, "நாகு, என்ன சொல்றீங் கன்னு கொஞ்சம் அளந்து வார்த்தைகளை பேசுங்க. உங்க பின்னால ஓடி, வீடு களுக்குள்ள குடையரத்துக்கு சூர்யா ஒண்ணும்..." என்று ஆரம்பிக்கவும், கிரண் அதே சமயத்தில், "ஹே, ஹே, ஹே! ஒரு நிமிஷம் மெதுவாப் போங்க... உங்களுக்கு சூர்யாவைப் பத்தி ஒரு மண்ணும் தெரியாது" என்று கொந்தளிக்கவும், இருவரையும் சூர்யா கையைத் தூக்கிக் காட்டி அமைதிப் படுத்தினார்.

இருவரும் மிக முயன்று தங்கள் சினத்தை அடக்கிக் கொண்டனர்.

சூர்யா முறுவலுடன் விளக்கினார். "நாகு, ரிச்சர்ட், உங்க கோபம் புரிஞ்சுக்கக் கூடியதுதான். ஆனா அதோட அடிப்படை தான் சரியில்லை. நான் சொன்னதை வச்சு உங்களைத் தொடர்ந்து வந்து, வீடுகளுக் குள்ள புகுந்து குடைஞ்சேன்னு தப்பா நினைச்சுக்கிட்டிருக்கீங்க. உண்மையில ரிச்சர்டுன்னு ஒருத்தர் இருக்காருன்னே எனக்கு அஞ்சு நிமிஷம் முன்னாடி வரை தெரியாது. நாகு, நீங்க எங்கே வசிக்கறீங் கன்னும் சுத்தமாத் தெரியாது. நான் இங்க கவனிச்சதை வச்சு சும்மா சில யூகங்களைச் சொன்னேன் அவ்வளவுதான்! அது தப்பா வும் இருந்திருக்கலாம். தொடரவுமில்லை, குடையவுமில்லை!" என்றார்.

நாகு இன்னும் நம்பிக்கையில்லாமல் "வெறும் யூகங்களா? அதெப்படி முடியும்?" என்று இன்னும் தணியாத கோபத்துடன் கேட்டார்.

சூர்யா தொடர்ந்தார். "சரி, முதல்ல ரிச்சர்டோட விஷயங்களை சொல்றேன். ரிச்சர்ட், நான் உங்க அறைக்குள்ள வந்தவுடனேயே இங்க இருக்கறதை யெல்லாம் கொஞ்ச நேரம் கூர்ந்து கவனிச் சேன். அதை நீங்க ரெண்டு பேரும் கவனிச்சிருக்கமாட்டீங்க. கிரண், ஷாலினி கிட்ட அறிமுகம் செஞ்சுக்கறதுல கவனமா இருந்தீங்க..."
ரிச்சர்ட் இன்னும் சற்றும் மாறாத எரிச்சலுடன், "ஸோ? அதனால என்ன?" என்று வினவினார்.

சூர்யா புன்னகையுடன் விளக்கினார். "இங்கே நான் உங்க மேஜைக்கு ரொம்பப் பக்கத்துல நின்னுக்கிட்டிருக்கேன். மேஜை மேல நிறைய காகிதங்களைப் போட்டு வச்சிருக்கீங்க.

புகைப்படங்களும் இருக்கு. அவற்றை உங்க அனுமதியில்லாமப் பார்த்ததுக்கு மன்னிச் சிடுங்க. ஆனா ஒண்ணு ரெண்டு உடனே என் கவனத்தைக் கவர்ந்தது. ஒண்ணு பாருங்க உங்க பழைய கல்லூரியிலிருந்து வந்திருக்கும் முன்னாள் மாணவர்களுக்கான செய்தி அறிக்கை. அதுல ஆராய்ச்சிக் கூடத்தை விரிவாக்கற முயற்சியைப் பத்தி கொட்டை எழுத்துல முதல் பக்கத்துல புகழ்ந்திருக்காங்க."

ரிச்சர்டின் கோபம் தணல்மேல் குளிர்நீர் கொட்டியது போல் புஸ்ஸெனத் தணிந்தது!

வியப்புடன், "ஓ! அதைப் பார்த்துத்தான் சொன்னீங்களா! வெரி குட். நான் என்னமோன்னு அதிர்ந்து போயிட்டேன். சரி, அப்ப என் வீட்டுத் தோட்ட வேலை யைப் பத்தி, அது எப்படி?"

சூர்யா தொடர்ந்தார். "அதுவும் அதே போலத்தான். மேஜை மேல இன்னொரு மூலையில பாருங்க வீட்டுத் தோட்டப் புகைப் படங்கள்..."

ரிச்சர்ட் இடைபுகுந்து மறுத்தார். "அதெல் லாம் என் வீட்டு புகைப் படங்கள் இல்லை, தப்பாக் கணிச்சிட்டீங்க!" என்று சூர்யா தவறியதைக் கண்டு பிடித்துவிட்ட பெரு மிதத்துடன் கூறினார்.

சூர்யா முறுவலுடன் மேலும் விளக்கினார். "அது சரிதான். ஆனா அது உங்க வீட்டுத் தோட்டமா இருக்க முடியாதுன்னு நான் உடனேயே தெரிஞ்சுக்கிட்டேன்!" என்று தொடர ஆரம்பிப்பதற்குள், அவர் எதோ சப்பைக்க்கட்டுக் கட்டுவதாக எண்ணிய ரிச்சர்ட் "அதெப்படி முடியும்?" என்று இடைமறித்தார்.

சூர்யா விவரித்தார். "அந்தப் படங்களில இருக்கறது ஒரே தோட்டம் இல்லைன்னு ரொம்ப நல்லாவே புலப்படுது. செடிகள், நீச்சல் குளம், மூலையில தென்படற வீட்டுப் பகுதிகள் எல்லாமே ரொம்ப வித்தியாசமா இருக்கு. நீங்க வெவ்வேற தோட்டங்கள் எப்படி இருக்கும்னு பாக்க உங்க தோட்டத்தை மாத்திக் கட்டற கான்ட்ராக்டர் குடுத்ததா இருக்கும்னு யூகிச்சேன்." என்றார்.

ரிச்சர்டின் வியப்பு வளர்ந்தது. "ஆமாம், இப்பப் பாத்தா அது புரியுது. ஆனா அந்த வேலை தொடங்கியிருக்கோம், நடந்துக் கிட்டிருக்குன்னு எப்படி...?" என்று தயங்கினார்.

கிரண் இடை புகுந்தான். "அது ரொம்ப சிம்பிள்! இங்க பாருங்க அந்த புகைப் படங்களோட சமீபத்துல பணம் குடுத்ததுக் கான ரசீது இருக்கு. அதுல உங்க ஒப்பந்த நிறுவனத்தின் பேரு, செஞ்ச வேலை எல்லாம் கூட இருக்கு. சரிதானே சூர்யா, நானும் நீங்க சொன்னவுடனே இப்பத்தான் கவனிச்சேன்" என்றான்.

சூர்யா வாய்விட்டு சிரித்தார். "சபாஷ் கிரண்! நல்லாத் தேறிக்கிட்டு வரே!"

நாகுவும் கோபத்தைப் பறக்க விட்டுவிட்டுச் சிரித்தார். "சபாஷ்னு சொல்ல வேண்டியது தான்! சூர்யா, முதல்ல உனக்குத்தான் சொல்லணும். சரி, நான் சிவகாசி வீடியோ பார்த்தது..."

ஷாலினியும் சேர்ந்து கொண்டாள். "அதுவும் ரொம்ப சிம்பிள்தான் நாகு. அதுக்கான தடயம் உங்ககிட்டவே இருக்கு. உங்களுக்கே பயிற்சி கொடுக்கலாம். என்னன்னு சொல்லுங்க பார்ப்போம்" என்றாள்.

நாகு தன்னையே ஒருமுறை நன்கு கவனித்து விட்டு கலகலவென சிரித்தார். "ஓ! அதானா? இதோ சிவகாசின்னு தலைப்போட டிவிடி பெட்டி என் கோட் பாக்கெட்லேந்து தலைநீட்டிக்கிட்டிருக்கு. நான் இன்னிக்கு வீட்டுக்குப் போகறச்சே திருப்பிக் குடுக்கணும்னு கொண்டு வந்தேன். நான் தாறுமாறாப் பேசிட்டேன். ஸாரி!" என்றார்.

கிரண் முகம் சுளித்தான். "பாருங்க. இதுக்குத்தான் மந்திரவாதிங்க தான் எப்படி ஒரு வித்தையை செய்யறோங்கற ரகசியத் தைப் பாக்கறவங்களுக்கு சொல்றதில்லை. சொல்லிட்டா, அப்புறம் ரொம்ப சுளுவாத் தோணிடுது, அய்யே அவ்வளவு தானானு டறாங்க! அந்த மாதிரிக் கூர்மையா கவனிச்சு யூகிக்கறத்துக்கு ஒரு திறமை வேணும் இல்லையா, அது எல்லாருக்கும் வந்துடற தில்லை..."

மேலும் சூட்டோடு எதோ சொல்லிக் கொண்டே போக வாய் திறந்த கிரணைச் சூர்யா தடுத்தார். "அதுனால என்ன பரவாயில்லை கிரண். நான் காஷ¤வலா எதோ சொல்லப்போக, அது எங்கயோ போயிடுச்சு. அவங்களுக்கு என் மேல இருந்த சந்தேகம் தீர்ந்தாச் சரி. அதுவே போதும். நாகு, இப்ப உங்க பிரச்சனை என்னன்னு கொஞ்சம் சொன்னீங்கனா அதைத் தீர்க்கறதுல கவனத்தைத் திருப்பலாம்."

நாகு தீவிரமாகத் தலையாட்டி ஆமோதித் தார். "சரி சூர்யா. அதைச் சொல்றத்துக் குத்தான் நான் உங்களையெல்லாம் ரிச்சர்ட் கிட்ட அழைச்சிட்டு வந்தேன். அதை விட்டுட்டு எங்கயோ திசை திரும்பிட்டோம். நாங்க மெய்நிகர் தொழில்நுட்பத்தை விளையாட்டுக்கு மட்டுமில்லாம பல துறைகளிலும் பயன்படுத்தி, அதுக்குத் தேவையான சாதனங்களை உருவாக்க றோம்னு ஏற்கனவே சொன்னேன் இல்லையா? அந்த மாதிரியான சாதனங்கள் முதல்ல கொஞ்ச நாள் ரொம்ப நல்லா வேலை செஞ்சுக்கிட்டிருந்தது. ஆனா திடீர்னு கொஞ்ச நாளா என்னமோ சரிப்படலை, என்னென்னமோ தப்பாப் போக ஆரம்பிச்சிடுச்சு. அதை நாங்க எங்க தொழில் நுட்ப வழியிலயே ரொம்ப நுணுக்கமா ஆராய்ஞ்சு பாத்துட்டோம். ஆனா எதுனால கெட்டுப் போகுதுன்னு தெரியலை. அதுக்குத்தான் வெளியாள் யாரையாவது கூப்பிட்டா ஒருவேளை எதாவது புலப்படுமோன்னு நான் தான் போர்ட் ஆ·ப் டிரெக்டர்ஸ¤க்கு சிபாரிசு செஞ்சேன்."

சூர்யா சற்று யோசித்து விட்டு, "சரி, ஆனா உங்க தொழில்நுட்பம் பத்தி நல்லாத் தெரிஞ்ச ஆராய்ச்சியாளர்கள் யாரையாவது கூப்பிட்டுப் பரிசீலிக்கச் சொல்லியிருக் கலாமே? என்னை ஏன்..." என்று கேள்விக் குறியுடன் இழுத்தார்.

ரிச்சர்ட் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டு விட்டு விளக்கினார். "நாங்க அப்படிப் பட்ட சில மெய்நிகர்த் துறை ஆராய்ச்சி நிபுணர் களைக் கூப்பிட்டு விசாரிக்கத்தான் சொன்னோம்.

ஆனா நாங்க இங்க செய்யற ஆராய்ச்சி அவங்களுக்குத் தெரிஞ்சதை விட இன்னும் ரொம்ப முன்னேறியது. அவங்களுக்கு நாங்க அதைப்பத்தி சொல்லிக் குடுத்ததுதான் மிச்சமே ஒழிய ஒரு பிரயோஜனமும் இல்லை. அவங்களால ஒரு தவறும் கண்டுபிடிக்க முடியலை. எதோ இதுவா இருக்கலாம், அதுவா இருக்கலாம்னு வெட்டுச் சவடாலா சொல்லிட்டுப் போயிட்டாங்க. அதுக்கப் புறந்தான் நாகு உங்களைக் கூப்பிட்டிருக்கார்."

சூர்யாவின் சந்தேகம் இன்னும் பெரிதா யிற்று. "அந்த மாதிரி நிபுணர்களே ஒண்ணும் கண்டு பிடிக்க முடியலைன்னா நாங்க பிரச்சனையைத் தீர்க்க முடியும்னு எப்படி நினைச்சீங்க?" என்றார்.

நாகு மேலும் விளக்கினார். "நான்தான், கொஞ்சம் தொழில்நுட்ப அறிவோட, ஆனா எங்க துறையைப் பத்தி ஒண்ணும் தெரியாம இருக்கற யாராவது வந்து ஒரு வேற விதமான புதுக் கோணத்தில குடாய்ஞ்சு பாத்தா ஒரு வேளை எதாவது புது மாதிரி விவரங்கள் தெரிய வரலாம்னு சிபாரிசு செஞ்சேன். ரிச்சர்டும், போர்டும் வேற வழிதெரியாமத்தான் ஒத்துக்கிட்டிருக்காங்க. சிபாரிசு செஞ்ச என் மானத்தைக் காப்பாத்தறதும், எங்க நிறுவனத்தைக் காப்பாத்தறதும் உன் கையிலதான் இப்ப இருக்கு சூர்யா!" என்று நாகு உணர்ச்சி வசத்தால் நாத் தழுதழுக்க சூர்யாவின் கையைப் பிடித்துக் கொண்டு கெஞ்சினார்.

ரிச்சர்டும் தன் பங்குக்கு, "ஆமாம் சூர்யா, நான் கூட நாகு சொன்னமாதிரி நம்பிக்கை இல்லாமத்தான் ஒத்துக்கிட்டேன். ஆனா இப்ப சில நொடிகளில நீங்க கூர்ந்த கவனத்தால பல விஷயங்களை யூகிச்சதைப் பாத்ததும் எனக்கு நம்பிக்கை துளிர் விட்டிருக்கு. அதைப் பொய்யாக்காம எங்க பிரச்சனைக்கு எதாவது தீர்வு கண்டு பிடியுங்க" என்றார்.

நாகுவின் உணர்ச்சிப் பிடியிலிருந்து கையை விடுவித்துக் கொண்ட சூர்யா, "நாகு, ரிச்சர்ட், கவலைப் படாதீங்க. என்னால ஆன அளவுக்கு முயற்சி செய்யறேன். இப்ப உங்க பிரச்சனை பத்தி இன்னும் விவரிக் கறத்துக்கு முன்னால அதுக்கு அடிப்படை யான தொழில்நுட்பத்தைப் பத்தி கொஞ்சம் விவரமாச் சொல்லுங்க. பிரச்சனையை ஆராயறத்துக்கு அது ரொம்ப உதவியா இருக்கும்" என்றார்.

நாகுவும் ரிச்சர்டும் தங்கள் மெய்நிகர் தொழில்நுட்பத்தை விவரிக்க ஆரம்பித்தனர். அதன் நுணுக்கங்கள் சூர்யா, கிரண், ஷாலினி மூவரையும் அளவுகடந்த வியப்பில் ஆழ்த்தின.

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்

© TamilOnline.com