இளம் சாதனையாளர்கள்
அமெரிக்காவின் மிகப் பிரபல அறிவுப் போட்டிகளான ஸ்பெல்லிங் பீ, ஜாகரஃபி பீ ஆகியவற்றில் ஏராளமான இந்திய அமெரிக்கச் சிறுவர்கள் பங்கேற்று இறுதிவரை சென்றிருக்கிறார்கள். அவர்களில் குறிப்பிடத் தக்க உயரத்தை எட்டிய சில சாதனையாளர்களைத் ‘தென்றல்' இங்கே அறிமுகப்படுத்துவதில் பெருமை அடைகிறது.

காவ்யா சிவஷங்கர் ‘ஸ்பெல்லிங் பீ' முதல் பரிசு

அமெரிக்காவின் தேசீய ஸ்பெல்லிங் பீ போட்டி E.W. ஸ்கிரிப்ஸ் நிறுவனத்தினரால் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அமெரிக்கா முழுவதிலுமிருந்து 16 வயதுக்குட்பட்ட 8ஆம் வகுப்புவரை படிக்கும் மாணவ மாணவிகளின் ஆங்கிலச் சொல் உச்சரிப்பு, பயன்பாடு போன்றவற்றில் திறனை ஊக்குவிப்பதற்காக இந்தப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. ஸ்கிரிப்ஸ் உச்சரிப்புத் தேனீ போட்டி மிகக் கடினமானது. பள்ளியளவில் தொடங்கி, மாவட்டம், மாநிலம் என்ற படிகளைத் தாண்டி, இறுதியாக வாஷிங்டன் டி.சி.யில் நடைபெறும் தேசீயப் போட்டியில் கலந்து கொண்டு இறுதிச் சுற்றுக்கு வரவேண்டும். இந்த ஆண்டு இறுதிச் சுற்றில் பங்கேற்ற 11 போட்டியாளர்களில் 7 பேர் இந்திய வம்சாவளி மாணவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. இதில் வெற்றி பெற்று 2009ம் ஆண்டின் ஸ்பெல்லிங் தேனீ கோப்பையை வென்றிருப்பவர் காவ்யா சிவஷங்கர் என்ற 8வது வகுப்பு மாணவி.

காவ்யா தென்றல் வாசகர்களுக்குப் புதியவரல்லர். 2007ம் ஆண்டு இறுதிச் சுற்றில் 8வது இடத்தைப் பிடித்த பொழுது தென்றலில் அவரது பேட்டி இடம் பெற்றது. 2008லும் இறுதிச் சுற்றில் 4வது இடத்தைப் பிடித்திருந்த காவ்யா இந்த ஆண்டு தனது லட்சியக் கனவான ஸ்பெல்லிங் பீ கோப்பையை அடைந்தே விட்டார்.

இறுதிச் சுற்றில் மிகக் கடினமான laodicean என்ற சொல்லைச் சரியாக உச்சரித்து முதல் பரிசைக் கைப்பற்றினார். அமெரிக்கத் துணை அதிபரின் மனைவி ஜில் பைடன் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்து வெற்றி பெற்றவர்களை வாழ்த்தினார்.

##Caption## இந்த ஆண்டு இறுதிச் சுற்றில் காவ்யாவைத் தவிர இன்னும் 6 இந்திய அமெரிக்க மாணவர்கள் கலந்து கொண்டனர். கோப்பையை வென்ற காவ்யா ஒரே நாளில் அமெரிக்கா முழுதும் பிரபலமாகி விட்டார். பல நாட்களுக்கு அமெரிக்காவின் அனைத்து முக்கிய டி.வி.க்களிலும், பத்திரிகைகளிலும் தோன்றிப் பேட்டி அளித்தார். கன்ஸாஸ் மாநில கவர்னர், காங்கிரஸ் மெம்பர்கள், செனட்டர்கள் அனைவரும் காவ்யாவை வரவேற்று கௌரவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அமெரிக்க இந்தியர்கள் இது போன்ற தேசீய முக்கியத்துவம் வாய்ந்த பெருமைக்குரிய போட்டிகளில் அதிகம் கலந்து கொள்வதும் வெற்றிபெறுவதும் இந்தியக் கல்விப் பாரம்பரியத்தின் மேன்மையை உலகுக்கு உணர்த்துகிறது. 13 வயதாகும் காவ்யா சிவஷங்கர் கன்ஸாஸ் மாநிலத்தில் உள்ள ஓலாதே நகரின் ரீஜென்ஸி எலிமெண்டரி பள்ளியில் படிக்கிறார்.

காவ்யா கிண்டர் கார்டன் படிக்கும் பொழுதே அவருக்குச் சொல்லித் தரப்பட்ட ஃபோனோகிராம் முறையைப் புரிந்து கொண்டு வார்த்தைகளை ஒழுங்காக உச்சரிக்க ஆரம்பித்திருக்கிறார். அவரது திறமையை இனம் கண்ட பெற்றோர்கள் அப்போதே அவருக்கு உற்சாகமும் நம்பிக்கையும் அளித்துப் பழக்க ஆரம்பித்துள்ளனர். இரண்டாம் வகுப்பில் முதன்முறையாக இந்திய மாணவர்களுக்காக நடத்தப்படும் நார்த்சவுத் ஃபவுண்டேஷன் போட்டியில் வெற்றி பெற்றிருக்கிறார். பின்னர் 4ம் வகுப்பில் தேசிய அளவிலான போட்டியிலும் 5ம் வகுப்பில் மாவட்ட அளவிலான போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளார். தேசீயப் போட்டியில் கலந்து கொண்ட பொழுது மிகவும் இளவயதிலேயே இறுதிச் சுற்றைத் தொட்ட சாதனையாளராக விளங்கியிருக்கிறார்.

காவ்யாவின் தந்தை ஷிவசங்கர் அவருக்குப் பயிற்சியாளரும் கூட. ‘ஸ்பெல்பவுண்ட்' போன்ற திரைப் படங்களும் தனக்கு உத்வேகத்தை அளித்ததாகக் குறிப்பிடுகிறார் காவ்யா. தினமும் குறைந்தது இரண்டு மணி நேரமாவது இதற்கென ஒதுக்குவாராம். பெற்றோர் புதுப்புது வார்த்தைகளை உச்சரிக்கச் சொல்லிக் கேட்டுக் கொண்டேயிருப்பார்களாம். காவ்யா எல்லா வார்த்தைகளையும் மனப்பாடம் செய்வதில்லை. பெரும்பாலான வார்த்தைகளின் வேர்ச்சொல்லை அறிந்து கொள்வதன் மூலம் அதன் அடிப்படைக் கட்டமைப்பைப் புரிந்து கொண்டு உச்சரிப்பதையே வழக்கமாகக் கொண்டுள்ளார். "ஒரு சில கடினமான வார்த்தைகளை மட்டும் மனனம் செய்வதுண்டு" என்கிறார்.

ஒவ்வொரு வார்த்தைக்கும் வேர்ச்சொல் என்ன, அது எந்த மொழியிலிருந்து வந்தது, பொருள் என்ன என்பது போன்ற அனைத்து விபரங்களையும் சேர்த்துக் கற்றால்தான் சரியான உச்சரிப்பைச் சொல்ல முடியும் என்பதைத் தன் வெற்றியின் ரகசியமாக காவ்யா குறிப்பிடுகிறார். இந்தப் போட்டிக்காக வெப்ஸ்டர் அகராதியின் எலக்ட்ரானிக் வெர்ஷனை முழுதாகக் காவ்யா படித்துள்ளார்.

காவ்யா மருத்துவம் படித்து நரம்பியல் நிபுணராக விரும்புகிறார். மருத்துவத் துறையில் ஏராளமான சொற்கள் லத்தீன் போன்ற மொழிகளில் மூலம் உள்ளவை என்பதால் அவற்றைக் கற்க வேண்டிச் செய்த போட்டித் தயாரிப்பு பெரிதும் உதவும் என்கிறார். படிப்பிலும் முதல் மாணவியாக விளங்கும் காவ்யா, வயலின், பரதநாட்டியம் ஆகியவற்றைக் கற்று வருகிறார். நேரம் கிடைக்கும் பொழுது பைக்கிங், நீச்சல், ஐஸ் ஸ்கேட்டிங் போன்ற விளையாட்டுக்களில் ஈடுபடுவதில் அவருக்கு விருப்பம்.

*****


அர்ஜுன் கந்தசாமி 'ஜாகரஃபி பீ' இரண்டாம் இடம்

2009 ஆண்டுக்கான ‘நேஷனல் ஜாகரஃபிக் பீ' போட்டியில் தேசீய அளவில் இரண்டாவது இடத்தைப் பெற்றிருக்கிறார் அர்ஜுன் கந்தசாமி என்ற இந்தியத் தமிழ் வம்சாவளி அமெரிக்க மாணவர். முதல் பரிசு பெற்ற மாணவருடன் கடும் போட்டியிட்டு, சமநிலையில் இருந்து பல சுற்றுகள் முடிந்த நிலையில் ஒரு டை-பிரேக்கர் கேள்வியில் முதல் பரிசைத் தவறவிட்டிருக்கிறார் அர்ஜுன் கந்தசாமி. போட்டியின் பொழுது கேள்வியின் மீது தனது முழுக்கவனத்தையும் செலுத்துவதன் மூலம் பதட்டத்தைத் தவிர்த்தாகக் கூறுகிறார். இரண்டாம் இடம் பெற்ற அர்ஜுனுக்கு 15000 அமெரிக்க டாலர்கள் கல்லூரிக் கல்வி உதவியாக வழங்கப்படுகிறது.

நேஷனல் ஜாகரஃபிக் சொசைட்டி அமெரிக்க மாணவர்களிடையே புவியியலில் ஆர்வத்தைத் தூண்டுமுகமாக தேசீய அளவில் ஆண்டுதோறும் இந்தப் போட்டியை நடத்தி வருகிறது. இது 8வது வகுப்புவரை படிக்கும் மாணவர்களுக்கானது. பள்ளி, மாநிலம் என்ற நிலைகளைத் தாண்டி ஒரு மாணவர் தேசீய அளவுப் போட்டிக்கு வரவேண்டும். அங்கும் இறுதிக்கு முந்தைய சுற்றில் 50 பேர்களில் 11 பேரை மட்டும் இறுதிச் சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கின்றனர். அமெரிக்கா முழுவதிலும் இருந்து போட்டியிடும் பல லட்சம் மாணவர்களில் ஒருவர் மட்டுமே இந்தக் கோப்பையை வெல்கிறார். இந்தக் கோப்பையை வெல்லும் மாணவர் அமெரிக்காவின் இளம் மேதையாகக் கருதப்படுகிறார். இந்தப் போட்டியின் இறுதிச் சுற்று வரையிலும் பல இந்திய மாணவர்கள் வந்துள்ளனர்.

உலகின் ஒவ்வொரு நாடு குறித்தும் அனைத்துத் தகவல்களையும் இந்தப் போட்டியில் பங்கு கொள்பவர்கள் தெளிவாக அறிந்திருக்க வேண்டும். கூரிய நினைவுத் திறன், சிக்கலான நில அமைப்புகளைக் கிரகித்துக் கொள்ளும் சக்தி ஆகியவை இந்தப் போட்டியாளர்களுக்கு அடிப்படைத் தேவை. அர்ஜுன் அமெரிக்காவின் ஓரிகான் மாநிலத்தின், பெவர்ட்டன் நகரில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். அர்ஜுனின் தந்தை இன்ட்டெல் நிறுவனத்தில் வேலை செய்கிறார். உலகின் பல்வேறு நாடுகளுக்கும் அவர் பணி நிமித்தமாகச் சென்று வரும்பொழுது அந்த நாட்டைப் பற்றிய புத்தகங்கள், பொருட்கள் ஆகியவற்றைக் கொண்டு வந்து கொடுத்து உலக நாடுகள் பற்றிய ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறார். அந்த நாடுகளைப் பற்றி அறிந்துகொள்வதில் 2 வயதில் இருந்தே ஆர்வம் காட்டியிருக்கிறார் அர்ஜுன்.

பின்னர் அமெரிக்கப் பள்ளியில் இயங்கும் பாஸ்போர்ட் கிளப்பில் உறுப்பினராகி இருக்கிறார் அர்ஜுன். இது சிறுவர்களிடம் உலக நாடுகள் பற்றிய ஆர்வத்தைத் தூண்டும் அமைப்பாகும். எட்டாவது வயதில் இருந்தே ஜாகரஃபி போட்டிகளுக்குத் தயார் செய்ய ஆரம்பித்து இன்றைக்கு வெற்றி பெற்றுள்ளார் அர்ஜுன். பெரும்பாலும் பெற்றோர்கள், ஆசிரியர்களின் தூண்டுதல் ஏதுமின்றி, தானாகவே இந்தப் போட்டியில் கலந்து கொள்ளத் தயார் செய்து வந்துள்ளார். நேஷனல் ஜாகரஃபி இணையதளத்தில் இந்தப் போட்டியில் கலந்து கொள்பவர்களுக்குப் பல உதவிகளும் அளிக்கப்படுகின்றன. இறுதிச் சுற்றில் கூகுள் எர்த்தைப் பயன்படுத்திச் சில கேள்விகள் இருந்துள்ளன. நேஷனல் ஜாகரஃபி தயாரித்துள்ள உலக அட்லஸ் 8வது எடிஷன் அட்லஸைத் தயாரிப்புக்குப் பயன்படுத்தியதாகவும் அர்ஜுன் கூறுகிறார்.

அமெரிக்க, உலக அரசியலை உன்னிப்பாக கவனித்து வந்திருக்கிறார் அர்ஜுன். படிப்பிலும் முதல் மாணவர். தவிர, கூடைப்பந்து, டென்னிஸ், பாய்ஸ்கவுட் போன்றவற்றிலும் ஈடுபாடு உண்டு. மாநில அளவில் அமெரிக்க எரிசக்தித் துறை நடத்தும் சயன்ஸ் பவுல் போட்டியிலும் முதல் மாணவராக வந்துள்ளார். விஞ்ஞானியாக விரும்புகிறார் அர்ஜுன்.

தென்றலின் இளம் வாசகர்கள் இதுபோன்ற போட்டிகளில் கலந்துகொண்டு உலக அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று அர்ஜுன் விரும்புகிறார். "போட்டியில் ஜெயிப்பதை விடவும் அதற்குத் தயார் செய்யும் பொழுது பெறப்படும் அறிவும் தன்னம்பிக்கையுமே முக்கியம்" என்கிறார் அர்ஜுன்.

*****


ரம்யா ஆரோப்ரேம் 'ஸ்பெல்லிங் பீ' ஐந்தாவது இடம்

EW ஸ்கிரிப்ஸ் நிறுவனத்தின் ‘ஸ்பெல்லிங் பீ' போட்டியில் தேசீய அளவில் ஐந்தாவது இடத்தை அடைந்து, ஒரு வார்த்தையில் கோப்பையைத் தவற விட்டிருக்கிறார் ரம்யா ஆரோப்ரேம். இவர் கலிஃபோர்னியாவின் சான் ஹோசே பகுதியைச் சேர்ந்த தமிழ்ச் சிறுமி. ரம்யா ஆங்கிலம், தமிழ், பிரெஞ்சு மொழிகளையும் நன்கு அறிந்தவர். 13 வயதான ரம்யா, கூப்பர்டினோ மிடில் ஸ்கூலில் 8ம் வகுப்புப் படிப்பவர்.

அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தாலும் தமிழை நன்கு கற்றுத் தேர்ந்து கூப்பர்டினோ தமிழ்ப் பள்ளியில் ஆசிரியையாக இருக்கிறார். தமிழ் மீதான ஆர்வத்தில் தமிழில் சிறுகதைகளையும் எழுத முயற்சிக்கிறார். ரம்யாவின் தாயார் நாகலட்சுமி கலிஃபோர்னியா தமிழ் அகடமியின் கூப்பர்டினோ பள்ளியின் உதவித் தலைமையாசிரியர்.

##Caption## மூன்று வயதில் மழலையர் பள்ளியில் சேர்த்த பொழுது அந்தப் பள்ளியில் தன்னுடன் படித்த 20 குழந்தைகளின் பெயர்களையும் முழுமையாகத் தவறில்லாமல் ஆங்கிலத்தில் எழுதி ஆசிரியர்களையும் பெற்றோரையும் ஆனந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார் ரம்யா. மேலும் அனைவரின் வரிசை எண்கள் போன்ற அனைத்துத் தகவல்களையும் நினைவிலிருந்து சொல்லக் கூடிய அசாத்திய நினைவாற்றல் சிறுவயது முதலே ரம்யாவுக்கு அமையப் பெற்றிருக்கிறது. முதல் வகுப்பு முதலேயே ரம்யா மிகவும் கடினமான சொற்களைச் சரியாக உச்சரிப்பதில் திறன் படைத்தவராக இருந்திருக்கிறார். 3ம் வகுப்புப் படிக்கும்பொழுது நார்த்சவுத் பவுண்டேஷன் நடத்திவரும் இந்தியச் சிறாருக்கான ஸ்பெல்லிங் போட்டிகளில் முதல் இடத்தைப் பெற்றிருக்கிறார். ஆரம்பமுதலே கலிஃபோர்னியா விரிகுடாப்பகுதிப் பள்ளிகள் அளவிலும், வட்டார அளவிலும் ஸ்பெல்லிங் போட்டிகளில் முதல் மாணவியாகத் திகழ்ந்து வந்திருக்கிறார்.

மிகுந்த சவால்கள் நிறைந்த கலிஃபோர்னியா மாநில இறுதிச் சுற்றில் வென்று தேசீய அளவிலான முன்னிறுதிச் சுற்றில் பங்கேற்றிருக்கிறார். வாஷிங்டன் டி.சி.யில் இறுதிச் சுற்றில் ரம்யா சற்றும் பதற்றமின்றி தனக்கு அளிக்கப்பட்ட வார்த்தைகளைச் சரியாகச் சொல்லி ஐந்தாவது இடம்வரை முன்னேறியிருக்கிறார். இங்கே ரம்யா தவற விட்ட வார்த்தை அமரிவில் (amarevile). ஸ்பெல்லிங் திறமை மட்டுமல்லாமல் வேர்ச்சொல்களைக் கண்டறியும் எட்டிமாலஜி துறையிலும் மிகுந்த ஆர்வமும் திறமையும் உள்ளவராக விளங்குகிறார் ரம்யா. பல்வேறு மொழிகளில் நிலவும் வார்த்தைகளுக்குக்கிடையேயான ஒற்றுமை, உறவுகளை அடையாளம் கண்டு வகைப்படுத்துவது தனக்கு விருப்பமான பொழுதுபோக்கு என்கிறார்.

"மார்க் ட்வைன், ஜே.கே. ரவுலிங் ஆகியோரின் எழுத்து எனக்குப் பிடிக்கும்" என்கிற ரம்யா, பியானோ வாசிப்பதிலும் திறமைசாலி. தமிழில் சிறுகதை ஒன்றை எழுதியிருக்கிறார். தமிழில் நிறைய எழுதும் ஆர்வமுள்ள ரம்யா, பத்திரிகையாளராக விரும்புகிறார். பள்ளி மலருக்கு ஆசிரியையாகச் செயல்பட்டிருக்கிறார்.

தென்றலின் இளம் வாசகர்களுக்கு ரம்யா அளிக்கும் செய்தி "எந்தத் தோல்விக்கும் மனம் தளரக் கூடாது" என்பதுதான்.

*****


ச. திருமலை ராஜன்

© TamilOnline.com