முடியுமா? முடியாதா?
தற்போது ஒரு கிலோ அரிசி ரூ. 3.50 என விற்பனை செய்யப்படுகிறது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ஒரு கிலோ அரிசி இரண்டு ரூபாய்க்குத் தரப்படுவது உறுதி. இது முடியுமா முடியாதா என்று பலர் கேள்வி எழுப்புகின்றனர். நிச்சயமாகத் தி.மு.க.வால் முடியும். முடியுமா என்று கேள்வி எழுப்பு வோரும், அரிசியை வாங்கித் துண்டில் முடிந்து கொண்டு போகலாம்.

கருணாநிதி, தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில்...

தமிழகத்தில் ஏழை மக்களின் துயர் தீர்க்கும் வகையில், ரேஷனில் தலா 10 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளது அனைவரையும் கவரும். இதனால் எதிர் அணியினரின் பிரசாரம் முறியடிக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் அ.தி.மு.க கூட்டணி தேர்தலில் அமோக வெற்றி பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைகோ, ம.தி.மு.க. செயலர், தேர்தல் பிரசாரத்தில்...

தமிழ்நாட்டின் தலைமைத் தேர்தல் ஆணையர் நரேஷ்குப்தா நேர்மையானவர்; ஊக்கமாகச் செயல்படுகிறார். ஏதேனும் முறைகேடு குறித்து எங்களுக்குப் புகார் கிடைத்து அதை நாங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதற்குள் அவர் விசாரணைக்கே உத்தரவிட்டு அடுத்த நடவடிக்கைகளை எடுத்துவிடுகிறார்; அவரை அப்பதவியிலிருந்து மாற்ற வேண்டிய அவசியமே இல்லை.

தமிழ்நாட்டில் தி.மு.க., அ.தி.மு.க. இரண்டுமே பள்ளிக் குழந்தைகளைப் போல அற்பமான குற்றச்சாட்டுகளைப் பரஸ்பரம் கூறிக்கொள்கின்றன.

தேர்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரி, பத்திரிகை ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கையில்...

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடிப் பிரி வினருக்கு தனியார் தகவல் தொழில்நுட்பத் துறைகளில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது. இவ்வாறு இடஒதுக்கீடு செய்வது அப் பிரிவினருக்கு எந்த வகையிலும் உதவியாக இருக்காது.

இப்பிரிவினரின் அடிப்படைப் பிரச்சினை கள் முதலில் தீர்க்கப்பட வேண்டும். குறிப்பாக, இப்பிரிவினர் கல்வி கற்க ஊக்கம் அளிக்க வேண்டும். அக்கல்வியின் மூலம் அவர்கள் போட்டியைச் சமாளிக்கும் ஆற்றலைக் கொடுக்க வேண்டும். இத்தகைய நடவடிக்கைகளே அவர்களது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும்.

என்.ஆர். நாராயணமூர்த்தி, இன்·போஸிஸ் நிறுவனர், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்...

அடிக்கடி அணியில் வீரர்களை மாற்றியதே இந்திய அணியின் தோல்விக்குக் காரண மாகும். ஒரு போட்டியில் சேர்க்கப்படும் வீரர், அடுத்த ஆட்டத்தில் எந்தக் காரணமும் கூறாமல் நீக்கப்படுவார். பயிற்சியாளராக இருந்தபோது முழு அர்ப்பணிப்புடன், அணியின் முன்னேற்றத்துக்காகப் பாடு பட்டேன். பல பிரச்சனைகளுக்கு இடை யிலும் ஓரளவு சிறப்பாகவே செயல்பட்டோம்.

ராஜிந்தர்சிங், இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் பயிற்சியாளர், ஒரு பேட்டியில்...

முற்போக்குச் சிந்தனை இருக்க வேண்டும் என்றால் அதில் குடும்ப அரசியல் நுழையக் கூடாது. எனது முடிவு ஒரு நல்ல முடிவாக, எனது வாழ்க்கையில் ஒரு புதிய பாடமாக அமைந்துள்ளது.

நடிகர் சரத்குமார் தி.மு.க.விலிருந்து விலகியபின் பேட்டி ஒன்றில்...

நடிகர் விஜயகாந்த் கொடுக்கும் சில வாக்குறுதிகளைப் பார்த்தால் மாநில அரசு என்றால் என்ன, மத்திய அரசு என்றால் என்ன என்றே அவருக்குத் தெரியாது என்பது புரிகிறது. சினிமா உலகத்தைச் சேர்ந்தவர்களை அரசியலில் அனுமதிக்கக் கூடாது.

சுப்ரமணியம் சுவாமி ஜனதா கட்சித் தலைவர், பேட்டி ஒன்றில்...

கேடிஸ்ரீ

© TamilOnline.com