ஹூஸ்டன் பாரதி கலைமன்றம் தமிழ்ப் புத்தாண்டு விழா
ஏப்ரல் 11, 2009 அன்று ஹூஸ்டன் மீனாட்சி கோயில் அரங்கில் ‘நவரசம்' இசை நிகழ்ச்சியை பாரதி கலைமன்றமும் திருக்கோவிலும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். இந்திய இசையில் மிக்க ஆர்வம் உள்ள ராகவன், கணேஷ் ஆகிய இளைஞர்கள் நடத்தும் இசைக்குழு இது. பக்தி, காதல், நட்பு, சோகம், ஊக்கம், பாசம், கோபம், சந்தோஷம், காதல் என்ற ஒன்பது ரசங்களில், இருபதுக்கும் மேற்ப்பட்ட சிறந்த தமிழ்த் திரையிசைப் பாடல்களைச் சுவையாக வழங்கினர். மிகுந்த ரசனையோடு தேர்வு செய்யப்பட்டிருந்த பாடல்களைச் சரியான கலவையில் வழங்கியது ரசிக்க வைத்தது. அந்தக்கால ‘வீரத் திருமகன்' படத்திலிருந்து, நேற்று வந்த ‘வில்லு' வரை பாடல்கள் வழங்கி, அறுபது ஆண்டுகள் முன்னும், பின்னும் பயணம் செய்த அனுபவத்தை ‘ராகாஸ்' அளித்தனர்.

அடித்து குமுக்கிய ‘வீரபாண்டிக் கோட்டையிலே', அமைதியாக வருடிய ‘ஸ்நேகிதனே ஸ்நேகிதனே', ‘மார்கழி திங்கள் அல்லவா', கலக்கல் ‘ஒ ஓ சனம் ‘, பல வாத்தியப் பின்னணியோடு ‘ஊ ல ல லா', வெறும் கீ போர்டு இசையோடு ‘அம்மாவும் நீயே அப்பாவும் நீயே' எனச் சரிவிகிதக் கலவையில், அனைவரும் ரசிக்கும் வண்ணம் தொகுத்தளித்தது நேர்த்தி. சாம், விவேக்; ஸ்ரீகாந்த், தருண்; முருகன்; ஸ்ரீனிவாஸ்; புல்லாங்குழல், ரீனா; ஹர்ஷிணி ஆகியோர் இசைக்கருவிகள் வாசிக்க, பாடல்களைப் பாடிய ஸ்ரீலக்ஷ்மி, ஷாலினி, ஜனா, ஷீலா, ஹர்ஷிணி, ரீனா, கார்த்திகா (சினிமாவில் பாடப் போறீங்களாமே!), ராகவன், கணேஷ் ஆகியோர் மகிழ்வித்தனர். நிகழ்ச்சியைத் தொகுத்தளித்த சுரபி மற்றும் ஸ்ரீனிவாசன் சுவையாகச் செய்தனர். அதேபோல் நிகழ்ச்சியின் நடுவே ‘துக்கடா' போல குமரனின் ‘மிமிக்ரி' ஏற்பாடு செய்திருந்தது நல்ல முயற்சி. மேடைக்கு முன் ஒரு சிறிய ‘ஆடல் மேடை' போட்டிருந்தது நல்ல முன்னேற்பாடு. பல குழந்தைகளை பாடலுக்கு ஏற்ப ஆட வகை செய்ததோடு அரங்கை உற்சாகத்தில் தள்ள ஏதுவானது.

மேலும் வித்தியாசமான குரல்கள் இக்குழுவினருக்கு உடனடித் தேவை. ஆண் குரல்களில் டி.ம்.எஸ்., யேசுதாஸ் தேவை. திரையிசையல்லாத சில நல்ல பாடல்களையும் வழங்கலாம். பாரதியின் ‘குயில் பாட்டு', பாரதிதாசனின் ‘குடும்ப விளக்கு' என் பரிந்துரை. ரோஜா மலரே பாடலில், ‘ஆசைக்கிளியே' என்பதை ‘ஆஷைக்கிளியே' என்று உச்சரிப்பது போன்ற நாகரீகப் பிழைகள் கூடாது.

நிகழ்ச்சியை ஹூஸ்டன் ரசிகர்கள் வழக்கம் போல் நல்ல வகையில் ரசித்து வரவேற்றனர். ‘ஜெய் ஹோ'வோடு நிகழ்ச்சி முடிந்ததாக அறிவித்தாலும், ரசிகர்கள் கலைந்து செல்ல மனமின்றி, மேலும் ‘எங்கள் விருப்பம்' கேட்டதும், ‘ராகாஸ்' ஒரு ராகமாலிகை வழங்கியதும் சிறந்த முத்தாய்ப்பு. ‘ராகாஸ்' குழுவினரைத் தங்கள் ஊர்களில் பாட அழைக்கத் தொடர்புக்கு கணேஷ்: nrg91@yahoo.com
பாரதி

© TamilOnline.com