சந்தன மணம் லேசாக வீச, பட்டுப்புடவை சலசலக்க மங்கையர் நடமாட, நாதஸ்வர இசை மேடையிலிருந்து தவழ்ந்து வர ஒரு கொண்டாட்டக்களை அங்கே நிலவியது. மஞ்சள் குங்குமம் கல்கண்டு கொடுத்து வந்தவர்களை வரவேற்றனர். அத்துடன் அழகாகத் தொடுக்கப்பட்ட மல்லிகைச் சரங்களை வந்த பெண்மணிகளுக்கு அளித்தபோது அவர்கள் முகத்தைப் பார்க்கவேண்டுமே! இதெல்லாம் இந்தியாவில் இல்லை. கனடாவில். டொரோண்டோ தியாகராஜ ஆராதனை டொரொன்டோ பாரதி கலைக்கழகத்தின் பெருமுயற்சியில் ஏப்ரல் 24, 25, 26 என மூன்று நாள் விழாவாக நடபெற்றது. முதல்நாள் விழாவில் இளம் பாடகர்களில் முன்னணியில் நிற்கும் சிக்கில் குருசரண் அவர்களின் கச்சேரி நடைபெற்றது. பூர்விகல்யாணியில் மீனாட்சி அழகாக வந்து அமர்ந்துவிட்டாள். ராகம் தானம் பல்லவி ஒன்றே பாட்டுக்குப் பதம் எனலாம். ஆராதனை என்பதால் ‘ஜகதானந்தகா'வை அடியோற்றி அமைந்த 'ஓம் ஜானகி' என்ற பல்லவி அருமையாக இருந்தது. நாகை ஸ்ரீராம் வாயில் எதையோ மென்றுகொண்டே கையில் லாவகத்தைக் காட்டினார். மறுநாள் ஆராதனை நாள். சுதா ரகுநாதன் முதல் சந்திரசேகர், குருசரண், ஸ்ரீராம், திருவாருர் வைத்தியனாதன், டி. வாசன், டொரொண்டொவின் கௌரிசங்கர், வசுமதி, பூமா கிருஷ்ணன் முதலானோருடன் பஞ்சரத்தின கிருதியைப் பயின்றவர்களும் மேடையேறினர். திருவையாறுக்குப் போய்க் காண முடியாவிட்டாலும் அதில் பாதியை இங்கு காணமுடிந்ததே என்று ரசிகர்கள் பரவசம் அடைந்தனர். அப்போது ஒரு காட்சி எல்லோர் கண்களிலும் பனிசோர வைத்தது. மேடை ஏறிய சுதா ரகுநாதன், சந்திரசேகர் வருவதைப் பார்த்தவுடன் மேடையிருந்து கீழே இறங்கி அவரது பாதம் தொட்டுத் தன் வணக்கத்தைக் கூறிவிட்டு, அவரை மேடைக்கு அழைத்து வந்து, அவர் அமர்ந்த பின்தான் அமர்ந்தார். பஞ்சரத்தினக் கீர்த்தனையோடு தியாகராஜருக்கு அஞ்சலி செலுத்தியபின் காலை ஆராதனை முடிவடைந்தது.
மாலையில் சுதா ரகுநாதன் கச்சேரி. நாற்காலிகளைக் கொண்டுவந்து போட்டுக்கோண்டே இருந்தார்கள். சுதா வழக்கம்போல உழைத்து அருமையான இசையமுதம் அளித்தார். கரகரப்ரியா கல்லையும் கரைத்துவிடும்படி அமைந்தது. ஸ்ரீராமும், வைத்தியனாதனும் பக்கவாத்தியம் பாந்தமாக வாசித்தனர். சுபபந்துவராளி ராகத்தின் முழுச் சாரத்தையும் பிழிந்து ராகம் தானம் பல்லவி பாடியபோது சுகமோ சுகம்.
மறுநாள் மாலை சந்திரசேகர், தன் மகள் பாரதி உடன் வாசிக்க, வயலின் கச்சேரி செய்தார். எல்லோரையும் மெய்மறக்கச் செய்த வாசிப்பு அது. ‘ஆனந்த நடமிடுவார்' மிக அழகாக அமைந்தது. சங்கராபரணத்தில் பாட்டின் நடுநடுவே குரலெடுத்துப் பாடியும் தான் வாசிக்கும் பாட்டிற்கு விளக்கம் தந்தார். அந்த வில் வித்தையில் உள்ளம் உருகாதவர் இல்லை. இப்படி கோலாகலமாக விழா எடுத்த தியாகராஜன், வெங்கட்ராமன் மற்றும் மன்ற உறுப்பினர்கள் பாராட்டுக்கு உரியவர்கள்.
அலமேலு மணி |