சிகாகோ ‘பரதம்' வழங்கிய நாட்டியக் காட்சி
ஏப்ரல் 25, 2009 அன்று சிகாகோ, நேப்பர்வில்லில் உள்ள ‘பரதம்' நிறுவனம் ஒரு வண்ணமிகு பரதநாட்டியக் காட்சி ஒன்றை ப்ளெயின்ஃபீல்டு நார்த் உயர்நிலைப்பள்ளி அரங்கில் ஏற்பாடு செய்திருந்தது. குரு வனிதா வீரவல்லியின் மாணவியர் இதனை வழங்கினர்.

5 வயதினர் தொடங்கி இளையோர் வரை 80 நாட்டியக்காரர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சி மிகுந்த கவனத்துடனும் அழகுணர்வுடன் வடிவமைக்கப்பட்டிருந்தது. தொடக்கநிலை மாணவர்கள் வழங்கிய நிருத்த வந்தனம், அலாரிப்பு, ஸ்வரமஞ்சரி ஆகியவை வெகு அழகு. இன்னும் மேம்பட்ட இயக்கங்களைக் கொண்ட கல்யாணியில் அமைந்த ஜதிஸ்வரம் கண்ணுக்கு விருந்து. தொடக்கத்தில் ‘நர்த்தன கணபதி' தாள விரைவோடு அமைந்த விநாயகர் நடனத்தைக் கண்முன் கொண்டு வந்தது. ‘கோவிந்தன் குழலோசை' மனிதர் மீதும் மிருகங்கள் மீதும் ஏற்படுத்திய விளைவுகளை வெகு அழகாகச் சித்திரித்தது. இசையில் தம்மை மறந்த பசுக்களையும் பறவைகளையும் விஸ்தாரமான மேடையில் அபிநயித்தது கண்ணைக் கவர்ந்தது.

நுணுக்கமான விவரங்களோடு ‘ராம நாம கிருஷ்ண நாம' இவ்விரண்டு தெய்வங்களுக்கிடயே உள்ள குண வேறுபாடுகளை வெளிக் கொண்டுவந்தது. ருக்மணி அபஹரணம் நெருப்பைக் கக்கியதென்றால், அகலிகை சாப விமோசனமு சபரி மோட்சமும் கருணையின் உச்சம். காட்சிக்குக் காட்சி நாட்டியக்காரர்கள் உருமாறியது களிப்பூட்டுவதாக இருந்தது. முதுநிலை மாணவர்கள் வழங்கிய வர்ணம் (மாதே) அழகாக வடிவமைக்கப் பட்டிருந்ததோடு, அவர்களது கலைமேன்மையைக் காட்டுவதாக இருந்தது. நட்டுவாங்கத்தின் கதிக்கு ஈடு கொடுத்துக் கலைஞர்கள் ஆடினர்.

நடேச கவுத்துவம், முருகன் கவுத்துவம், த்ராயீ ஆகியவையும் மெச்சத் தகுந்தவை. முருகன் கவுத்துவத்துக்கு மாணவிகளின் தாய்மார்கள் எட்டுப் பேர் ஆடியது பார்வையாளர்களைக் கவர்ந்தது. சிவசக்தி ராகத் தில்லானாவோடு நிகழ்ச்சி நிறைவெய்தியது. குரு வனிதா வீரவல்லி நிகழ்ச்சியில் ஒவ்வொரு மாணவரையும் தனித்தனியாகப் பாராட்டிப் பேசினார். ஆடையாபரணங்கள், வண்ணத் தொகுப்பு, ஒலியமைப்பு என்று எல்லா அம்சங்களுமே சிறப்பாக அமைந்திருந்தன.

மேலதிகத் தகவலுக்கு: www.bharatam.org

© TamilOnline.com