கடந்த ஏப்ரல் 25 அன்று, கலிபோர்னியா சான் ரமோன் டௌகார்டி வேலி உயர்நிலைப்பள்ளி அரங்கில், செல்வி வித்யா தம்பியய்யாவின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது. இவர் டாக்டர் லலிதாம்பிகை - தம்பியய்யா தம்பதியினரின் மகள். இவரது குரு திருமதி ஜெயந்தி ஸ்ரீதரன்.
விநாயகர் மீதான மோகன ராகத் துதியுடன் நடனம் தொடங்கியது. தொடர்ந்த கனடா ராக ஜதிஸ்வரம் சிறப்பாக இருந்தது. சரியான முத்திரைகளுடனும், பாவங்களூடனும் அழகாக அபிநயித்தார் வித்யா. மூன்றாவதாக ஆடிய திருச்செந்தூர் முருகனின் மீதான பாடலுக்கு முருகனையே கண்முன் கொண்டு வந்து நிறுத்தினார். தொடர்ந்து ‘நந்தகோபாலனை' (பைரவி) பாடலுக்கு நாயக-நாயகி பாவத்தில் வித்யா மாறிமாறி ஆடியவிதம் ஒரு நாடகம் பார்ப்பது போன்ற உணர்வைப் பார்வையாளர்களுக்குத் தந்தது. ‘சிம்மாசனாஸ்திதே' என்ற அம்பாள்மீதான பாடலுக்கு அருள், சக்தி, சாந்தம் என்று பல்வேறு தோற்றங்களைக் காண்பித்தது, பக்தி உணர்வைத் தூண்டுவதாக அமைந்திருந்தது.
'கண்டேன் கண்டேன்' என்ற அருணாசலக் கவிராயரின் ராமநாடகக் கீர்த்தனைக்கு அவர் ஆடியது ராமனையும், அனுமனையும் கண்முன் நிறுத்தியது. தில்லை நடராஜர்மீது பாடிய, ‘ஆனந்த நடனமிடும்' பாடல் ஆனந்தம் தந்தது. முத்தாய்ப்பாக, தில்லானாவில் அவர் தாளத்திற்கேற்ப கால்களைப் பேச வைத்தது, பார்வையளர்களை வெகுவாய்க் கவர்ந்தது.
குரு ஜெயந்தி ஸ்ரீதரன் நிகழ்ச்சியைச் சிறப்பாக, செம்மையாக வடிவமைத்திருந்தார். ஆஷா ரமேஷ் (குரலிசை), என். நாராயணன் (மிருதங்கம்), சாந்தா நாராயணன் (வயலின்) ஆகியவை நடனத்திற்கு மெருகூட்டின.
செல்லப்ரபா கீரன் (புலவர் கீரன் அவர்களின் மனைவி) |