நிஷா பலராமன் நாட்டிய அரங்கேற்றம்
ஏப்ரல் 25, 2009 அன்று செல்வி நிஷா பலராமனின் நாட்டிய அரங்கேற்றம் உட்சைட் உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. நிஷாவின் குரு, விஸ்வசாந்தி நடனப் பள்ளியை நடத்தி வரும் திருமதி ஸ்ரீலதா சுரேஷ்.

மணி ஓசையுடன் புஷ்பாஞ்சலியை ஆரம்பித்தார் நிஷா. ஸந்த் ஏகநாதரின் ‘ஓம்கார ஸ்வரூபா' என்ற மராட்டி அபங்கிற்கு அருமையாக நடனமாடினார். தொடர்ந்து அம்பாளின் அழகை வர்ணிக்கும் சிருங்கார லஹரிக்கு இவரது பாவமும் நடனமும் சிறப்பாக இருந்தன. ‘ஸ்ரீனிவாச திருவேங்கடமுடையான்' கிருதியைத் தொடர்ந்து, சுப்புடுவின் ‘அன்னமே அருகினில் வா' (வலஜி) வர்ணத்தில் தெய்வானையின் சோகத்தை அபிநயித்த விதம் அழகு. வள்ளியின் தளுக்கு நடை அபாரம். முருகனின் மயில்வாகனத்தை நினைவூட்டிய மயில் ஜதி சபையோரின் வரவேற்பைப் பெற்றது. சிவபெருமான்மீது ராவணன் இயற்றிய ‘ஜடாடவி' ஸ்தோத்திரத்திற்கு ஆஷா ரமேஷின் மெட்டும், நிஷாவின் அபிநயமும் அமர்க்களம்.

அடுத்து வந்த 'பரவசம் தரும் கலை பரதக் கலை' (ராகமாலிகை) அபாரம். கிருஷ்ண லீலை பதத்தில் குழந்தை கிருஷ்ணன் மண்ணை உண்டதும் வெண்ணெய் திருடியதும் காளிங்கனை வதம் செய்ததும், பின்னர் பாஞ்சாலி அபயம் எனக் கதறியபோது ஆடை அளித்து மானம் காத்ததும் பாங்குடன் வெளிப்படுத்தினார் நிஷா.

நிகழ்ச்சியின் சிறப்பம்சம், ஸ்ரீ ஆஞ்சநேயரின்மீது மதுரை கிருஷ்ண அய்யங்கார் இயற்றிய காபி ராக தில்லானா. அதில் வரும் கோர்வைகளுக்கேற்ப நிஷா மேடைமீதும், மண்பானை மீதும் ஆடியது பார்வையாளர்களை அதிசயிக்க வைத்தது. மண்பானை மீது ஆடுவதை மாங்குடி துரைராஜ் ஐயர் சென்ற நூற்றாண்டில் சிலருக்கு மட்டுமே கற்றுத் தந்திருக்கிறார். அதனை நிஷா மிகவும் கவனமாக தாளம் பிசகாமல் ஆடினார். பாடலின் இறுதியில் சஞ்சீவி மலையைக் கையில் தூக்கியவாறு அபிநயித்து, ஒற்றைக்காலில் பானைமீது நின்றதைக் கண்ட சபையோரின் கரகோஷம் அடங்க வெகு நேரமானது.

நிகழ்ச்சிக்காக குரு கிருஷ்ணமூர்த்தி இந்தியாவிலிருந்து வந்திருந்து அழகாகப் பாடினார். ஸ்ரீலதா சுரேஷின் நடன அமைப்பும், நட்டுவாங்கமும் பிரமாதம். நாகராஜ் மாண்டியா (வயலின்), ரவீந்திர பாரதி (மிருதங்கம்), அஸ்வின் கிருஷ்ணகுமார் (புல்லாங்குழல்) ஆகியோர் ஈடு கொடுத்து வாசித்தது அருமை.

கே. விஸ்வநாதன், ஃப்ரீமாண்ட்

© TamilOnline.com