அமெரிக்கத் தமிழ்ப் பள்ளிகள் இரண்டாவது ஆண்டு நிறைவு விழா
மே 2, 2009 அன்று, அமெரிக்கத் தமிழ்ப் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து பள்ளியின் இரண்டாம் ஆண்டு விழாவை டிரிஸ்கோல் கிறிஸ்துவ உயர்நிலைப்பள்ளி அரங்கில் நடத்தினர்.

மாணாக்கர்களின் தமிழ்த்திறன் எழுத்து-சொற்களாகவும், சொற்றொடர்களாகவும் மூன்று நிலைகளில் வெளிப்பட்டது. ஆண்டு நிகழ்வில் ஏழு தமிழ்ப்பள்ளிகளின் மாணாக்கர்களும் ஆர்வத்துடன் பங்கேற்றனர். முதலில் ஷோம்பர்க் தமிழ்ப்பள்ளி மாணவி திவ்யா, தன் தந்தையின் பாடலுடன் ஆரம்பித்தார். அடுத்து வந்த ஷோம்பர்க் மாணாக்கர்களின் ‘பேராசையும் பெருநட்டமும்' நாடகம் நகைச்சுவையோடு நல்ல கருத்தைத் தந்தது. அமெரிக்கத் தமிழ்ப் பள்ளி மாணாக்கர்களுக்கான திருக்குறள் தவறின்றிக் கூறும் போட்டியில் பள்ளி மாணவர்கள் யாவருமே (220 மேல்) கலந்து கொண்டனர். இறுதிப் போட்டியில் 144 திருக்குறள்களைத் தவறின்றிக் கூறி வெற்றி பெற்றார் செல்வி நிறைமதி. இதில் தேட்சணா, திவ்யா, கௌதம் ஆகியோர் அடுத்த மூன்று இடங்களைப் பிடித்தனர். குறள் ஒன்றுக்கு டாலர் ஒன்று என்ற வீதத்தில் பரிசுக் காசோலை அளிக்கப்பட்டது. ‘திருக்குறள் வழி நடத்தல்' என்ற தலைப்பில் பேசிய நால்வருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

அடுத்து வந்த குறுநாடகத்தில் நேப்பர்வில் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் ‘கருத்துப் புலவன்' வடிவில், நாம் செய்யும் தவறுகளை எப்படி நற்கருத்து நிறைந்த தமிழ்ப் பாடல்களால் திருத்தலாம் எனக் காட்டியது புதுமையாக அமைந்தது. தமிழில் நாம் படிக்க வேண்டும் என 6,7 வயது மாணாக்கர்கள் தமது குரலில் பாடியது வாழ்த்தற்குரியது.

பாடல்களையும், கதைகளையும் சிறார் கூறியது 'குழலினிது..' என்பதைப் பொய்யாக்கி விட்டது. ‘அ'வை எங்கு காண்பேன், 'அம்மாவைப் பார்', 'ஆ' எங்கு பார்ப்பேன், ‘ஆடு' பார் எனப் பாடி நடித்த கிரீன்பே தமிழ்ப்பள்ளி குகன் யாவர் மனதிலும் குடிகொண்டு விட்டார்.

‘தமிழ்நாடு காண்போம்' நிகழ்ச்சியைத் தந்த வயதுமுதிர்ந்த போலந்து நாட்டு மாணவப் பெண்மணி, சுவைசேர கன்யாகுமரி, மதுரை, கோவை, உதகமண்டலம், குற்றாலம் என்று தமிழ் நாட்டின் பல நகரங்களின் சிறப்பை எடுத்துக்காட்டினார். இறுதியாக, தவறாமல் பள்ளி வந்த மாணாக்கர்க்கும், நிகழ்ச்சிகளில் பங்குபெற்ற மாணவர்க்கும், கற்பிக்கும் ஆசிரியர் இருபதுக்கு மேற்பட்டோருக்கும் பாராட்டுப் பத்திரங்கள் வழங்கப்பட்டன. சிகாகோ பெருநகரத் தமிழ்ப் பெரியவர் வேலாயுதம் பரிசுகளை அளித்து வாழ்த்துக் கூறினார். பலவண்ணச் சான்றிதழ்களை வழங்கிய ‘தென்றல்' திங்களிதழுக்கும் ஒத்துழைத்த, பங்கேற்ற பிறருக்கும் நன்றி கூறலுடன் விழா நிறைவெய்தியது.

வ.ச. பாபு, இல்லினாய்ஸ்

© TamilOnline.com