மே 17, 2009 அன்று, சான் பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியில் ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவ மாணவியருக்கு தமிழ் பயிற்றுவிக்கும் கலிஃபோர்னியாத் தமிழ்க் கழகத்தின் (CTA) பத்தாவது ஆண்டு விழா, கூபர்டினோவின் டி அன்சா கல்லூரி வளாகத்திலுள்ள ஃப்ளின்ட் மைய அரங்கத்தில் நடைபெற்றது. தலைவர் வெற்றிச்செல்வி ராஜமாணிக்கம் அவர்கள் நோக்கங்களையும், வளர்ச்சியையும் எடுத்துக் கூறி, அதன் பின்னணியில் இருக்கும் மாணவர், பெற்றோர், ஆசிரியர், தொண்டூழியர்கள், நிறுவனங்களுக்கு நன்றி தெரிவித்து, வரவேற்று நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். கூபர்டினோ, எவர்க்ரீன், ஃப்ரீமான்ட், ப்ளசென்டன் கிளைகளின் மாணவ மாணவியர் பங்கு பெற்றனர். 815 மாணவ மாணவியர், 69 சிறு நாடகங்கள், பட்டி மன்றங்கள், பாடல்கள், நடனங்களை அளித்தனர். அவர்களின் மொழித்திறனும், கலைத்திறனும் பார்க்க வியப்பாகவும், பெருமையாகவும் இருந்தது. தமிழ்நாட்டில்கூட இவ்வளவு சிறப்பான மாணவர் நிகழ்ச்சிகளை பார்த்ததில்லை என்று வந்திருந்தோர் பாராட்டினார்கள். முனைவர். ஜார்ஜ் ஹார்ட், பெர்க்கலி தமிழ்ப் பீட தலைவர், அவர்கள் கலிஃபோர்னியா தமிழ்க் கழக பள்ளி இறுதி வகுப்பை முடித்த ஷ்ரெயாஸ் ஸ்ரீனிவாசன், விக்னேஷ் வெங்கட்ராமன், ப்ரீத்தி பத்மனாபன், ஸ்வாதி பாலாஜி ஆகியோருக்குப் பட்டங்கள் வழங்கிச் சிறப்புரையாற்றினார்.
டாக்டர் டென்னிஸ் W. பிரௌன் (Director of Secondary Education, Fremont Unified School District, Fremont) அவர்கள் ப்ரீமாண்ட் மாணவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கிச் சிறப்புரையாற்றினார். திருவாட்டி அலிஸன் கோய் (Coordinator of Educational Options, FUHSD, Sunnyvale) அவர்கள் கூபர்டினோ மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கிச் சிறப்புரையாற்றினார். முனைவர் மு. பொன்னவைக்கோ, துணைவேந்தர், பாரதிதாசன் பல்கலைக் கழகம், அவர்கள் பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் கல்வி மையத்தை துவங்கி வைத்து ஆற்றிய சிறப்புரையின் பதிவு ஒலிபரப்பப் பட்டது. இளங்கோ மெய்யப்பன் அவர்கள் மேடையிலிருந்து நன்றி கூறினார்.
இணைய தளம்: www.catamilacademy.org
டில்லி துரை |