சந்தியா சந்திரசேகரன் இசை அரங்கேற்றம்
மே 23, 2009 அன்று ப்ரீமாண்ட் ஒலோனி கல்லூரியின் ஜாக்சன் அரங்கில் லலிதா கான வித்யாலயா மாணவி சந்தியா சந்திரசேகரனின் கர்நாடக இசை அரங்கேற்றம் நடந்தது. நிகழ்ச்சிக்கு முன்னர் பண்டிட் ரவிச்சந்திரன் அவர்கள் பூஜை செய்தார். குரு லதா ஸ்ரீராம் அவர்களின் சிஷ்யை சந்தியா.

பெற்றொரையும் குருவையும் வணங்கி, இறை வணக்கத்துடன் நிகழ்ச்சியைத் துவக்கினார் சந்தியா. மாயா மாளவ கௌளை கணேஷ பத வர்ணத்துடன் கச்சேரி துவங்கியது. நல்ல சாரீரம், சுருதி சுத்தம் சந்தியாவுக்கு. தொடர்ந்த ஸ்ரீ சந்திரசேகர சங்கராபரணம் வெகு சுகம். முத்துசாமி தீக்ஷிதரின் ‘சுவாமிநாத பரிபாலய' பாடலை அற்புதமாகப் பாடினார். கச்சிதமான ஆலாபனை, நிரவல், அநாயசமாக ஸ்வரம் பாடும் தன்மை சிறப்பாக இருந்தது. ‘நன்னு விடச்சி' ரீதி கௌளைப் பாடல் அருமை. ‘மரி மரி வாச்சூன' என்ற மைசூர் வாசுதேவாச்சாரியாரின் காம்போஜி ராகப் பாடலை அவர் பாடிய விதம் அற்புதம். யாரும் அதிமாகப் பாடாத பாடல்களை எடுத்துக்கொண்டு பாடியது அவரது தனித்திறமையை நிரூபித்தது.

தொடர்ந்து பாடிய ‘துருசுகா', ‘சுதா மாதுர்ய பாஷிணி' பாடல்கள் சபையோரைக் கவர்ந்தன. அரங்கேற்றத்தின் சிகரமாக அமைந்தது முத்துசாமி தீக்ஷிதரின் ‘ராமநாதம் பஜே'. தொடர்ந்த ‘மா ரமணன்', ‘ஸ்ரீ ரங்க புர விஹாரா', ‘மஹாதேவ சிவா', ‘ஜெகதோத்தாரனா', ‘குறையொன்றும் இல்லை', சிம்ஹாசனஸ்திதே', ‘திருப்புகழ்' மற்றும் இறுதியில் ‘மாமவ பட்டாபிராமா' என அனைத்தையும் மிகச் சிறப்பாகப் பாடினார் சந்தியா. கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் அசராமல் பதினேழு பாடல்களைப் பாடிய சந்தியாவினது குரல்வளம், தன்னம்பிக்கை, லாகவம் என அனைத்தும் சபையோரின் பாராட்டைப் பெற்றன. ஸ்ரீ நாகராஜ் மாண்டியா (வயலின்), ஸ்ரீ ரவீந்தர பாரதி ஸ்ரீதரன் (மிருதங்கம்) சிறப்பாகப் பக்கம் வாசித்தனர்.

நிகழ்ச்சியின் இறுதியில் சிலிகான் வேலி தொழிலதிபர் பி. வி. ஜகதீஷ், ‘லலிதகான வித்யாலயா'வின் இயக்குனர் லதா ஸ்ரீராமைப் பாராட்டிப் பேசினார். சந்தியாவை வாழ்த்தினார். மிருதங்க வித்வான் குருவாயூர் துரை, ஸ்வாமி ஓம்காரானந்தா ஆகியோரும் வாழ்த்துரை வழங்கினர். குரு, சிஷ்யை இருவரும் நன்றி கூற நிகழ்ச்சி நிறைவுற்றது.

கீதா பாஸ்கர், பிளசண்டன்

© TamilOnline.com