கிராமத்தில் விடுமுறைக்குப் போயிருந்த போது இளமைக்கால நண்பன் எஸ்வியைப் பார்ப்பேன் என்று நினைக்கவில்லை. எஸ். வெங்கடராமன் என்ற பெயரின் சுருக்கமே எஸ்வி. அவன் தன் மகளோடு பெருமாள் கோயில் அருகே நின்று கொண்டிருந்தான். ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டு கொள்ள எங்களுக்குச் சில நொடிகளே ஆயின.
“ஒரு நிமிஷம் இருடா இவளை வீட்டில விட்டிட்டு வந்திடறேன். நாம் இங்கயே உட்கார்ந்து பேசலாம். வீட்ல உட்கார்ந்து பேசினா என் மனைவி ஆயிரம் வேலை சொல்லுவா” என்று சொல்லி அருகிலுள்ள தன் வீட்டுக்குப் போனான்.
உடல் சற்றுப் பெருத்திருந்ததே தவிர எஸ்வியின் குரல், பேச்சு எல்லாம் அப்படியே இருந்தது. பல வருஷங்கள் ஓடிவிட்டன. இருந்தாலும் நினைவுகள் பசுமையாய் மனத்தில் இருந்தன.
பள்ளிப் பிராயத்தில் இந்தப் பெருமாள் கோயில்தான் நாங்கள் பம்பரம், கோலி விளையாடிய இடம். ஒரு நிகழ்ச்சி எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது. அன்று பள்ளிக்கு விடுமுறை நாள்.
நான் பெருமாள் கோயில் வளாகத்துள் கையில் பம்பரத்துடன் நுழைந்ததும் அங்கே எஸ்வி அமர்ந்திருந்தான். பம்பரமும் கயிறும் அவன் காலடியில் கிடந்தன.
“என்னடா, நேரமாகுதே. சும்மா உட்கார்ந் திருக்க. சவுரி எங்க?” என்றேன்.
“சவுரி உள்ள போயிட்டான். ஆராவ முதனுக்கு உதவி பண்ணணூமாம். முன்சீ·ப் வீட்டுலேருந்து வந்து பெருமாளுக்கு கல்யாண உத்சவம் பண்றாங்களாம். இன்னிக்கி விளையாட முடியும்னு எனக்குத் தோணல.”
அப்போது எனக்குப் பதினோரு வயது. எஸ்விக்கு பதிமூன்று. சவுரி என்ற சவுரி ராஜன் என்னைவிட ஒரு வயசு சின்னவன். அவன் கோயில் அர்ச்சகர் ரங்காச்சாரியின் பிள்ளை. ஆராவமுதன் சவுரியின் தாய்மாமன். சவுரியின் தந்தைக்கு உடல் நலம் குன்றி இருந்ததாலும், சவுரியால் கோயில் பூசைகளை முழுக்கக் கவனிக்க முடியாமல் போனதாலும், ஆராவமுதன் உதவிக்கு வந்திருந்தார்.
ஆராவமுதன் பார்க்க வாட்ட சாட்டமாக, சற்று பருமனாக இருப்பார். கரிய திருமேனி தான். பள்ளி கொண்ட பெருமாளே எழுந்து வந்தாற்போல் இருக்கும். அவர் ஒரு தேர்ந்த அர்ச்சகர். அவருக்குத் தமிழில் நல்ல தேர்ச்சி இருந்தது. ஓரளவு நல்ல குரல் வளமும் இருந்தது. பாட்டினாலேயே கோயிலுக்கு வருபவர்களைக் கவர்ந்தார்.
ஆராவமுதனுக்கு திரைப்படங்களில் நடிக்க மிகுந்த விருப்பம் இருந்தது. திரைப்பட நடிக நடிகையரின் பிறந்த நட்சத்திரங்கள், ஜாதகங்கள் அவருக்கு அத்துப்படி. ஒரு நடிகை பெயரைச் சொல்லி “அவ மக நட்சத்திரண்டா, ஜகம் ஆளுவா” என்பார்.
இரண்டாம் திருமணம் செய்து கொண்ட ஒரு நடிகர் பற்றிச் சொல்லும்போது “தெரியுண்டா அவன் ரெண்டாவது கல்யாணம் பண்ணிப் பான்னு. ‘ஏழில் சனியுண்டாகில் தாரமிரண்டு தப்பாமல் செய்குவன்’னு ஜோஸ்ய சாஸ்திரம் சொல்றதே” என்பார். சிவாஜியின் பரம ரசிகர். சிவாஜியைப் பற்றிக் குறிப்பிடும்போது ‘கணேசன்’ என்றே குறிப்பார்.
சிவாஜியின் நடிப்பை அவர் புகழ்வதே அலாதியாக இருக்கும். “அந்தநாள் படத்துல கணேசன் ஜப்பானுக்கு உதவி செய்யற ஒற்றனா வராண்டா. எதிரிக்கு சிக்னல் கொடுத்திட்டு எதிரி பிளேன் சத்தம் வர பக்கமா கண்ணை சுத்தி உருட்டாறான் பாரு! அதுக்கே காசு சரியாப் போச்சு.”
சிவாஜியின் பட வசனங்கள் அவருக்கு மனப்பாடம். திடீரென்று வினாடி வினா மாதிரி “குற்றமென்ன செய்தேன் கொற்றவனே, குற்றமென்ன செய்தேன்” என்பார். உடனே நாங்கள் அது எந்த திரைப்படத்தில் சிவாஜி பேசும் வசனம் என்று சொல்லவேண்டும்.
திடீரென்று “உயர்வற உயர்நலம் உடையவன் எவனவன்?” என்பார் என்னிடம். நான் விழிப்பேன். எஸ்வியைப் பார்ப்பார். அவன் ஆகாயத்தில் பார்த்துக் கொண்டு, எதையோ காட்டி “அது பருந்தா, கருடனா” என்பான். அதாவது அவன் ஏதோ பெரிய விசயத்தைப் பத்தி ஆராய்ந்து கொண்டிருக் கானாம். இங்க பேசினது அவன் காதிலே ஏறலியாம். சவுரியைப் பார்த்து, “உனக்குத் தெரியுமாடா?” என்பார்.
அவன் கையைக் கட்டிக் கொண்டு, “மயர்வற மதிநலம் அருளினன் எவனவன், அயர்வறும் அமரர்கள் அதிபதி எவனவன், துயரறு சுடரடி தொழுதெழென் மனனே” என்று ஒரே மூச்சில் சொல்லி முடிப்பான். எங்களுக்குத் தெரியாதது, சவுரிக்கு தெரிந் திருந்ததனால், எனக்கும் எஸ்விக்கும் சவுரி மேல் ஒரு சின்னப் பொறாமை இருந்தது. அதனால் அவன் பம்பரத்துக்குக் குத்துப் போட்டு திருப்திப்படுவோம்.
சவுரியைக் கூப்பிட்டுப் பார்த்தால் என்ன என்று எனக்கு தோன்றியது. நான் அவனை அழைக்க ஆராவமுதன் வெளியே வந்தார். “சவுரி இப்ப விளையாட்டுக்கு வரமாட்டான். அவனைக் கெடுக்காதீங்க. முன்சீ·ப் வீட்டிலேருந்து கல்யாண உத்சவம் பண்ண வரா. இன்னிக்கு கோயில்ல விளையாட்டு எதுவும் வேண்டாம். என்னால மத்யஸ்தம் பண்ண முடியாது” என்றார். எங்கள் பம்பர ஆட்டத்துக்கு சில சமயம் அவர் நடுவராகவும் விளங்கினார்.
நானும் எஸ்வியும் ஏமாற்றத்தோடு எழுந்த போது கலியன் என்று அழைக்கப்பட்ட கலிய பெருமாள் அங்கே வந்தான் கலியன் என்னை விட ரெண்டு வயசு சின்னவன். எங்களோடு பம்பரம் விளயாடுவான். பம்பரத்தில் கில்லாடி. சவுரியின் மண்டைப் பம்பரத்தை நானும் எஸ்வியும் எங்கள் பம்பரத்தால் குத்தும்போது, அவன் தானே தன் கையால் கொய்யாக் கட்டையில் செதுக்கிய நாட்டுப் பம்பரத்தால் எங்கள் பம்பரத்தைத் தாக்குவான். எங்களுக்குக் கடுப்பாக இருக்கும்.
தன் மருமானுக்குக் கலியன் உதவுவது கண்டு மகிழ்ந்து ஆராவமுதனும் அவனைப் புகழ்வார்.
வலியார் வல்’ஆக்கு’ வைக்க வருந்திச் சலியாத பம்பரத்தால் சாத்தி - கெலிக்கக் கலியினில் வந்த கலியா! இவரும் கிலியினில் கத்துவதைக் கேள்! என்று வெண்பா வேறு சொல்லி எங்களை வெறுப்பேத்துவார். ஆராவமுதனைப் பார்த்து “அய்யா” என்றான் கலியன்.
ஆராவமுதன் கோபத்தோடு “என்ன கலியா, ஒனக்குத் தனியாச் சொல்லணுமா? சவுரி ராஜன் இன்னிக்கி விளையாட வரமாட்டான்” என்றார் அழுத்தமாக.
“அதில்லீங்க. பக்கத்துல பண்டாரவாடை கிராமத்துல சினிமா படம் சூட்டிங் எடுக்கறாங் களாம். கணேசன் சாரு உங்களை நடிக்கக் கூப்பிட்டு வரச் சொன்னாங்க” என்றான்.
ஆராவமுதன் முகம் உடனே மலர்ந்தது. “என்னடா கலியா. இத முதல்ல சொல்ல வேண்டாமா? நீ பம்பரம் விளையாட வந்திருக்கேனுல்ல நெனச்சிட்டேன். எங்க சூட்டிங்காம்? கணேசன் வந்திருக்கானா” என்றார் ஆச்சரியத்துடன். ‘கணேசன்’ என்று அழைத்ததன் மூலம் சிவாஜிக்கும் தனக்கும் மிக நெருக்கம் என்று காட்டிக் கொள்ள விழைந்தார். சிவாஜிக்கு இவரைத் தெரியுமா என்பதில் எங்களுக்குச் சற்று சந்தேகம்.
“கணேசந்தாங்க அனுப்பினார். பண்டார வாடை ராமர் கோயிலாண்டைங்க. உங்களுக் குக் காத்திருக்காங்க. காரு, காமிரானு கூட்டமா இருக்கு.”
“இதோ வரேன்னு போயிச் சொல்லு. பத்து நிமிசத்துல கிளம்பி வரேன்” என்று சொன்ன அவர் முகம் சிந்தனையில் ஆழ்ந்தது. எஸ்வி பக்கம் திரும்பினார். “வெங்கட்ராமா, நீ எனக்கு ஒரு காரியம் பண்ணணும். முன்சீ·ப் வீட்டுக்குப் போயி கல்யாண உத்சவம் இப்ப வேண்டாம். நான் தப்பா நேரம் சொல்லிட் டேனாம்னு சொல்லு. என்னா” என்றார். எஸ்வி தலையாட்டினான்.
இந்தப் பணியை என்னிடம் தரவில்லையே என்ற என் வருத்தம் அவருக்குப் புரிந்திருக்க வேண்டும். “நீயும் அவனோட போடா. போறதுக்கு முன்னே அரச மரத்தடில இருக்கிற பரியாரிய வரச்சொல்லு.” என்றார். பரியாரி என்பது எங்கள் கிராம நாவிதரைக் குறிக்கும்.
“நீங்கதான் இன்னிக்கு குளிச்சாச்சே. இனிம எதுக்கு பரியாரி” என்றேன் நான்.
“மண்டு. என்னை நடிக்கக் கூப்பிடறான்டா. முள்ளு முள்ளா முகத்துல தாடி மீசையோட போய் நிக்கறதா. முகத்துக்கு ஷவரம் பண்ணி அவசரமா ஸ்நானம் பண்ணிட்டு ஓடணும். நீ ஓடு. இங்க நின்னு கேள்வி கேக்காத. அப்புறம் கணேசன், ‘என்ன ஆராவமுதா இப்படிப் பண்ணிட்டியேடா’னு கேட்டா, அவனுக்கு நான்னா பதில் சொல்லணும்” என்றார், சிவாஜி குரலில்.
முனிசீ·ப் வீட்டுக்கு போய்விட்டுத் திரும்பும் வழியில் எஸ்வி என்னிடம் தன் சந்தேகத் தைப் பகிர்ந்து கொண்டான். “நிசம்மாவே இவரை சிவாஜி கணேசன் கூப்பிட்டு அனுப்பி இருப்பாரா? அதுவும் நடிக்க? என்னால நம்ப முடியல. ஏதாவது படத்துக்கு பூஜை போடற சமாசாரமோ இருக்குமோ?”
சில மாதங்கள் முன் ஆராவமுதன் தனக்கு நடிக்க வாய்ப்பு கேட்டு சிவாஜிக்குக் கடிதம் எழுதியிருந்தார். அதை எஸ்விதான் அவருக் காக எழுதித் தபால் செய்தான். இரண்டு வாரத்தில் ஆராவமுதனுக்கு ஒரு கவர் வந்தது. அதில் சிவாஜி கையெழுத்திட்ட ஒரு புகைப்படம் இருந்தது. புகைப்படத்தில் சிவாஜி முருகன் வேஷத்தில் இருந்தார். ஆராவமுதன் மிக மகிழ்ந்து “பார்ரா, யாமிருக்கப் பயமேன்”னு சிம்பாலிக்கா சொல்லிட்டான் பாரு. சிவாஜி சிவாஜிதான்” என்றார். ஒரு வேளை சிவாஜி நிஜமாகவே இவருக்கு நடிக்க வாய்ப்பு கொடுக்கிறாரோ?
எஸ்வியிடம் “ஷ¥ட்டிங் பார்க்க பண்டார வாடைக்கு குறுக்கா வயல்வழியா போயிட லாமா” என்றேன். எனக்கும் சிவாஜியை நேரில் காண ஆவல்.
அப்பொழுதுதான் கட்டை வண்டி ஓட்டி வந்த முனியன் எங்களைக் கடந்தான். முனியன் குடியானவர் தெருவில் வாழ்ந்த ஒரு விவசாயி. பகுதி நேர வேலையாக கட்டை வண்டியில் மண் ஏற்றிப் போவதும் அவனுக் குத் தொழிலாக இருந்தது.
“வண்டி எங்க போறது?” என்று எஸ்வி வினவ “பண்டாரவாடைங்க” என்று பதில் வந்தது. “அப்ப நாங்களும் ஏறிக்கறோம்” என்று சொல்லி, அவன் அனுமதிக்குமுன் எஸ்வி தாவி வண்டியில் ஏறி, நானும் ஏறிக்கொள்ள உதவினான். “படம் புடிக்க றாங்க வேடிக்கை பார்க்கப் போறோம்” என்று எஸ்வி சொன்னதும் முனியனுக்கும் இதில் ஆர்வம் ஏற்பட்டது. “வாத்தியாரு வந்திருக் காரா?” என்று வினவினான். வாத்தியார் என்று அவன் குறிப்பிட்டது எம்ஜியாரை.
பண்டாரவாடை கிராமத்து ராமர் கோயி லருகே ஒரு சிறு கூட்டம். இருவது முப்பது பேர் இருக்கலாம். ஒரு மரத்தடியில் சில நாற்காலிகளில் ஆட்கள் அமர்ந்திருக்க, சிலர் நிற்க, அருகே இரண்டு வேன்கள், மூன்று கார்கள் இருந்தன. கேமிராவுடன் ஒருவர், ஒப்பனைப்பெட்டியுடன் இன்னொருவர். ஓடியாடி வேலை செய்யும் இரு பையன்கள்.
வேடிக்கை பார்த்த சில கிராம மக்கள்...
மேக்கப் போட்டிருந்த பையன் புதுமுகம். பெண் ஓரிரு படங்களில் நடித்திருந்த நடிகை சுமிதா. நீலச்சட்டை போட்டிருந்த உதவி இயக்குநர் அவர்களுக்கு இன்றைக்குப் படமாக்கவிருக்கும் காட்சியை விளக்கி கொண்டிருந்தார்.
“உங்க காதலை வீட்ல அனுமதிக்கல. நீங்க வீட்லேருந்து ஓடி வந்தூட்டீங்க. பஸ்லேருந்து இறங்கி சுத்திப் பார்க்கறீங்க. பக்கத்துல கோயில் தெரியுது. அதுக்கு வரீங்க. வந்து நீங்க சுமிதாவுக்குத் தாலி கட்றீங்க. அய்யர் ஆசீர்வாதம் பண்ராரு. இப்ப பஸ்லேருந்து வரத எடுப்பம்... இந்த மரத்துலேருந்து நாலு ஸ்டெப் வந்து அங்கன நின்னுக்கிட்டு கைய உசத்திக் கோயிலப் பாருங்க.”
“பஸ் எங்கங்க” என்றான் இளைஞன்.
“அதுபத்தி நீங்க கவலப்படாதீங்க. ஸ்டுடியோல அப்புறமா எடுத்துக்கலாம். நீங்க கோயி லாண்டை போறதுதான் முக்கியம்.”
இரண்டு மூன்று ஒத்திகைகளுக்குப் பிறகு அவர்களுக்குக் காட்சி பிடிபட்டது. காமிரா அதைப் பதிந்து கொண்டது.
“நேரமாவுது ஸ்ரீதர். சீக்கிரம் முடிங்க” என்று நாற்காலியில் இருந்த ஒருவர் கத்தினார்.
“இத்தோ ஆச்சுங்க. இன்னொரு சீன். அவ்ளோதான். அய்யரு எங்கப்பா” என்றார் உதவி இயக்குநர் சாரதி.
“ஆள் போயிருக்கு. இதோ வருவாரு.”
“இந்தக் கோயிலு அய்யரு எங்கயாம்.”
“அவருக்கு ஒடம்பு சரியில்லயாம். ஆசுபத்தி ரில இருக்காராம்.”
“சரி, அஞ்சு நிமிசம் டீ ப்ரேக். எல்லாருக்கும் டீ குடு.”
படப்பிடிப்புக் குழுவினருக்கு வேனிலிருந்து பிளாஸ்கில் இருந்த தேனீர் கொடுக்கப்பட்டது.
அப்பொழுது அங்கு ஜல்ஜல்லென்று ஒலியுடன் இரட்டை மாடுகள் பூட்டிய வில்வண்டி வந்து நின்றது.
அதிலிருந்து ஆராவமுதன் கம்பீரமாக இறங்கினார்.
“பண்ணையார் வீட்டு வண்டிய கேட்டு வாங்கிட்டு வந்திருக்கார் போல. இது நமக்குத் தெரியாம போச்சே. தெரிஞ்சிருந்தா வண்டியிலேயே இவரோட வந்திருக்கலாமே” என்று என்னிடம் எஸ்வி முணுமுணுத்தான்.
வெண்ணிற சில்க் சட்டை, பச்சைக்கலர் பார்டர் போட்ட ஜரிகை வேட்டி, காதில் கடுக்கன், பத்து விரலிலும் மோதிரம், நெற்றியில் திருமண் என்று பந்தாவாக இருந்தார் ஆராவமுதன்.
கையில் ஒரு பிளாஸ்டிக் கூடையில் தேங்காய், வாழைப்பழம், பூ... சட்டைக்கு வெளியே பத்து பவுன் தாம்பு வடச்சங்கிலி பளபளத்தது.
சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, மரத்தடியில் சில்க் ஜிப்பாவில் அமர்ந்திருந்த ஒருவரிடம் போய் கும்பிட்டு வணங்கி “அண்ணா நமஸ்காரம். செளக்கியமா?” என்று விசாரித்து அவர் கையில் தேங்காய் பூ, பழத்தை வைத்தார். “வேணுகோபால சுவாமி பிரசாதம்” என்று சொல்லி கண்களை மூடிக்கொண்டு உரத்த குரலில் “பச்சை மாமலை போல் மேனி பவளவாய் கமலச்செங்கண் அச்சுதா அமரர்தம் ஏறே..ஏ..ஏ..ஏ” என்று சொல்லி நிறுத்தினார்.
எல்லோரும் வியப்புடன் அவரைப் பார்த் தார்கள். ஆராவமுதன், “எப்படிண்ணா இருக்கு என் பாட்டு. உங்க லெவலுக்கு இருக்கா?” என்று சொல்லி நாற்காலியில் இருந்தவரின் கையைப் பிடித்துக் கொண்டார்.
நாற்காலியில் இருந்தவர் நெளிந்து “நல்லா பாடுறீங்க சார். எனக்குப் பாட்டு வராது” என்றார். ஆராவமுதன் சற்று ஐயத்துடன் “நீங்க டி.எம்.எஸ்.தானே?” என்று வினவ, அவர் “அய்யய்யோ! நானா? நான் சம்முகம். இந்தப் பட புரட்யூசர். ஆனா நிறயப் பேரு என்னை டி.எம்.எஸ். போல இருக்கறதா சொல்லியிருக்காங்க” என்றார்.
“அய்யர் எங்கப்பா? இன்னும் வரல” என்று ஒருவர் கேட்க, அங்கு இருந்த கலியன் ஆராவமுதனைக் காட்டி “இத்தோ இவரு தான் கோயில் அய்யரு” என்று சுட்ட, ஆராவமுதன் அந்த அறிமுகத்தில் சற்று அதிருப்தியடைந்த குரலில் அவர் தகுதிகள் முழுமையாகக் குறிப்பிடப்படவில்லை என்பது போல “நான் வேணுகோபால ஸ்வாமி கோயில்ல பெருமாளுக்கு கைங்கர்யம் பண்றேன்” என்றார்.
“வேணு கோபாலசாமியா? பெருமாள் கோயிலுனு சொன்னாங்களே?” அவர்கள் அறியாமை ஆராவமுதனுக்கு வேதனையாய் இருந்தது.
“இப்பிடி சேர்ல உட்காருங்க. யாரங்கே, அய்யருக்கு ஒரு டீ கொண்டாரச் சொல்லு” துணை இயக்குநர், இயக்குநரைச் சற்றுச் தள்ளி அழைத்துப் போய், “இவரு நம்ம படத்துல அய்யரு ரோலுக்கு சரியா வருமா.... சொல்லுங்க?” என்றார்.
ஆராவமுதனைப் பார்த்த இயக்குநருக்கு முழுத் திருப்தி இல்லை.
“இவரு ‘கெட் அப்’ பாத்தா வெள்ளையும் சொள்ளையுமா பண்ணையார் மாதிரி இருக்கு. கொழுக்கு மொழுக்குனு உசிலை மணி மாதிரி மோட்டாவா வேற இருக்காரு. ஒரு கிராமக் கோயில் ஏழை அய்யிருனு சொல்ற மாதிரி இல்ல. இது படத்துல ஒரு சின்னக் காரக்டர். இவரைப் போட்டா ஆடியன்சுக்கு கதையில கவனம் சிதறிடும். காமிக் எ·பெக்ட் வந்துடும். கன்·பியூஸ் ஆயிடுவாங்க. இந்த வேசத்துக்கு வேற யாரும் இங்கிட்டு இல்லயா? என்ன வேலை பண்றீங்க? டைம் ஈஸ் மணி.”
ஆராவமுதன் நாற்காலியில் அமர அவருக்கு ஒரு கிளாசில் தேனீர் தரப்பட்டது. அவர் அதை வாங்கிக் கொள்ளாமல் தன் சட்டை யைச் சற்று விலக்கி, தோள்பட்டையின் கீழே கையில் இருந்த சங்கு முத்திரையைப் புன்னகையோடு காட்டினார்.
டீ கொடுத்த ஆள் விவரம் புரியாமல் நின்றான். எஸ்வி சட்டென்று போய் டீ கிளாசை கையில் வாங்கிக் கொண்டு, “அவரு ஆசாரம். வெளியில எதுவும் சாப்பிடறதில்ல” என்று சொல்லி, டீயில் பாதி குடித்து விட்டு மீதியை என்னிடம் நீட்டினான்.
இயக்குநர் சுற்றுமுற்றும் பார்க்க, அங்கு மூலையில் முனியன் நிற்பது அவர் கண்ணில் பட்டது. “ஒன் மினிட், சாரதி, இந்த ஆளப் பாருங்க. இவரைப் போட்டா சரியாருக்குமா?”
துணை இயக்குநர் ஆமோதித்தார். “நல்ல சாய்ஸ். இங்க வாங்க. படத்துல நடிக்கறீங்களா? ஏய் யாரங்கே. இந்த ஆளுக்கு அய்யரு கெட்டப்ல வேட்டி கட்டி நெத்தில துண்ணூறு போட்டு அழச்சிட்டு வாங்க. ரொம்ப மேக்கப் வாணாம். குவிக்கா செய்ங்க. அவரு ரெடியாரதுகுள்ள கோயிலை இந்த ஆங்கிள்ல ஒரு லாங் ஷாட் எடுங்க. லைட் போதுமா பாத்துக்குங்க.”
முனியனுக்கு மிகுந்த தயக்கம் இருந்தாலும், யூனிட் ஆட்கள் சில நிமிடங்களில் அவனைத் தயார் செய்து கொண்டு நிறுத்தினார்கள்.
ஆராவமுதன் ஏதோ சொல்ல விரும்பி, ஆனால் சொல்லாமல், உதட்டைக் கடித்துக் கொண்டு கோபத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்.
துணை இயக்குநர் “சார் இந்த ஆளுக்கு வேசம் பொருத்தமா இருக்கு. இதப்பாருங்க. உங்க பேரு என்னா.. முனியனா? முனியன் சார், இந்த ஜோடி வீட்டைவிட்டு ஓடி வந்து கோயில்ல தாலி கட்டிக்கிறாங்க. உங்க காலில விழறாங்க. நீங்க அவங்களுக்குத் துண்ணூறு கொடுத்து ஆசீர்வாதம் பண்ணணும்” என்று விளக்கினார்.
முனியன் ஆர்வத்துடன் தலையாட்ட அந்தக் காட்சி எடுக்கப்பட்டது.
முனியன் அய்யர் வேசத்தில் விபூதி கொடுத்துவிட்டு “நல்லாயிருங்க. உங்க அப்பா அம்மா தேடுவாங்க. போய்ப் பாத்து அவங்க கால்ல விழுங்க. அப்பா அம்மாவுக்கு அடுத்தபடியாத்தான் மத்தவங்க” என்று உணர்ச்சி வசப்பட்டு சொந்த வசனமும் பேச, இயக்குநர் “கட்” என்று கத்தினார்.
துணை இயக்குநர் முனியனிடம் கோபத்துடன் “உன்னை யாருய்யா கூட ரெண்டுவரி சேத்துக்கச் சொன்னது? அவங்க அப்பா அம்மாவைப் பாத்தா என்ன, அடுத்த வீட்டுக்காரனை பாத்தா உனக்கு என்னாய்யா?” என்று கத்தினார்.
இயக்குநர் குறுக்கிட்டு, “சாரதி, இட் ஈஸ் ஓகே. அந்த வசனம் இங்க பொருத்தமாவே தோணுது. நேரம் பத்தலேன்னா எடிட்டிங்ல வெட்டிக்கலாம். இன்னிக்கி இது போதும். பாக் அப்” என்றார்.
தயாரிப்பாளர் எழுந்து வந்து முனியனிடம் இரண்டு நூறு ரூபாய் நோட்டுகளை நீட்டி “வெச்சிக்குங்க. நல்லா நடிச்சீங்க” என்றார். முனியன் சற்றுத் தயங்கி மிக்க மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டு “இந்தப்படம் பேரு என்னாங்க” என்று கேட்க, “ஓடிப்போயி கட்டிக்கிட்ட ஜோடி” என்று பதில் கிடைத்தது.
தயாரிப்பாளர் ஆராவமுதனிடம் வந்து “சார். உங்களுக்கு தொந்திரவு கொடுத்திட்டம். மன்னிக்கணும். கார்ல அழச்சிட்டு போயி உங்கள வீட்ல டிராப் பண்ணிடவா” என்று வினவ, ஆராவமுதன் சம்பூர்ண ராமாயணத்தில் பரதனாய் நடித்த சிவாஜி தன் தேரோட்டியிடம் ‘போ’ என்று சாடை காட்டுவது போல அலட்சியமாகக் கையை அசைத்தார்.
முக இறுக்கத்துடன் அழுத்தமான குரலில் “கணேசன் எங்கே?” என்றார்.
தயாரிப்பாளர் “கணேசா” என்று கத்த ஒல்லியான ஒரு ஆள் ஓடி வந்து “வந்திட்டங்க” என்று வரவும், ஆராவமுதன் அதிருப்தியுடன், “இவரைக் கேட்கல. ‘சிவாஜி’ கணேசன் எங்கன்னு கேட்டேன்” என்றார். அவர் ‘சிவாஜி’ என்று உச்சரித்த போது அவர் தலை எம்.ஜி.எம். சிங்கம் போல ஒரு முறை பக்கவாட்டில் சிலிர்த்தது.
தயாரிப்பாளர் “சிவாஜி வர்லீங்க. அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை திருச்சிகிட்ட எடுத்தாச்சு. அவரு மெட்ராசுக்குத் திரும்பிப் போயாச்சு. இந்த ஊர்ல ரொம்ப நாளு முன்ன எங்க அத்தை கொஞ்சகாலம் இருந்தாங்க. சின்னப்புள்ளயில இந்தக்கோயிலுக்கு வந்திருக்கேன். இந்தப்பக்கம் போறச்ச செண்டிமெண்டா இதைப் படத்துல சேக்கணும்னு தோணிச்சு. இந்தக் கோயில்ல அய்யிரு இல்ல. அதான் பக்கத்து ஊர் லேருந்து உங்கள அழச்சிட்டு வரலாம்னு இந்த கணேசன் சொன்னாரு. சிவாஜி சாரை உங்களுக்கு தெரியுமா? அவருக்கு ஜாதகம் பார்த்து குறிச்சதுல பழக்கமா” என்றார்.
‘சிவாஜியைத் தெரியுமா’ என்று கேட்டது ஆராவமுதனுக்கு ஆத்திரமூட்டியது. தயாரிப்பாளரை ஒரு புழுவைப்பார்ப்பது போல பார்த்தார். “பூசாரி! முதலில் உன் ஜாதகத் தைக் கணித்துக்கொள்” என்ற வசனம் வாயிலிருந்து வந்தது. எஸ்வி உடனே “பராசக்தி”ல என்றான். அதாவது சிவாஜி கணேசனை பராசக்தி பட காலத்திலிருந்தே தெரியும் என்பதாக அவர் குறிப்பாக உணர்த்தியது எனக்கும் எஸ்விக்கும் மட்டுமே புரிந்தது. மற்றவர்கள் சற்றுக் கலவரத்துடன் அவரைப் பார்த்தார்கள்.
ஆராவமுதன் இரட்டை மாட்டு வண்டி யோட்டியை நோக்கிக் கையசைக்க, குறிப் பறிந்து அவர் வண்டியை அருகில் கொண்டு வந்தார். ஆராவமுதன் கூட்டத்தைச் சுற்றிப் பார்த்து கையைத் தூக்கி “நான் போயிட்டு வரேம்பா, எல்லாரும் ‘நன்னா’ இருங்கோ” என்று இகழ்ச்சியான குரலில் சொல்லி வண்டியில் ஏறினார்.
“பசங்களா, வரீங்களாடா” என்று எங்களைப் பார்த்துக் கத்த, நானும் எஸ்வியும் வண்டியில் தாவி ஏறிக் கொண்டோம். வண்டி எங்கள் கிராமத்துக்கு விரைந்தது. போகும் வழியில் ஆராவமுதன் கொஞ்ச நேரம் பேசாமல் கோபமாக இருந்தார். “மாமா. உங்களுக்குப் போய் அர்ச்சகர் கெட்டப் இல்லனு தள்ளிட்டது எனக்குக் கொஞ்சம் கூடப் புடிக்கல” என்று தூபம் போட்டான் எஸ்வி.
“எவ்ளோ வேதம், சாஸ்திரம் வாசிச்சிருக்கேன். மடப்பயலுக. இவனுகளைச் சொல்லிக் குத்தமில்லடா. சிவாஜிக்குச் சொல்லி அனுப்பறேன். அவன் அவங்களுக்கு சரியா ஆப்பு வெப்பான்” என்றார்.
எஸ்வி “போயும் போயும் முனியன அர்ச்சகரா போட்டது தப்பு மாமா. என்ன சொல்றீங்க?” என்றான்.
மறுபடியும் ஆராவமுதன் முகம் கோபமடைந்தது.
“வைஷ்ணவக்கோயில். விபூதி பிரசாத மாம்... வேடிக்கைதான். தெற்கே பாத்து தாலி கட்ட வெக்கறாண்டா. முனியனுக்குப் போட்ட பூணலைப் பாத்தியாடா? பிராசீன விதி. வலது தோள்ல போட்டிருக்காண்டா. கவனிச்சயா? அவன் என்ன பிதுர் கார்யமாடா பண்றான் அங்க. என்னடா படம் எடுக்றானுங்க? அந்தப் பொண்ணு கூச்ச நாச்சம் இல்லாம அனாச் சாரமா விரலைப் பல்லால கடிச்சிண்டு இளிக்கறது. முனியன் வாயில ஒழுங்கா ஒரு ஆசீர்வாதம் வரல. கால்ல விழுந்து நமஸ் காரம் பண்றவாளுக்கு ‘சதமானம் பவதி, சதாயிஷ்யுகு.. ‘வாவது சொல்லத் தெரிய வாணாம்?”
அவர் சொன்ன சம்ஸ்கிருதம் எனக்குப் புரிந்ததோ என்ற பாவனையில் எஸ்வி என்னைப்பார்த்தான்.
பள்ளியின் காலாண்டுப் பரிட்சையில் சம்ஸ்கிருதத்தில் எஸ்விக்கு நூத்துக்கு ஒரு மதிப்பெண்ணும் எனக்கு நூத்துக்கு ஏழு மதிப்பெண்ணும் கிடைத்திருந்தது. அதனால் எஸ்வி என்னை ஒரு காளிதாசனாகவே நினைத்திருந்தான். எனக்கும் அவர் சொன்னது புரியவில்லை.
திடீரென்று, “மானங்கெட்டவனே” என்றார்.
“வீரபாண்டிய கட்டபொம்மன்ல... சிவாஜி ஜாவர் சீதாராமனுக்கு சொல்றாரு” என்றேன் நான். எஸ்வியை முந்திக்கோண்டு சொன்னதில் எனக்கு மகிழ்ச்சி. ஆராவமுதன் மறுப்பில் தலையசைத்தார்.
“அதச்சொல்லலேடா. அந்த புரட்யூசரைச் சொன்னேன். நான் வண்டியில வந்ததை பார்த்திண்டுருந்தான். என்னைக் கார்ல அழச்சிட்டு கொண்டு விடவாங்கறான். இவன் கார்ல சவாரி செய்யவாடா பெருமாள் கல்யாணத்தை கான்சல் பண்ணிட்டு இங்க வந்தேன்? இவனுகளைச் செருப்பால...”
“மாமா, நீங்க பெரியவங்க. உங்க வாயால வெய்யாதீங்க. அவாளுக்குத் தெரிஞ்சது அதுதான்” எஸ்வி அவரை சாந்தப்படுத்தினான். குழந்தையையும் கிள்ளிவிட்டுத் தொட்டிலையும் ஆட்டுவது எஸ்விக்குக் கைவந்த கலை.
கோயிலில் வாசலில் இறங்கினோம்.
ஆராவமுதன் “வெங்கட்ராமா... போயி முன்சீப் வீட்ல சொல்லி கல்யாண உத்சவம் பண்ண நான் வந்தாச்சு. சாயங்காலம்வரை காத்திண்டு இருக்க வேணாம். சீக்கிரமாக் கூட பண்ணிடலாம்னு சொல்லிடறயா?” என்றார்.
எஸ்வி “மாமா. சொல்ல மறந்திட்டேன். இன்னிக்குச் சாயங்காலம் அவங்களுக்கு செளகரியப் படாதாம். அப்புறமா இன்னொரு நாளக்கிச் சொல்லி அனுப்பறேன்னு காலை யில நான் போனபோதே சொன்னாங்க...”
“போச்சு. பூஜை வருமானமும் போச்சு. என்னை விட்டுட்டு சினிமால நடிக்கவாடா போறேன்னு வேணுகோபாலன் கோவிச் சுண்டுட்டான். போகட்டும். நீ நாளக்கி பேப்பர் எடுத்துண்டு வா. சிவாஜிக்கு விலாவரியா லெட்டர் எழுதணும். சில்லரை தரேன் போஸ்ட் பண்ணிடு” என்றார்.
எஸ்வி தலையாட்டிக் கொண்டு, “சொல்லுங்கள் அரசே, சூறையாடிவிடுகிறோம்” என்று மனோகரா சிவாஜி பாணியில் சொன்னதை அவர் ரசிக்கவில்லை.
இறுகிய முகத்துடன் அவர் கைகளைப் பின்னால் கட்டிக்கொண்டு கோயிலுக்குள் போனார். போகும்போது சிவாஜி குரலில் அவர் சொன்ன வசனம் “எல்லாம் வெறுங் கதையாய், பழங்கனவாய், காட்டில் ஒளிர்ந்த நிலவாய், கடலில் பொழிந்த மழையாய், சேற்றிலிட்ட சந்தனக் குழம்பாய், வெட்ட வெளியில் புகைத்த சாம்பிராணியாய்ப் போய்விட்டதே....ஏ..ஏ..ஏ.” எந்தப்படத்தில் என்று தெரியவில்லை. கேட்கவும் எங்களுக்கு தைரியமில்லை.
“பாவம் அவருக்கு நடிக்க சான்ஸ் கிடைக்கல” என்றேன்.
“போனால் போகட்டும் போடா, இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?” என்றான் எஸ்வி.
“அவர் காதில் விழுந்துடப்போறது, மெதுவாப் பேசு” என்று நான் அடக்கினேன்.
நானும் எஸ்வியும் வீட்டுக்கு போகும்போது என் சந்தேகத்தை வெளியிட்டேன், “அவர் சிவாஜிகிட்ட சான்ஸ் கேட்டு எழுதின லெட்டர நீதானேடா போஸ்ட் பண்ணினே?” எஸ்வி சிரித்தான். “லெட்டரக் கிழிச்சு போட்டுட்டேன். அவர் குடுத்த காசுல ஒரு போஸ்ட் கார்டு வாங்கி ஒரு சிவாஜி போட்டோ அனுப்பச்சொல்லி சிவாஜி ரசிகர் மன்றத்துக்கு அனுப்பிட்டேன். அதான் அவனுக போட்டோ அனுப்பினாங்களே. பாக்கிக் காசுக்கு படம் பாத்தாச்சு.”
“சே..சே.. அது தப்புடா”
“பின்ன எப்படி உன்னை மேட்டினி ஷோ சினிமா பாக்க அழைச்சிண்டு போனேன்னு நினைக்கிற?”
“அய்யோ... அப்ப நாளக்கி அவர் குடுக்கற காசை?”
எஸ்வி சிரித்துக் கொண்டே சொன்னான். “முதல்ல கோமதி டாக்கீசுல என்ன படம் ஓடுதுன்னு விசாரிக்கலாம்” எஸ்வி திரும்பி வந்தான். “இப்ப நிம்மதியா பேசலாம்டா.”
“நம்ம பால்ய நண்பர்கள் இப்ப எங்க இருக்காங்க?”
“சவுரி திருச்சிகிட்ட ஒரு கோயில்ல அர்ச்சகர். கலியன் கன்னியாகுமரிகிட்ட ஏதோ கட்சியில மாவட்டச் செயலாளரா இருக்கானாம்.”
“ஆராவமுதன் இப்ப எங்க இருக்கார்னு தெரியுமா?”
“சென்னையில பெரிய ஆளா இருக்காராம்... திரைப்படத் துறையில பெரிய புள்ளியாம். சினிமா எல்லாம் பைனான்ஸ் பண்றாராம். சினிமால நடிக்கிற புரோகிதர்கள் சங்கத் தலைவராயிட்டாராம். ரஜனி எடுக்கற படத்துல ஒரு ரோல் செய்யப்போறதா பத்திரிக்கையில கிசுகிசு படிச்சேன்.”
எல்லே சுவாமிநாதன் லாஸ் ஏஞ்சல்ஸ் |