அனிதா, அஞ்சலியின் அரங்கேற்றம்
அனிதா சுந்தரமூர்த்தி, அஞ்சலி சுந்தர மூர்த்தி இரட்டையரின் நாட்டிய அரங்கேற்றம் கடந்த ஜுலை 22, 2006 அன்று டல்ஸா நகர ''தொரு டொன்ஸ்ட்ரேஷம் அகாடமி'' அரங்கில் இனிதே நடந்தது. சகோதரிகள் ஐந்து வயதிலேயே கோயம் புத்தூர் சிவாஞ்சலியில் (Temple of Fine Arts) ஆரம்பப் பயிற்சியையும், கடந்த எட்டு ஆண்டு களாக நாட்டிய உலகில் நன்கு அறிமுகமான குரு ஹேமா குமாரிடம் தொடர்ந்து பயிற்சியை பெற்றவர்கள். தற்போது டல்ஸா செளத் இன்டர்மீடியட் உயர்நிலைபள்ளியில் ஸோஃபமர் மாணவிகள். மாணவிகள் இருவருமே பியானோ வாசிப்பவர்கள். மேலும் புரோக்கன் ஏரோ ஹை ஸ்கூல் ஆர்க்கெஸ்ட்ரா குழுவில் அங்கத்தினர்களுமாவர். அரங்கேற்றம் சம்பிரதாய முறைப்படி குரு வணக்கத்துடன் ஆரம்பித்தது. அடுத்து கணேச, கார்த்திகேய மற்றும் நடராஜ கவுத்துவத்துடன் தொடர்ந்தது. சகோதரி களின் முகபாவமும், காலடியும் தத்ரூபமாக அமைந்ததை சபையோர் கண்டுகளித்தனர்.

அடுத்து வசந்தா ராகத்தில் அமைந்த ஐதீஸ்வரம், சகோதரிகளின் சுத்தமான அடவுகளை வெளிப்படுத்தியது. தொடர்ந்து ஸ்ரீராமனின் கம்பன் கண்ட நற்பண்புகளை அனிதாவின் அபிநயம் நளினமாக கண்முன் கொண்டு வந்து நிறுத்தி சபையோர்களை மெய்மறக்க செய்தது. ஆனந்தபைரவி ராகத்தில் அமைந்த ''சகியே இந்த வேளையில்'' இரட்டையரின் வர்ணமும், மோகனராகத்தில் ஆனந்த தாண்டவ பதத்திற்கு அஞ்சலியும், தாயே யசோதா பதத்திற்கு அனிதாவின் அபிநயமும் அவையோரை மகிழ வைத்தன. பெஹாக் ராகத்தில் ராஜராஜேஸ்வரியின் தில்லானாவிற்கு சகோதரிகள் தாளம் பிசகாமல் ஆடியது கண்டு அரங்கமே கரவொலியில் அதிர்ந்தது.

தில்லானாவை அடுத்து மங்களப் பாடலுக்கு முன்பு சகோதரிகளின் குறத்தி நாடகம். உணவுக்காக குறிச் சொல்லி பிழைக்கும் காட்சி தத்ரூபமாக இருந்தது. அனைவரது பாராட்டுக்களையும் பெற்றது. ஒவ்வொரு நடனத்திற்கும் ஏற்ற ஆடை அலங்காரங்களின் மாற்றம் மின்னல் வேகத்தில் நடந்ததை கண்டு எல்லோரும் வியந்தனர். குருவின் சிறந்த பயிற்சியும், மாணவிகளின் அயரா உழைப்பும் ஈடுபாடும் நிகழ்ச்சியின் வெற்றிக்கு அடிகோலின.

சுதேவ் வாரியாரின் குரலோசையும், ஹேமா குமாரின் நட்டுவாங்கமும், சுதாமணியின் மிருதங்கமும், கிருஷ்ணபிரசாத்தின் புல்லாங் குழலும், ஒருங்கிணைந்து நிகழ்ச்சிக்கு பக்கபலமாக இருந்தது.

ப்ரியா ராஜு அறிவிப்பாளராக நிகழ்ச்சியை சுவைப்பட சித்தரித்தது, ஸ்ரீனிவாச சுந்தர மூர்த்தி தனக்கே உரித்த பாணியில் வரவேற்றது, அருண் பாலகிருஷ்ணன் நன்றி வழங்கியதும் இந்தியாவின் பிரபல உணவு களை வழங்கியதும், அனைத்தும் செவ்வனே நிகழ்ந்தன. அரங்கேற்ற நிகழ்ச்சி எல்லோரு டைய மனதிலும் நிறைந்து நின்றது என்பதில் ஐயமில்லை.

வி.எஸ். சுப்ரமண்யன்

© TamilOnline.com