வார்த்தை சிறகினிலே
நம்ம வேலைய நாம ஒழுங்கா செஞ்சா, நம்மைச் சுத்தி இருக்குற நல்லவங்க நமக்காகச் செய்யுற நல்லதுதாங்க அதிர்ஷ்டம். நல்லவங்க எப்பவும் நல்லது செய்வாங்க. ஆனா, நம்ம வேலையை நாம ஒழுங்கா செஞ்சிருந்தாதான் அந்த நல்லது அதிர்ஷ்டமா மாறும்!
- இளவழகி, உலகக்கோப்பை கேரம் சாம்பியன்

பரபரப்பான சென்னையில், அண்ணாசாலையில் ஒருநாள் இரவு மூன்றுமணி அளவில் தேநீர் குடிக்கக் கடை தேடி நடந்து கொண்டிருந்தேன். ஒரு எலி சாலையின் நடுவில் நின்றபடியே யாரோ சாப்பிட்டு மீதமாகியிருந்த மீன் துண்டைத் தின்று கொண்டிருந்தது. நிமிஷத்துக்கு ஒருமுறை தலையைத் திருப்பிப் பார்த்துக் கொள்வதும், பிறகு வாலை ஆட்டியபடியே மிச்சம் இருந்த மீனைக் கொறித்துத் தின்பதுமாக இருந்தது. பகலில் ஒருபோதும் இந்தக் காட்சி சாத்தியமானதே இல்லை.

பகல் - உலகின் பேரியக்கம். இரவு - அலை அடங்கிய கடல். அதன் உள்ளே எண்ணிகையற்ற இயக்கங்கள் உள்ளன. ஆனால், அவை நம் கண்ணில் தென்படுவதில்லை. இரவின் வாசனை ஒவ்வொரு நகரிலும் ஒவ்வொரு விதமாக உள்ளது. ஒவ்வொரு நாளும் ஓர் அடர்த்தியும் நறுமணமும் கொண்டு இருக்கிறது.
- எஸ். ராமகிருஷ்ணன்

அரவிந்த்

© TamilOnline.com