தெரியுமா?
Go4Guru வழங்கும் இலவச இணைய வகுப்புக்கள்

மாணவ சமுதாயத்தின் கோடை விடுமுறையைப் பயனுள்ளதாக்க Go4Guru.com ஒருமாத இலவச இணையவழி வகுப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

வாஷிங்டன் DCயிலிருந்து இயங்கிவரும் Go4Guru.com அனைத்து பள்ளிப் பாடங்கள், இந்திய, வெளிநாட்டு மொழிகள், சங்கீதம் போன்றவற்றை ஒரு மாத காலத்திற்கு இலவசமாக வழங்குகிறது. இதன்மூலம் மாணவர்கள் பள்ளிப் பாடங்கள், மொழிப் பாடங்கள் ஆகியவற்றில் தமது திறன்களை வீட்டில் இருந்தபடி மெருகேற்றலாம். இசையார்வம் கொண்ட மாணவர்கள் இலவசமாகக் கர்நாடக, ஹிந்துஸ்தானி வாய்ப்பாட்டு கற்பதுடன், வயலின், கிதார், வீணை, கீ-போர்டு, தப்லா போன்ற கருவிகளையும் கற்கலாம்.

மொழிகள் பயில விரும்புவோர் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஃப்ரெஞ்சு, ஸ்பானிஷ் போன்றவற்றைக் கற்கலாம். SAT, ACT போன்ற தேர்வு எழுத விரும்புவோர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தித் தயார் செய்யலாம்.
*****


வென்றார் காவ்யா சிவசங்கர்

மிகப் பிரபலமான ஸ்க்ரிப்ஸ் ஸ்பெல்லிங் பீ போட்டியில் தேசிய அளவில் வெற்றி பெற்றிருக்கிறார் காவ்யா சிவசங்கர். இவர் கன்சாஸ் மாநிலத்தைச் சேர்ந்த 13 வயது மாணவி. தென்றல் வாசகர்களுக்கு இவர் புதியவரல்ல. 2007ம் ஆண்டு இறுதிச் சுற்றில் 8வது இடத்தைப் பிடித்த பொழுது தென்றலில் அவரது பேட்டி இடம் பெற்றது (பார்க்க: ‘ஸ்பெல்லிங் பீ தேனீக்கள்', தென்றல், ஆகஸ்ட், 2007). அவருக்கு 40,000 டாலர் மதிப்புள்ள பரிசை வென்று தந்தது Laodicean என்ற சொல். முந்தைய ஆண்டுகளில் 10, 8, 6 என்ற இடங்களைப் படிப்படியாகப் பிடித்து முன்னேறிய காவ்யாவின் உச்சம் இந்த ஆண்டின் முதல் இடம்.

இறுதிச் சுற்றில் காவ்யாவைத் தவிர 6 இந்திய அமெரிக்க மாணவர்கள் கலந்து கொண்டனர். ரம்யா ஆரோப்ரேம் என்ற சான் ஹோசேயைச் சேர்ந்த மாணவியும் இறுதிச் சுற்றை எட்டியவர்களில் ஒருவர். ரம்யா தமிழிலும் மிகுந்த ஆர்வம் உடையவர். அனைத்துப் போட்டியாளர்களும் ஆங்கிலத்தில் மட்டும் இன்றிப் பிற மொழிகளைக் கற்பதிலும், விளையாட்டுக்களிலும் பிற கலைகளிலும் சிறந்து விளங்குகின்றனர்.

ஸ்பெல்லிங் பீ சாம்பியன் காவ்யா சிவசங்கருக்கும், பல்வேறு கடினமான நிலைகளைத் தாண்டி இறுதிச் சுற்றை அடைந்த அனைத்துச் சிறாருக்கும் தென்றல் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறது. காவ்யாவை அடுத்த இதழில் சந்திக்கலாம். இறுதிச் சுற்றை எட்டிய இந்தியச் சிறுவர்கள் பற்றிய விபரங்களும் அடுத்த இதழில் வெளிவரும்.

திருமலை ராஜன்
*****


கனடாவில் டியூலிப் திருவிழா

ஒரே இடத்தில் 300,000 டியூலிப் மலர்களைக் கண்டபோது ஒரு நிமிடம் மனம் அதை நம்ப மறுத்தது! அங்கே பறந்து கொண்டிருந்த கொடியில் கூட டியூலிப் பூ சிரித்துக் கொண்டிருந்தது. ‘கமிஷனர் பார்க்' என்ற அந்தப் பூங்காவில் நடந்தால், முன்னே, பின்னே, வலப்புறம், இடப்புறம் - எங்கே பார்வை பட்டாலும் சிவப்பும், வெள்ளையும், மஞ்சளும், நீலமுமாக டியூலிப் பூக்கள்தான்.

மஞ்சள் இதழ் விரித்த 'மோனட்', இளம் ஊதாவில் 'பிரின்ஸஸ்', 'ஸ்கார்லட்'டின் ரத்த வண்ணச் சிலிர்ப்பு. நடந்து நடந்து கால் வலித்தால் எதாவது கொறிக்க வாங்கிக்கொண்டு அமர்ந்தால், அருகே வாத்தியக் குழுவின் இசை. பள்ளி மாணவர்கள் 25 பேர் கொண்ட குழு ஒன்று அன்று வாசித்தது. ‘மமா மியா'விலிருந்து, ‘Sound of Music' அங்கே ஒலிக்க, வந்திருந்தவர்கள் மட்டுமல்ல, டியூலிப்களும் உற்சாகமாகவே ஆடின. டவூஸ் லேக்கில் மட்டுமல்ல, இன்னும் 6 இடங்களிலும் டியூலிப் காட்சிகள் உண்டென்று ஒரு நோட்டிஸ் சொல்லியது.

சிறிது தூரத்தில் உள்ள லான்ஸ்டவுண் பார்க்கில் 'ஒலிம்பிக்' தோட்டத்தில் பன்னாட்டு கலாசார விழா ஒன்று நடந்து கொண்டிருந்தது. இத்தாலி, பிரான்ஸ், கிரிஸ், சீனா, குவாட்டமாலா எனப் பல நாடுகளின் கலைநிகழ்ச்சிகளும் மேடையில் அரங்கேறிக் கொண்டு இருந்தன. கூடவே, அவரவர் நாட்டு உணவுகளையும் அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தார்கள். வெளியே மஞ்சள் நிற 'ஒலிம்பிக்' டியூலிப்களின் நடுவே விலம் சாக் வடித்த ஒலிம்பிக் தீப்பந்தம் ஏந்திய இரு வீரர்களின் ‘ஒளியைப் பகிருங்கள்' என்ற சிலை. 2009 முதல் ஒலிம்பிக் தீப்பந்தம் வான் கூவாரிலிருந்து இங்கும் வந்து செல்லுமாம்.

வழிநெடுக நதிக்கரை ஓரமாக பல்லாயிரக்கணக்கான டியூலிப்களை வியந்தபடியே ஆட்டவா சிடிஹால் போய்ச் சேர்ந்தோம். அங்கே கண்ணடிக் கூடாரத்தில் தினமும் கலைநிகழ்ச்சிகள். மே 1 முதல் 18வரை நடைபெற்ற டியூலிப் விழா வசந்தத்தின் வருகைக்குக் கட்டியம் கூறும் விழா. இரண்டாம் உலகப்போரில் டச்சு மன்னருக்கு அடைக்கலம் தந்தது கனடா. அவர்கள் ஆட்டவாவில்தான் இருந்தார்கள். அங்குதான் இளவரசி ஜுலியானா பிறந்தார். அந்த நன்றிக்காக 10,000 டியூலிப் கிழங்குகளை ஆம்ஸ்டர்டாமிலிருந்து பரிசாக அளித்தார் ஜுலியானா. அவை இன்று ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பூக்களாக மலர்ந்துள்ளன. ஆம்ஸ்டர்டாமில் போய் மலர்களைப் பார்க்க முடியாதவர்கள் ஒருமுறையாவது ஆட்டவா டியூலிப் விழாவுக்கு வந்து பார்க்க. சொல்லில் அடங்கா சொர்க்கம் அது!

அலமேலு மணி.
*****


டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமுக்கு ஹூவர் பதக்கம்

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களுக்கு ஏப்ரல் 28, 2009 அன்று நியூயார்க்கிலுள்ள கொலம்பியா பல்கலைக் கழகத்தில் ஹூவர் பதக்கம் வழங்கப்பட்டது. அவர் மனிதகுலத்துக்குச் செய்துள்ள மாபெரும் சேவைகளுக்காக இந்த விருது வழங்கப்பட்டது. டாக்டர் கலாம் இந்த விருதைப் பெறும் முதல் ஆசியராவார். மூன்று முன்னாள் அமெரிக்க அதிபர்கள் இந்த விருதினைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது. அமெரிக்க எந்திரப் பொறியியலாளர் சங்கம் இந்த விருதை 1930 முதல் ஆண்டுதோறும் வழங்கி வருகிறது.

© TamilOnline.com