அதே உலகம்
கறுப்பு பயப்படும் இருட்டு. எதுவும் தென்படவில்லை. இமைகளைத் திறக்கவும் இயலவில்லை. கரங்களை நீட்டி துழாவவும் பயம். என்ன தட்டுப்படுமோ... நடுக்கம்.

'ஊய் ஊய்' என்று தூரத்தில் ஒரு ராட்சதப் பறவை ஓயாமல் கூவிக்கொண்டிருந்தது. படார் படாரென்று கதவுகள் அடித்துக்கொண்டன. காதுகளைப் பொத்திக்கொள்ள இரண்டு கைகளும், கண்களைப் பொத்திக் கொள்ள இரண்டு கைகளும் கொடுத்திருக்கலாம் கடவுள்.

அசையாமல் இருந்தேன். குழப்பமான ஓசைகள் ஒரு வழியாக ஒடுங்கின. ஓய்ந்ததா... ஓய்ந்ததா எல்லாம்!
ooo

இப்போது, நிசப்தம்... இதுவும் பயங்கரம்! சத்தமில்லாமல் இருப்பதும் பயங்கரந்தான்! புயல் கடந்துவிட்டதா?

அம்மா...? அம்மா எங்கே? வெளிச்சம் தெரிகிறது, முகங்கள்...! யார் யாரோ இருந்தார்கள். அம்மா... அம்மா எங்கே?

"ரஃபி... ரஃபி..."

அம்மாதான், அம்மாவின் குரலேதான்.

இல்லை..!

##Caption##அயான் அழைக்கிறான். அயான்தான் அழைக்கிறான்.

"எங்கடா நேத்து ஆரஞ்சுச் சுளைகள் கொடுத்தேனே எங்கேடா...?"

அய்யோ... அயானுக்குப் பசிக்குதா. ஆரஞ்சுச் சுளைகளை என்ன செய்தேன். நினைவில்லையே!

அயானுக்கு பசிக்குதே, என் உயிர் நண்பனுக்குப் பசிக்குதே. இருடா அயான்... பாக்கெட்டுக்குள் கையை நுழைத்தேன்.

சில ஆலிவ் காய்கள் சிக்கின. பார்த்துப் பார்த்துச் சேகரித்த கருங்கற்கள் தட்டுப்பட்டன. இழுத்து வீசினா, சும்மா மைல் தூரத்துக்கு பறக்கும்ல...!

"அயான், ஆலிவ் காய் வேணுமாடா?"

"ஆரஞ்சுச் சுளைகள் எங்கேடா... நீ சாப்பிட்டியா?"

அய்யோ என் நண்பனுக்கு பசிக்குதே! நெஞ்சு பதறியது, இதயம் வலித்தது.

என் உயிர் நண்பன் அயான். எனக்கு அவன் நிழல் போன்றவன், அவனுக்கு நான் நிழல்.

"ரெண்டு பேரும் ஒரே வயித்துல பொறந்திருப்போம்டா, எங்கம்மாதான் போனா போகட்டும்னு உங்க வீட்டுக்கு உன்னை தத்து கொடுத்திருப்பாங்க," கலகலவென்று சிரிப்பான் அயான்.

"டேய் நேத்து முடிவெட்டப் போன எடத்துல என்னா ரகளை பண்ணிபுட்டடா நீ. மானத்த வாங்கிபுட்டடா. இனி எங்கூட வராத, எந்த எடத்துக்கும், புரிஞ்சுதா?"

"சரிடா, ஆரஞ்சுச் சுளைகள் தாடா"

"தரேன்டா. அவசரப்படாதடா. உனக்காக என் உயிரையே கொடுப்பேன்டா. ஆரஞ்சுக்குப் போய் சும்மா கத்துறியே!"

"சும்மா சொல்லாதடா, இப்ப கேட்டத கொடுப்பியா மொதல்ல?"

"தர்றேன்டா. கொஞ்சம் பொறுடா...."

ஆனால், அயான் பொறுக்கவில்லை.

அவன் தூங்கிப்போனான். பச்சைப் போர்வையொன்றைப் போர்த்திக்கொண்டு அயான் தூங்கிப்போனான்!
ooo

ரெண்டு பேரும் எப்பவும் போல ஒண்ணாத்தான் போனோம், அவனுக்கு நிழலா நானும் எனக்கு நிழலா அவனும்.

மதிய வெயிலா காஞ்சுகிட்டிருந்தோம்.

"டேய் அயான், கொடி எடுத்துகிட்டு போறவங்க சொல்றதெல்லாம் உண்மைதான்டா. போனவாரம் எங்க மாமா வீட்டுக்குப் பின்னாடி இருந்த பேரிச்சங்காடு மொத்தமா அழிஞ்சுருச்சுடா. இப்படியே போனா நம்மள மொத்தமா முழுங்கிப் புடுவாங்கடா."

"தினமுந்தான் கல்லு வீசறோம், இவனுங்களுக்கு புத்தி வரமாட்டேங்குதேடா. சொல்லாம கொள்ளாம வந்துடறாங்கடா. இல்லேன்னா நம்ம ஒரு வழி பண்ணிருவோம்ல."

"மொத்தமா ஒழிச்சுப்புடனும்டா ரஃபி. இந்த வம்பே வேணாம். மொத்தமா ஒழிச்சுப்புடனும்."

"பள்ளிக்கூடம் பக்கமே போறதில்ல இனிமே. ஒரு நாளைக்கு ஒருத்தன் மண்டையையாவது பொளந்துரனும்டா. சிறுசா இருந்தாலும் கூறான கல்லா எடுடா. சும்மா பீச்சுகிட்டு கொட்டணும்டா அவனுங்க மண்டை ஓடு. கல்லுக்கா பஞ்சம் வெச்சானுங்க, எத்தனை வீடுகளை உடைச்சு தள்ளியிருக்கானுங்க."

அயானோட அக்கா வீட்டு வாசலிலே காத்திருந்தோம் அன்றைக்கு.

##Caption## டாங்குகள் கடக்கும் நேரம்தான். சும்மா போனானுங்கன்னா சரி. கத்திகிட்டே போவானுங்க. தாண்டிப் போன பிறகு சும்மா சுள்ளுன்னு பறக்கும் எங்க கல்லு.

அப்ப, திடீர்னு ஏதோவொரு ஒரு குப்பி வந்து பக்கத்துல விழுந்தது. குபுகுபுன்னு புகை கிளம்பிருச்சு. கண்ணெல்லாம் எரிச்சல் கண்டுருச்சு. மூச்சு திணற ஆரம்பிச்சுது.

வீட்டுக்குள்ளெருந்து அக்கா ‘ஓ'ன்னு கதறினாங்க. என்ன நடந்துச்சோ தெரியல. மறுநொடி என்னவோ ஒரு துணி மூட்டைய வெளியே வீசுனாங்க அக்கா.

அயான் மூட்டையை தாவிப் பிடிச்சுகிட்டான்.

துணிக்குள்ள புள்ள!

"டேய் ரஃபி கொழந்தடா.... கொழந்த"

நானும் அயானும் புள்ளைய அணைச்சுக்கிட்டு தலைதெறிக்க ஓடினோம். அதுக்கப்புறம் அக்காவ காணவே இல்ல.

காலையில அயான் கொடுத்த ஆரஞ்சுச் சுளைகளைக் காணோம். ஓடுன வேகத்துல எங்க விழுந்துச்சோ தெரியல.

அய்யோ, என் நண்பனுக்கு பசிக்குமே!

டேய் அயான் இருடா... எங்கேயும் போயிடாதடா. நான் உனக்கு ஏதாச்சும் கொண்டு வந்து தர்றேன்டா, எங்கேயும் போயிடாதடா!

ஆனால், அயான் காத்திருக்கவில்லை. போய்விட்டான்.

அக்கா வீட்டிலிருந்து ஓடும்போது அயான் சாய்ந்து விட்டான். குண்டு பட்டுவிட்டது.

குழந்தையை என்கிட்ட கொடுத்துட்டு...

"நிக்காத ரஃபி ஓடு ஓடு"ன்னு சொன்னான்.

மார்போடு குழந்தையை அணைச்சிகிட்டு முடிஞ்ச வரைக்கும் ஓடினேன். கண்ணு இருண்டு போச்சு. அப்புறம் என்ன நடந்துச்சோ தெரியாது.
ooo

"போதும்டா இனி இந்த நாடே வேணாம்டா ஒங்களுக்கெல்லாம். இனி பொறப்புன்னு எடுத்தாலும் சொர்க்க பூமியில பொறந்துருங்கடா. வேற நல்ல மண்ணுல நிம்மதியா பொறந்துருங்கடா...." அயானோட அம்மா ஓயாம அழுதாங்க.

நானும் பச்சைப் போர்வையைப் போர்த்திகிட்டு ராத்திரியெல்லாம் அயான் பக்கத்துலேயே படுத்து கிடந்தேன்.

"டேய் அயான் நம்ம ஓரே வயித்துலதான்டா பொறந்திருப்போம் எங்கம்மாதான் போனாப் போகட்டும்னு உன்னை தத்து கொடுத்திருப்பாங்க..."

இருள் சூழ்ந்தது. அசையாது அவன் பக்கத்திலேயே படுத்திருந்தேன்.

பிறகு மெல்லக் கையை நீட்டித் துழாவினேன்.... சின்ன விரல்கள் தட்டுப்பட்டு பிசுபிசுத்தன.

அக்கா குழந்தையை இன்னுமா தூக்கி வெச்சிருக்கேன்?

"ரஃபி...." அயான் அழைத்தான், நிச்சயமாக அயானின் குரலேதான்.

"டேய்... ரஃபி நீ எப்பவும் சொல்றாப்பல ஒண்ணா பொறந்திருக்கோம்டா. அம்மா சொன்னா மாதிரி சொர்க்கத்துல பொறந்திருக்கோம்டா."

இருவரும் சந்தோசத்தில் சிரித்தோம்.

அப்போது, ஏதோவொரு மொழியில் ‘மும்பையின் நட்சத்திர ஓட்டல்களில் தாக்குதல்!' என்று ஓர் ஒளித்திரை பேசியது!

"நண்பா, இது வேற கிரகமில்லடா... அதே உலகம்தான்! அதே உலகம்தான்!"

அயான் இப்போது அழத் துவங்கினான்.

- கற்பகம் இளங்கோவன்,
மிச்சிகன்

© TamilOnline.com