கே.பாலாஜி
பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான கே.பாலாஜி மே 2, 2009 அன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 74.

தபால்துறையில் வேலைபார்த்த பாலாஜி தனது நடிப்பார்வத்தால் நாடகங்களில் நடிக்கத் துவங்கினார். அங்கிருந்து திரைத் துறைக்குச் சென்றார். ‘மணாளனே மங்கையின் பாக்கியம்', ‘சகோதரி', ‘படித்தால் மட்டும் போதுமா', ‘பலே பாண்டியா', ‘என் தம்பி', ‘ஆண்டவன் கட்டளை', ‘போலீஸ்காரன் மகள்' போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்தார். கதாநாயகனாக, வில்லனாக, குணச்சித்திர நடிகராக தமிழ் திரையுலகில் பல்வேறு வேடங்களை ஏற்று நடித்த இவர், அதன்பின் திரைப்படங்கள் தயாரிக்கத் தொடங்கினார். சுஜாதா சினி ஆர்ட்ஸ் எனும் தனது நிறுவனத்தின் மூலம் பல வெற்றிப் படங்களைத் தந்தார். ஹிந்தி, தெலுங்கு, மலையாளப் படங்களை மறு தயாரிப்பு செய்து பல வெற்றிகளைக் குவித்தார்.

சிவாஜியை வைத்து அதிகப் படங்கள் தயாரித்தவர் பாலாஜிதான். இவர் தயாரித்த 'பில்லா' ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் அந்தஸ்தைப் பெற்றுத் தந்தது. பாலாஜிக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். மலையாளத்தில் புகழ்பெற்ற நடிகரான மோகன்லால் இவருடைய மருமகன். மறைந்த கலைஞருக்குத் தென்றல் அஞ்சலி செலுத்துகிறது.



© TamilOnline.com