புலியைக் கொன்ற மாவீரன்!

ஒலி வடிவத்தில் கேட்க
- Audio Readings by Aravind Swaminathan


குழந்தைகளே, இங்கே வாங்க எல்லோரும். இந்தக் கதையக் கேளுங்க!

ஒரு கிராமத்தில் ஒரு வேட்டைக்காரன் இருந்தான். பெயர்தான் வேட்டைக்காரனே தவிர, உண்மையில் அவனுக்கு வேட்டை என்றாலே பயம். ஆனால், தினந்தோறும் தான் காட்டுக்கு வேட்டைக்குச் செல்வதாகவும், அங்குள்ள மிருகங்களை வேட்டையாடி வருவதாகவும் பொய் கூறி கிராமத்து மக்களை ஏமாற்றி வந்தான்.

காட்டுக்கு வேட்டையாடக் கிளம்பும்போது யாராவது கூட வந்தால் அது தன் வீரத்துக்கு இழுக்கு என்று கூறித் தடுத்து விடுவான். காட்டின் எல்லையில் உள்ள ஒரு பெரிய அடர்ந்த மரத்தின் மீது அமைத்திருந்த பரணில் ஏறிப் படுத்துக் கொண்டு விடுவான். கொண்டு வந்த உணவை உண்டபின், நன்றாகத் தூங்கி விடுவான். மாலையில் வேட்டையாடி மிகவும் சோர்வுற்றது போலத் தன் வீட்டுக்குத் திரும்பி விடுவான்.

ஒருநாள்.... காட்டுக்குள்ளிலிருந்து வெளியே வந்த புலி ஒன்று ஆடு, மாடுகளைத் தின்ன ஆரம்பித்தது. தினமும் இரவில் அது கிராமத்துக்கு வந்து ஆடுமாடுகளைக் கொல்வது வாடிக்கையாக ஆனது. இது அந்த ஊர் மக்களுக்கு பெரிய அச்சத்தை ஏற்படுத்தியது. அவர்கள், உடனடியாக அந்தப் புலியை வேட்டையாடியே தீர வேண்டும் என்று வேட்டைக்காரனிடம் கட்டளையிட்டனர். அவனுக்கு பயங்கர அதிர்ச்சியாகி விட்டது. இருந்தாலும் சமாளித்துக் கொண்டு உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு காட்டுக்குள் போனான். சற்று நேரம் காட்டுக்குள் சுற்றியவன் பின் வழக்கம் போல் பரண் மீதேறிப் படுத்துத் தூங்கிப் போனான்.

இரவாகியும் பயத்தினால் அசந்து போய் தூங்கிக் கொண்டிருந்த அவன், திடீரென்று புலியின் உறுமல் கேட்டுக் கண் விழித்தான். அவன் கண்ட காட்சி அவனைக் குலை நடுங்க வைத்தது. மரத்தின் நேர்கீழே புலி ஒன்று, ஓர் ஆட்டைப் பிடித்துத் தின்று கொண்டிருந்தது.

அவனுக்கு ஒரே திகிலாகி விட்டது. மரத்தின் மீது ஏறி புலி தன்னையும் கொன்றுவிடுமோ என்று பயந்தான். அதனால் அடுத்த மரத்தின் மீது தாவித் தப்பிக்கலாம் என நினைத்தான். அதற்காக பரணின் மீது நின்றுகொண்டு முயற்சிகள் செய்தான். கிளைகளை எம்பி எம்பித் தாவிப் பிடித்தான். குதித்தான். பயனில்லை. அவன் குதித்த வேகத்தில் பரணைக் கட்டியிருந்த கொடிகள் அறுந்தன. பரண் அப்படியே வேகமாகக் கீழே விழுந்தது. பரண் மிகச் சரியாகக் கீழேயிருந்த புலியின் தலைமீது விழுந்தது.

புலி அங்கேயே தலை நசுங்கி இறந்து விட்டது. பொழுது விடிந்ததும் கீழே இறங்கி வந்தபோதுதான், புலி இறந்துவிட்டது அவனுக்குத் தெரிய வந்தது. காட்டுக் கொடிகளால் அந்தப் புலியைக் கட்டி ஊருக்குள் இழுத்து வந்தான். அதைப் பார்த்த மக்களுக்கு மகிழ்ச்சி தாளவில்லை. வேட்டைக்காரனைக் கொண்டாடியதுடன் ‘புலியைக் கொன்ற மாவீரன்' என்ற பட்டத்தையும் அவனுக்குக் கொடுத்து கௌரவித்தனர்.

தகுதியுள்ளவர்கள் அடையும் புகழுக்கும் தகுதியற்றவர்கள் அடையும் புகழுக்கும் என்ன வேறுபாடு? சிந்தித்து வையுங்கள். அடுத்த மாதம் வேறொரு கதையோடு வந்து பார்க்கிறேன்.

சுப்புத்தாத்தா

© TamilOnline.com