சில தோல் நோய்கள்
'ஆள் பாதி ஆடை பாதி' என்பது பழமொழி. அதைச் சார்ந்து 'உடல்பாதி தோல் பாதி' என்று புதுமொழி சொல்லலாம். தோல் பகுதியில் வியாதி வந்தால் உள்ளமும் சேர்ந்து பாதிக்கப்படுகிறது. ஒருவரின் அழகு தோல் பகுதியினால் நிர்ணயிக்கப்படுவதால் தோலில் மாற்றம் ஏற்பட்டால் மற்றவருடன் கலந்து பழகுவது குறையலாம். தன்னம்பிக்கை குறையக் கூடும். மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புக்கள் அதிகம். பரவலாகக் காணப்படும் சில தோல் வியாதிகளைப் பற்றி இங்கு ஆராயலாம்.

1. தோல் வெண்திட்டுக்கள் (vitiligo)
விடிலிகோ என்று சொல்லப்படும் வியாதி தோலின் நிறத்தை மாற்றி வெள்ளை பரவச் செய்துவிடும். தோலின் நிறத்தை மெலனின் (melanin) என்று சொல்லப்படும் நிறமி (pigment) நிர்ணயிக்கிறது. மெலனின் கூடுதலாக இருந்தால் கறுப்பாகவும், குறைவாக இருந்தால் சிவப்பாகவும் தோல் தோற்றமளிக்கிறது. அவரவர் தோலில் மெலனின் ஒரே சீராக அமைந்திருக்கும். இது மாறும்போது நிறம் மாறி, திட்டுத் திட்டாக வெள்ளைப் பகுதி ஏற்படுகிறது. இதை 'விடிலிகோ' என்று சொல்வதுண்டு. இது பெரும்பாலும் 30 வயதுக்கு மேற்பட்டோரைத் தாக்க வல்லது. முதலில் ஓரிரு பகுதியில் மட்டும் தோன்றும் இந்தக் குறைபாடு, வயதாக ஆக, உடல் முழுவதும் குறிப்பாக முகம், கை, கால் போன்ற திறந்த பகுதிகளிலும் ஏற்படுகிறது. (இதைத் தவறாகத் தமிழில் வெண்குஷ்டம் என்று கூறுகின்றனர். இது குஷ்டத்தின் ஒரு வகையல்ல).

வகைகள்:
திட்டுத்திட்டாக ஒரு சில பகுதிகள் மட்டும் பாதிக்கப்படும் வகை.
உடல் முழுதும் பரவி வெள்ளைப்பகுதி மிகுதியாதல் மற்றுமொரு வகை.

காரணங்கள்:
##Caption##இதற்குப் பெரும்பாலும் எந்தவிதக் காரணமும் கிடையாது. பலருக்கு உடல்நிலை குன்றினாலோ, விபத்து போன்ற தீராத நோய் ஏற்பட்டாலோ அல்லது சூரியனின் கதிர்களினால் பாதிப்பு (sun burn) ஏற்பட்டாலோ முதன்முதலில் தெரியவரும். பின்னர் திட்டுகள் அதிகமாகவும் வாய்ப்புகள் உண்டு. இதைத் தவிர சுயநோய்த் தடுப்புச் சக்தி குறைவு (auto immune) என்று சொல்லப்படும் ஒரு குறிப்பிட்ட நோய் உடையவர்களுக்கு இந்த வகைத் தோல் வியாதி வரக்கூடும். ஒருவரது உடலில் அவரவர் அணுக்களைப் பாதுகாக்க வேண்டிய அணுக்களே எதிரியாக மாறிவிடும்போது auto immune வியாதிகள் தோன்றுகின்றன. இந்த வகையில் தைராய்டு, அட்ரினல் போன்ற சுரப்பிகள் சம்பந்தப்பட்ட வியாதிகள் சேரும். நீரிழிவு (Diabetes) உள்ளவர்களுக்கும் விடிலிகோ தோன்றலாம். ஒரு சிலவகைப் புற்றுநோய் இருப்பவர்களுக்கும் ஏற்படலாம். ஆனால் பெரும்பாலும் இது காரணமின்றி ஏற்படும் ஒரு வியாதியே.

உபாதைகள்:
இது குறிப்பாக சூரிய வெளிச்சம் அதிகம் படக்கூடிய பாகங்களையே தாக்குகிறது. முகம், கை, கால் போன்ற பகுதிகளும், கண், இமை, தலைமயிர், கண்ணுக்குள் உள்ள திரை (retina) ஆகியவையும் பாதிக்கப்படலாம். தோல் நிறம் மாறுவதால் ஏற்படும் பாதிப்பைத் தவிர வேறு வியாதி ஏதும் தோன்றுவதில்லை. ஆனால், இதனால் அழகு குறைவதாகத் தோன்றி மனவருத்தம் ஏற்படலாம். தலை நரைக்கலாம். இளநரை ஒரு அறிகுறியாக இருக்கலாம்.

பரிசோதனைகள்:
இந்த வியாதிக்குப் பெரும்பாலும் பரிசோதனைகள் தேவையில்லை. ரத்தத்தில் தைராயிடு, சர்க்கரை போன்ற பரிசோதனைகளும், ஒரு சில வேளைகளில் தோலில் ஒரு சின்னப் பகுதியை வெட்டி எடுத்துச் சோதனை (biopsy) செய்யவேண்டி வரலாம்.

சிகிச்சை முறைகள்:
- அதிக நேரம் சூரிய வெளிச்சம் உடலில் நேரடியாகப் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
- உச்சி வெயிலில் வெளியில் செல்வதைக் குறைக்க வேண்டும்.
- வெயில் காலத்தில் 'sun screen' உபயோகிப்பது நல்லது. இது புற ஊதாக் கதிர்களால் ஏற்படும் (UV Ray) பாதிப்பைக் குறைக்கும்.
- முடிந்தவரை முழுக்கைச் சட்டை அணிவது நல்லது.
- முகப்பூச்சு அல்லது நிறத்தை மட்டுப்படுத்தும் (toning) க்ரீம்கள் தடவிக் கொள்வதன் மூலம் இந்த நோயின் தீவிரம் குறையும்.
- இதைத் தவிர வேறு சில மருந்துகள் தோல் நிபுணர்களால் அளிக்கப்படலாம். அவை 'Steroid' வகையைச் சேர்ந்த மருந்துகள். இதைத் தவிர புற ஊதாக் கதிர்கள் மூலம் தயார் செய்யப்பட்ட க்ரீம்கள், மாத்திரைகள் வழங்கப்படலாம். ஆனால் இவை யாவுமே தீவிரத்தைக் குறைக்க வல்லவையே தவிர நோயை முற்றிலும் குணப்படுத்தாது. ஆகையினால் அநேகமாக இந்த நோய்க்கு மருந்துகள் இல்லை. உடலில் தீராத வியாதி வந்துவிட்டதாக எண்ணாமல் மனத்தை திடப்படுத்திக் கொள்ள வேண்டும்.

2) தேமல் - (Tinea Versicolor)
தேமல் என்று சொல்லப்படும் திட்டுத் திட்டாகத் தோன்றும் தோல் வியாதி ஒருவித நுண்ணுயிர் கிருமியால் ஏற்படுவது. இது பெரும்பாலும் வியர்வை அல்லது தண்ணீர்ப் பசை உடலில் அதிக நேரம் இருப்பதால் ஏற்படுகிறது. முதுகு, கழுத்து, பின் கழுத்து, முகம் ஆகிய பகுதிகளில் தோன்றும். குறிப்பாக முடி வெட்டிய பின், குளித்த பின் அதிகம் தெரியும். இதற்கு clotrimazole என்று சொல்லும் நுண்ணுயிர்க் கொல்லி க்ரீம்களை உபயோகித்தால் குணமாகி விடும். ஆனால் உடலில், ஈரப்பசையும், வியர்வையும் பெருகாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அடிக்கடி துணியினால் ஒற்றி எடுத்துக் கொள்ள வேண்டும்.

3) படை (Ringworm)
படை என்று சொல்லப்படும் பூசண நுண்ணுயிரியினால் (fungus) ஏற்படும் சரும வியாதிக்கு Ringworm என்பது மற்றொரு பெயர். இது வட்டமாக இருப்பதால் இந்தப் பெயர். இதற்கும் மேற்கூறிய clotrimazole அல்லது Lotrimin க்ரீம் நல்ல தீர்வு தரும். அவரவர் துணிகளை வீட்டிலேயே துவைப்பது நல்லது. Laundromet அல்லது பொதுக்கடையில் துவைக்கும் துணிகள் வழியே இந்த வகை நுண்ணுயிரி அதிகம் தாக்கும் வாய்ப்பு உள்ளது.

4) மரு - Seborrheic Keratosis
இது வயது முதிர்ந்தவர்களிடம் காணப்படும். தடிப்பு தடிப்பாக, சில சமயம், வட்டமாக எழும்பிக் காணப்படும் சருமநோய். இது புற்று அல்ல. இதை வெட்டி எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

5) தோல் புற்றுநோய் (Melanoma)
இது மச்சத்தில் ஏற்படும் புற்றுநோய். ஆசியர்களுக்கு அதிகம் காணப்படுவதில்லை. அமெரிக்க வெள்ளைத் தோல் மிகுந்தவர்களுக்கே ஏற்படும் நோய். என்றபோதும் மச்சத்தில் மாறுதல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை நாட வேண்டும். இதை A,B,C,D என்று வர்ணிப்பதுண்டு.

A - Appearance Change - தோற்றத்தில் மாற்றம்
B - Borders Change - வரம்புகளில் மாற்றம்
C - Color Change - நிறத்தில் மாற்றம்
D - Diameter Change - விட்டத்தில் மாற்றம்

இதுபோன்ற அறிகுறிகள் தோன்றினாலோ, மச்சத்திலிருந்து இரத்தம் கசிந்தாலோ மருத்துவரை நாட வேண்டும்.

##Caption## 6) பேசல் செல் கார்சினோமா (Basal Cell Carcinoma)
இது முகத்தில் ஏற்படும் ஒருவித புற்றுநோய். பெரும்பாலும் வயது முதிர்ந்தவரையே தாக்கவல்லது. இது தோலில் மட்டுமே பரவக் கூடியது. 'Melanoma' உடலில் வேறு உறுப்புக்களுக்கும் பரவலாம். ஆனால் இந்த Basal Cell புற்றுநோய் தோலிலேயே தங்கிவிடும். ஆனால் இதற்கும் அறுவை சிகிச்சை அவசியம்.

7) ஸ்குவாமஸ் செல் கார்சினோமா (Squamous Cell Carcinoma)
இதுவும் முகம் அல்லது கால் பகுதியில் தோன்றும் ஒருவிதப் புற்றுநோய். இது ஆறாத புண்ணாகத் தோன்றி பின்பு புற்றுநோயாக மாறக்கூடியது.

ஆக, தோலின் பகுதி பாதிக்கப்பட்டால் நிறம் மாறலாம். மரு மாறலாம். ஆனால் உடனடியாக கவனித்தால் புற்றுநோயைக் குணப்படுத்தும் சாத்தியமுண்டு. உச்சி வெயிலில் கோடைக்காலத்தில் வெளியில் போகும்போது மறக்காமல் Sun Screen தடவிக் கொள்ளுங்கள். அதே நேரத்தில் ஒரு நாளைக்குப் பதினைந்து நிமிடமாவது சூரிய வெளிச்சம் உடலில் படவும் வேண்டும். அதன்மூலம் விடமின் D தயார் செய்யப்படுகிறது. இதைப் பற்றியும் விடமின் D குறைவினால் ஏற்படும் வியாதிகள் பற்றியும் அடுத்த கட்டுரையில் காணலாம்.

மரு.வரலட்சுமி நிரஞ்சன்

© TamilOnline.com