கொட்டைப் பாக்கு கொழுந்து வெத்தலை
இந்தியாவில் பண்டைக் காலத்திலிருந்தே தாம்பூலம் தரித்துத் கொள்வது வழக்கமாக இருந்து வந்துள்ளது. ஆசியாவில் இது அழகின் அடையாளமாகக் கருதப்படுகிறது. வெற்றிலை முதலில் மலேசியாவில் பயிரானதாகத் தாவரவியல் அறிஞர்கள் கருதுகிறார்கள். வடக்குத் தாய்லாந்து மக்கள் வெற்றிலைபாக்குடன் எலுமிச்சம் பழத்தையும் சேர்த்து மென்றனராம். அங்கிருந்து இந்தப் பழக்கம் அண்டை நாடுகளுக்குப் பரவியதாகவும், இறுதியில் இது இந்திய வாழ்க்கையோடு இணைந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்தப் பழக்கம் எண்ணாயிரம் ஆண்டுகளாகவே உலகின் பல நாடுகளில் வாடிக்கையாக இருந்ததாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இன்று உலகின் மக்கள் தொகையில் பத்து சதவிகிதம் பேர் தாம்பூலத்துடன் எலுமிச்சம் பழத்தைப் பயன்படுத்துகிறார்கள். கடவுள் வழிபாட்டிலும் வெற்றிலைக்கு முக்கியப் பங்குண்டு. அதனால்தான் பழம், பூக்களுடன் வெற்றிலை பாக்கும் மதச் சடங்குகளில் வைக்கப்படுகிறது.

இரண்டாவது நூற்றாண்டில் வாழ்ந்த புகழ்பெற்ற வைத்தியரான சுஸ்ருதர், வெற்றிலையைப் பதின்மூன்று பண்புகளோடு படைத்ததற்காக இறைவனுக்கு நன்றி தெரிவிக்கிறார். பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த நாராயணா என்பவர் வெற்றிலை பாக்கு கசப்பு, இனிப்பு, காரம், துவர்ப்பு என அனைத்துச் சுவைகளையும் உடையது என்று தனது 'இதோபதேசம்' நூலில் எழுதி உள்ளார். விஜயநகர சாம்ராஜ்யத்திற்கு வந்த அப்துல் ரஜாக் என்ற பாரசீகப் பிரயாணி வெற்றிலை பாக்கு பற்றி இப்படியாக வர்ணித்திருக்கிறார்: “வெற்றிலைபாக்கு மெல்லுவதால் முகம் ஒளிபெறுகிறது. பசி தணிகிறது. ஜீரணம் சுறுசுறுப்பாகிறது. மூச்சு தூய்மையாகி, பற்கள் வலிமை பெருகின்றன.”

##Caption##முகலாயர் ஆட்சிக் காலத்தில் தாம்பூலம் தரிப்பது ஒரு அழகியல்கொண்ட கலையாக மாற்றப்பட்டது. வெற்றிலைச் செல்லங்களும், எச்சிலைத் துப்பப் பணிக்கங்களும், பாக்கு நறுக்கப் பாக்கு வெட்டிகளும் உருவாயின. இவை வட இந்தியாவில் இந்து, முஸ்லீம் குடும்பங்களில் பெண்களுக்கு திருமணத்தின் போது அளிக்கப்படும் சீர்வரிசைகளில் இடம்பெற்றன. ஒரு அரசன் ஒரு நபரிடம் பீடாவைக் கொடுத்து விட்டால் அதைப் பெற்றுக் கொண்டவன் ராஜபக்திக்கு செலுத்த விசுவாசப் பிரமாணம் செய்தவனாகி விடுகிறான் என்று சரித்திரம் கூறுகிறது. பர்மாவில் ஒரு ராணியோ அல்லது ராஜ குமாரியோ அரைகுறையாக மென்ற தாம்பூலத்தை வேலைக்காரரிடம் கொடுத்துவிட்டால், அவர் என்றென்றும் அவளுக்குக் கடன்பட்டவனாகிவிடுகிறான். ஒருவனைத் தான் விரும்புவதைக் குறிப்பிட ஒரு மணமாகாத பெண் மஞ்சள் நிறப் பெட்டியில் வெற்றிலை பாக்கை வைத்துக் கொடுத்ததாக அறிய முடிகிறது.

வெளிநாடுகளில் வெற்றிலைக்கும் அத்துடன் சேர்த்து மெல்லப்படும் பொருள்களுக்கும் மிக அதிகத் தேவை உள்ளது. வெற்றிலைச் சாகுபடிக்கு அதிக கவனமும் அக்கறையும் தேவைப்படுவது. வெற்றிலைக்கொடி மேலே படர மூங்கில் கம்புகளை நட்டு வைத்து, கொடிக்காலாகச் செய்ய வேண்டும். நீர் பாய்ச்சுவதும் மிகக் கடினமானது. விவசாயிகள் காலில் செருப்புடன் கொடிக்காலுக்குள் நுழைய மாட்டார்கள். ஒவ்வொரு ரட்சாபந்தன் தினத்திலும் வெற்றிலைக் கொடிக்கும் கயிறு கட்டுகிறார்கள். நாட்டில் பல விதமான வெற்றிலை வகைகள் விந்திய மலைக்குத் தெற்கிலும், மற்றும் கொல்கத்தா, வாரணாசி, கபூர்கந்த், ஜெகன்னாத், கங்கேலி, அமர்பேலி ஆகிய இடங்களிலும் சாகுபடி செய்யப்படுகிறது.

மிகவும் தரத்தில் உயர்ந்த வெற்றிலை வெள்ளி, தங்க ரேக்குகளுக்குள் வைத்துக் கட்டப்பட்டு விற்பனையாகிறது. இந்தப் பழக்கம் முகலாய அரச குமாரிகளால் துவங்கப்பட்டது. மொகலாய அரச அவையிலும், மத்தியகால அரசர்கள் அவையிலும் வெற்றிலை பாக்கு, விருந்தோம்பல், நட்புறவு, அன்பு இவைகளின் சின்னமாக வழங்கப்பட்டு வந்திருக்கிறது. திருப்பதி வெங்கடேசப் பெருமாள் கோவிலில் பெருமாளின் நெற்றியிலிருந்து எடுத்த வெண்ணெய், வெற்றிலைக்குள் வைத்து மடிக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

தென் இந்தியாவில் நவராத்திரி, வரலட்சுமி பூஜை, திருமணம் போன்ற நிகழ்ச்சிகளின் போது சுமங்கலிகளுக்குத் தாம்பூலம், மஞ்சள், குங்குமம் வழங்கப்படுகிறது. ராஜஸ்தானில் திருமணம் நடைபெற்றதும் மணமகளைச் சேர்ந்த முதியவர்கள் விருந்தினர்கள் ஒவ்வொருவர் வாயிலும் தாம்பூலம் வைக்கிறார்கள். இந்த சடங்கு நியோனா என்று சொல்லப்படுகிறது.

பண்டைக்காலத்தில் பெண்கள் வசீகரன் மந்திரத்தை நூற்றெட்டுமுறை ஓதிய பிறகு, தங்கள் கணவன்மார்கள் பிற பெண்களை நோக்காமலிருக்கவும், கணவர்களை வசீகரிக்கவும் அவர்களுக்கு வெற்றிலை பாக்கு கொடுத்தார்கள்; சூனியக்காரிகள் மனிதர்களை அடிமையாக்க வெற்றிலை பாக்கை உபயோகித்தார்கள் என்றும் சொல்லப்படுகிறது. விலைமாதர்கள் தங்கள் வாடிக்கையாளர்களின் உடல் உறவைத் தூண்ட வெற்றிலைப்பாக்கில் போதைப் பொருளை நிரப்பிக் கொடுத்திருக்கிறார்கள். பிரிட்டிஷ் ஆட்சிக்காலத் திருடர்கள், தங்கள் எதிரிகளுக்கு வெற்றிலை பாக்குடன் சயனைட் விஷத்தைக் கலந்து கொடுத்துக் கொன்றிருக்கிறார்கள். இன்றும் கூடச் சமூக விரோதிகள் தங்களுக்கிடையில் 'சுபாரி' (பாக்கு) என்ற சொல்லை கொலைக்குக் குறியீடாகப் பயன்படுத்துகிறார்கள்.

வெற்றிலை பாக்கு இந்தியாவில் பல பெயர்களில் அறியப்பட்டிருக்கிறது. தென்னிந்தியாவில் தாம்பூலத்தை பீடா என்று சொல்லி மெல்லுகிறார்கள். லக்னோவில் ‘பான் கி கிலோரி' என்கின்றனர். பனாரஸ், கோல்கத்தா, ஹைதராபாத், லக்னோ, சென்னை ஆகிய இடங்களில் வேவ்வேறு வகை பீடா தயாரிக்கப்படுகிறது. வட இந்திய சாதா பீடாவில் பாக்கு, ஏலக்காய், லவங்கம் சேர்க்கப்படுகின்றன. தென்னிந்திய பீடாவில் தேங்காய்த் துருவலும் சர்க்கரையும் சேர்கிறது. அதேபோல் வட இந்தியாவில் இனிப்பு பீடாவில் பேரீச்சம் பழம், குல்கந்து ஆகியவைகளையும் நிரப்புகிறார்கள். சமீப காலங்களில் தாம்பூலத்தில் கற்பூரமும் புதினாவும் கூடச் சேர்க்கப்படுகின்றன.

பீடாவோடு புகையிலை உபயோகிப்பவர்கள் எச்சிலைக் கண்ட இடத்தில் துப்பிவிடுகின்றனர். கட்டிடச் சுவர்களில் வெற்றிலைபாக்கு எச்சில் கறைகளைக்க காண முடியும். பல குடும்பங்களில் தாம்பூலம் மெல்லுவது ஒரு சடங்காகவே நடக்கிறது. டெல்லியில் எங்கள் குடும்பத்தில் சீதாராம் பஜாரிலுள்ள எங்கள் வீட்டிலிருந்து நல்ல சாப்பாட்டுக்குப் பிறகு டிலைட் சினிமா அருகில் உள்ள வெற்றிலைபாக்குக் கடைக்கு நடந்து சென்று தாம்பூலம் வாங்கி மெல்லுவது வழக்கம். திருமணத்துக்குப் பிறகு சென்னையில் இந்தப் பழக்கத்தை விட்டுவிட்டேன். 1974ல் சென்னையில் வட இந்திய தாம்பூலக் கடைகள் இரண்டே இரண்டு கடைகள் மட்டுமே இருந்தன என்பதும் இதற்குக் காரணம்.

தாம்பூலம் இப்படிப் பயன்படும் சூழ்நிலையில் மிகப்பெரிய அளவு பான் மசாலாத் தொழில் இந்தியாவில் முன்னணிக்கு வந்து விட்டது. தொடர்ந்து வெற்றிலை பாக்குடன் புகையிலையை உபயோகிப்பது புற்றுநோய் தாக்கக் காரணமாகிறது. அதனால் மருத்துவர்கள் இவற்றைத் தவிர்க்குமாறு கூறி எச்சரிக்கிறார்கள்.

சி.கே. கரியாலி
திருவைகாவூர் பிச்சை

© TamilOnline.com