ஓவியர் மணியம் செல்வன்
ம.செ. என்ற மந்திர எழுத்துக்களுடன் ஓவியம் வெளியாகாத தமிழ்ப் பத்திரிகைகளே கிடையாது. சிவகாமியின் சபதம் தொடருக்கு அவர் வரைந்த ஓவியங்கள் நம் கண்களை விட்டு அகலாதவை. சிவகாமியின் அழகும், அதில் வரும் அரண்மனைகளும், அரசர் காலத்து உடைகளும் நம்மை அந்தக் காலத்திற்கே அழைத்துச் சென்று விடும். அதுபோல சுஜாதாவின் ‘பூக்குட்டி' கதைக்கான படங்கள் மறக்க முடியாதவை. கோட்டோவியம், சமகால ஓவியம், விளம்பர ஓவியம், நவீன ஓவியம், தைலவண்ணம், நீர்வண்ணம் என சகல பிரிவுகளிலும் 30 ஆண்டுகளுக்கும் மேலாகச் சாதனை செய்து வருகிறார். மணியம் செல்வனின் அழகியல் தனித்தன்மை கொண்டது. வண்ணங்களைக் கையாளும் முறை அலாதியானது. பார்த்துக் கொண்டே இருப்பதா, வியப்பில் வீழ்வதா என்று தீர்மானிக்க இயலாத எழிற்கூறுகளைக் கொண்டது. முதலில் கல்கி அவர்கள் பொன்னியில் செல்வன் எழுதியபோது அதற்கு ஓவியம் வரைந்து புகழ்பெற்ற மணியம் அவர்களின் மகனான இந்த மீன்குட்டி, தந்தையை மிஞ்சி நீந்துகிறது என்றால் அது வெறும் புகழ்ச்சியல்ல. தென்றலுக்காக அவரோடு உரையாடியதிலிருந்து....

கே: உங்கள் தந்தை ஒரு புகழ்பெற்ற ஓவியர். நீங்களும் ஓவியரானது எப்படி, அதைப்பற்றிச் சொல்லுங்களேன்!
ப: ஓவியத்துறைக்கு நான் வந்தது 16 வயதுக்குப் பிறகுதான். அதுவரை ஓவியத்தில் ஆர்வம் இருந்ததாகச் சொல்ல முடியாது. தந்தை வரையும் ஓவியங்களை பத்திரிகை அலுவலகங்களுக்குக் கொண்டு செல்வது போன்ற சிறிய வேலைகளைச் செய்திருக்கிறேன். அவர் நோய்வாய்ப்பட்டிருந்த காலத்தில் அவருக்கு உதவியாக இருந்தேன். நான் ஓவியனாக வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டாரா என்பது எனக்குத் தெரியாது. நான் அவர் பணிகளில் உதவியதில் அவருக்கு மிகவும் மகிழ்ச்சி. அவரிடமிருந்து நான் கற்றுக் கொள்வதற்கு நிறைய விஷயங்கள் இருந்தாலும் வெளியில் சென்று படிக்கும் அனுபவம் எனக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காக என்னை ஓவியக் கல்லூரியில் சேர்த்து விட்டார். ஓவியக் கல்லூரியில் நான் கற்றது விளம்பரத்துறை ஓவியம்தான்.

கே: பத்திரிகைகளுக்கு எப்போது ஓவியம் வரையத் தொடங்கினீர்கள்?
ப: படிக்கும் போதே விளம்பரத் துறைக்குப் பணி செய்து கொண்டிருந்தேன். பத்திரிகைப் பணிகளிலும் ஈடுபட்டு வந்தேன். 1973-ல் படித்து முடித்தவுடன் ஒரு விளம்பர நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன் என்றாலும் பத்திரிகை ஓவியத்தில் இருக்கும் ஒரு சுவாரஸ்யம், ஒரு சவால் அதில் இல்லை. மேலும், பத்திரிகைகளில் நம் படைப்பின் மீதான விமர்சனம், வரவேற்பு எல்லாமே அடுத்த வாரத்திலேயே தெரிந்துவிடும். இதுபோன்ற காரணங்களால் பத்திரிகை ஓவியம் மீதான ஈர்ப்பு தொடர்ந்தது. தொடர்ந்து பத்திரிகை ஓவியப் பணிகள் வந்ததால் விளம்பரத் துறை வேலையை விட்டு விலகினேன். 1974-ல் நான் முழுநேரச் சுதந்திர ஓவியனானேன் (Freelance Artist). விளம்பர நிறுவனத்தில் நான் பெற்ற வருமானத்தில் நான்கில் ஒரு பாகம்தான் அதில் கிடைத்தது. ஆனாலும் ஆர்வம், என் தந்தையார் பார்த்த, சாதித்த துறை என்ற எண்ணம் போன்றவற்றால் தொடர்ந்து ஈடுபட்டேன்.

கே: உங்கள் முதல் ஓவியம் எப்போது வெளியானது?
ப: தந்தையார் இருக்கும்போதே குமுதத்தில் வெளியானது. புதுமையாக இருக்கட்டுமே என்று பிரபல ஓவியர்களுடைய வாரிசுகளை ஓவியம் வரைய வைத்தார்கள். அதில் என்னுடைய ஓவியமும் வெளியானது. எனக்கு அப்போது 16 வயது. ஒரு வாரம் கஷ்டப்பட்டு வரைந்தேன். அது வெளியானதும் மகிழ்ச்சியாக இருந்தது. தெருவில் செல்லும் போது யாராவது என்னைச் சாதாரணமாகப் பார்த்தால் கூட, நம்முடைய படத்தைப் பார்த்து விட்டுத்தான் பார்க்கிறார்கள் போல என்று கூட நினைத்துக் கொள்வேன்!

பின்னர் கல்லூரியில் படிக்கும்போது சுஜாதாவின் ‘பதினாலு நாட்கள்' தொடருக்கு ஓவியம் வரைந்தேன். அதற்கு முன்னால் ஆர்வி ஆசிரியராக இருந்த ‘கண்ணன்' இதழுக்கு நிறையத் தொடர் ஓவியங்கள் வரைந்திருக்கிறேன். என்னை ஊக்கப்படுத்தியவர்களில் ஆர்வி முக்கியமானவர். ஒரு ஜனரஞ்சக இதழில், பிரபல எழுத்தாளரின் தொடருக்குப் படம் என்றால் அது ‘பதினாலு நாட்கள்'தான். 1976ல் கல்கி அவர்களின் அதுவரை வெளியாகாத கதை ஒன்றை அவரது மறைவுக்குப் பின் கி. ராஜேந்திரன் தொடராகக் கொண்டு வந்தார். அதற்கு நான் வரைந்த படங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. வாய்ப்புகள் வர ஆரம்பித்தன.

கே: உங்களுடைய ஓவியங்களுக்கு உள்தூண்டுதல் எது?
ப: நிச்சயமாக எனது தந்தைதான். இப்போது பல நவீன வசதிகள் வந்திருக்கின்றன. கம்ப்யூட்டர் வேறு இருக்கிறது. ஆனால் அக்காலத்தில் அட்டைப் படத்துக்கான எழுத்துக்கள் முதற்கொண்டு எல்லாம் கையால்தான் டிசைன் செய்ய வேண்டும். தமிழ் எழுத்துருக்கள் கிடையாது. ஒரு சிறு கீறல் விழுந்து விட்டால் கூடத் திரும்ப வரைந்தாக வேண்டும். அப்படிப்பட்ட கால கட்டத்தில் அவர் பல புதுமைகளைச் செய்திருக்கிறார். வெள்ளைத் தாளில் தான் நாம் ஓவியம் வரைவோம். ஆனால் பிளாக் பேப்பரில் (கறுப்புத் தாளில்) அவர் ஓவியம் வரைந்திருக்கிறார், நைட் மூட் வர வேண்டும் என்பதற்காக. வித்தியாசமாகத் தெரிய வேண்டும் என்பதற்காக கலர் டோண்ட் பேப்பரில் வரைந்திருக்கிறார். ஓவியம் வரைவதற்கான உபகரணங்களை வெளிநாட்டில் இருந்து வரவழைத்துப் பயன்படுத்தி இருக்கிறார். இப்படிப் பல விதத்தில் என் தந்தைதான் எனக்கு இன்ஸ்பிரேஷன்.

கே: தந்தையுடனான உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்...
ப: நான் ஒரே மகன். அப்பா கடின உழைப்பாளி. அவரைத் தேடி நிறையப் பிரபலங்கள் வீட்டுக்கு வருவார்கள். ஓவியம் பற்றி பேசிக் கொண்டிருப்பார்கள். ஓவியனாக வேண்டும் என்ற எண்ணம் எனக்கில்லை. ஆனால் என் தந்தை ஏதோ ஒரு விதத்தில் ஓர் ஓவியனுக்குத் தேவையானவற்றை எனக்குப் புகட்டிக் கொண்டிருந்தார். ‘பார்த்திபன் கனவு'க்கு அப்பா ஆர்ட் டைரக்‌ஷன் செய்தார். அதுபற்றி விரிவாக எனக்கு விளக்குவார். நான் ஓவியக் கல்லூரியில் சேர்ந்த ஒரு வருடத்திலேயே என் தந்தை காலமாகி விட்டார். என் தந்தையாரிடமிருந்து அதிகம் கற்றுக்கொள்ள முடியாமல் போய் விட்டதே என்ற வருத்தம் எனக்கு உண்டு. ஆனால் அந்தக் குறையை அவருடைய ஓவியங்கள் நிவர்த்தி செய்து வருகின்றன.இன்றளவும்
நான் அதன் மூலம் புதிது புதிதாகப் பலவற்றைக் கற்றுக் கொண்டுதான் இருக்கிறேன்.அந்த அளவில் எனது தந்தையார் உயிருடன் இல்லாவிட்டாலும்,தன் ஓவியங்கள் மூலம் எனக்கு தக்க வழிகாட்டிக் கொண்டிருக்கிறார் என்பதுதான் உண்மை.

அப்பாவுக்கு 1946ல் கல்கி, சதாசிவம், எம்.எஸ். போன்ற பல பிரபலங்களின் முன்னிலையில் திருமணம் நடந்தது. ஆனால் திருமணத்தின் போது புகைப்படம் ஏதும் எடுக்கப்படவில்லை. அந்தக் குறையைப் போக்குவதற்காகவே அவர் பிற்காலத்தில் ஒரு ஜெர்மன் காமெரா வாங்கி, நண்பர்கள், உறவினர்கள் திருமணங்களில் புகைப்படம் எடுத்து பிரதி போட்டுக் கொடுப்பார். அதுமாதிரி ஒரு 8 மி.மீ. சைலண்ட் மூவி காமெரா வாங்கி சிறுவயதில் என்னைப் படம் பிடித்திருக்கிறார். ஞாபகார்த்தமாக அதை இன்னமும் வைத்திருக்கிறேன்.

கே: பத்திரிகைக்கு வரைவது, அவசரத்திலும் படைப்பின் தரம் குறையாமல் கொடுக்க வேண்டிய பணி. நீங்கள் எப்படி இதைக் கையாளுகிறீர்கள்?
ப: சிரமமானதுதான். இதையே ஒரு சவாலாகக் கருதுகிறேன். சில ஓவியங்களை எளிதாக முடிந்துவிடும். சிலவற்றிற்கு கேரக்டர் ஸ்டடி செய்து, அதற்கான களம், பின்புலம் எல்லாவற்றையும் ஆராய்ந்து வரையவேண்டி இருக்கும். சரித்திர ஓவியங்கள் வரைய அதிக நேரம் பிடிக்கும். அதில் சிறிய தவறு செய்தாலும் வாசகர்கள் எளிதாகக் கண்டுபிடித்துவிடுவார்கள். எந்த அவசரமாக இருந்தாலும் படைப்பின் தரம் கெடாமல் செய்ய முடியும். ஒரு தெய்வீக முகம் வரைந்தால் அதில் புனிதம், அருள் தெரிய வேண்டும். சிரமம்தான். கடின உழைப்பால், பயிற்சியால் இதெல்லாம் சாத்தியப்படும்.

எனக்கு லேட்-மாஸ்டர் என்ற பெயர் கூட உண்டு. ஆனால் வேண்டுமென்றே நான் தாமதம் செய்வதில்லை. நன்றாக வரவேண்டும் என்பதற்கான உழைப்பினால் தாமதமாகுமே தவிர வேண்டுமென்றே தாமதப்படுத்துவதில்லை.

##Caption## கே: உங்கள் ஓவியங்களில் உங்களைக் கவர்ந்தது எது?
ப: எல்லா ஓவியங்களுமே என் குழந்தைகள் போன்றவைதான். என்ன, சில சுகப்பிரசவமாக அமையும். சிலவற்றை ஆபரேஷன் செய்துதான் வெளியே எடுக்க வேண்டும். ஒரு வாசகன் எப்போது ஒரு படைப்பை அங்கீகரிக்கிறான் என்றால், அவன் கற்பனை செய்தபடியே அது அமைந்திருக்கும் போதுதான். ஆரம்பத்தில் ‘ரத்தம் ஒரே நிறம்' தொடருக்காக நான் வரைந்த ஓவியங்கள் எனக்கு மிகமிகப் பிடித்தமானவை. அதுவும் யானையால் தலை இடறப்பட்டு, ரத்தம் சிந்தும் காட்சியை மிகச் சிரமப்பட்டு வரைந்தேன். யானைப்பாகன், பாதிரியார், நீதிபதி, அந்தக் காட்சியைக் காண விரும்பாமல் முகத்தைத் திருப்பிக் கொள்ளும் பெண்மணி என ஒவ்வொன்றையும் கேரக்டர் அனாலிஸிஸ் செய்து வரைந்தேன். சுஜாதா அதை வெகுவாகப் பாராட்டினார். வாசகர்களிடமிருந்தும் அதற்கு மிக நல்ல வரவேற்பு இருந்தது. ‘தலை நிமிர்ந்த தமிழர்கள்', கலைஞரின் ‘தொல்காப்பியம்', இந்திரா சௌந்தர்ராஜனின் தொடர்கள், சுஜாதாவின் ‘பூக்குட்டி' எனப் பலவற்றுக்கு நான் பல புதுவித உத்திகளைப் பயன்படுத்தி வரைந்திருக்கிறேன். அதுபோல பரணீதரனின் ‘அன்பே அருளே' தொடருக்கு வரைந்ததும் மிகவும் பிடித்த ஒன்று.

கே: உங்களுக்குச் சவாலாக அமைந்த ஓவியங்கள் பற்றி...
ப: ஆனந்த விகடனில் வெளிவந்த 'மடிசார் மாமி' தொடர் ஓவியங்கள் மிக வித்தியாசமானவை. அப்பொதெல்லாம் கம்ப்யூட்டர் கிடையாது. முதலில் ஸ்டில் எடுத்துக் கொடுத்து, அவுட்லைன் ரெடி செய்து, கட்-அவுட் ரெடி செய்து, அப்புறம் ஒன்றோடு ஒன்று பொருத்தி என்று அதற்காக நிறைய உழைக்க வேண்டி இருந்தது. ஒவ்வொரு வாரமும் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தெருவில், வீட்டில், ஹைகோர்ட்டில், கோயிலில், ட்ரெய்னில் எனப் பல இடங்களுக்கும் சென்று அவற்றை எடுத்தோம். இதெல்லாம் மிகவும் சவாலாக இருந்தது. கருவாச்சி காவியம், கிருஷ்ண விஜயம் என ஒரே சமயத்தில், ஒரே பத்திரிகையில் இரண்டு மூன்று தொடர்களுக்குக் கூட வரைந்திருக்கிறேன். ஒன்று புராணக் கதை, மற்றொன்று சமூகக் கதை. இவையெல்லாம் சவாலாக அமைந்தவைதான்.

கே: நவீன ஓவியங்கள் பற்றி உங்கள் கருத்து என்ன?
ப: முழுச் சுதந்திரத்துடன், எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாமல் தன்னுடைய கற்பனையின் உச்சத்தை ஓவியன் வெளிப்படுத்துவதாக நவீன ஓவியம் அமைகிறது. எனவே நவீன ஓவியத்தை நாம் புறந்தள்ள வேண்டியதில்லை. ஆனால் எந்தவித முறையான பயிற்சியும் இல்லாமல் அதைச் செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. பலம் இருக்க வேண்டும். மாடர்ன் ஆர்ட்டைப் பொறுத்தவரை ஆதிமூலம் அவர்கள் கிரேட். நல்ல விஷய ஞானம் உள்ளவர். பொதுவாக நவீன ஓவியர்கள், கதைகளுக்குப் படம் போடுபவர்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம் தரமாட்டார்கள். ஆனால் மறைந்த ஆதிமூலம் அவர்கள் என்னுடைய ஓவியங்களைப் பார்க்கும்போதெல்லாம் கண்காட்சி வையுங்கள் என்று சொல்லிக் கொண்டிருப்பார்.

பத்திரிகை ஓவியம் வரைவது என் தொழில் என்றாலும், என்னுடைய திருப்திக்காக நான் ஓவியங்கள் வரைவதுண்டு. அப்படி வரைந்ததுதான் சிவன் ஓவியம். அதில் நான் முகத்தைக் காட்டவில்லை. எனக்கே எனக்காக, என் உள்ளிருந்து வெளிப்படுபவைதான் இதுபோன்ற ஓவியங்கள். இதற்கு மிக நல்ல வரவேற்பு. அதே சமயம் சிலர் கேட்டனர், ஏன் எப்போதும் நன்றாக வரைவீர்களே, சிவனை வெறும் கறுப்பு உருவத்தில், அதுவும் முகமே இல்லாமல் போட்டு விட்டீர்களே என்று.

கே: ஓர் ஓவியருக்குப் பயணம் மிக முக்கியமானது. நீங்கள் மேற்கொண்ட பயணங்கள், அந்த அனுபவங்கள் பற்றிக் கூறுங்களேன்!
ப: உண்மைதான். ஒரு ஓவியருக்கு பயணம் அவசியம். நான் கல்லூரியில் படிக்கும் போதே இந்தியா முழுக்கப் பயணம் செய்திருக்கிறேன். நாற்புறமும் நீரால் சூழப்பட்ட கடலில் பயணம் செய்யும் போது ஏற்படும் பரவசத்தை வார்த்தைகளால் சொல்ல இயலாது. இயற்கையின் வர்ண ஜாலங்களை நேரடியாக அங்கு பார்க்க முடியும். கவியரசு வைரமுத்துவின் கருவாச்சி காவியம் தொடருக்காக, நான் நேரடியாக அவருடன் அந்தந்தப் பகுதிகளுக்குச் சென்று, பார்த்து வரைந்திருக்கிறேன். நகரத்திலேயே பிறந்து வளர்ந்த எனக்கு கிராமம், அதன் மனிதர்கள் எல்லாமே புதியவை. அந்தத் தொடர் ஓவியம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

என்னால் வாழ்க்கையில் மறக்க முடியாத பயண அனுபவம் கைலாஷ்-மானசரோவரருக்குப் போன பயணம்தான். 1987ல் சென்னை ராமகிருஷ்ண மடத்தின் தொடர்பால் வாய்த்தது. பிரம்மாண்டமான அந்த இயற்கையின் முன்னால் நான் பிரமித்துப் போய் நின்று விட்டேன். சூரிய ஒளி படப்பட அந்தச் சிகரம் உருமாறுவது கண்கொள்ளாக் காட்சி. பரவச அனுபவம். இரவில் சிகரத்தின் தோற்றம் நமக்கு பிரமிப்பை அளிக்கும். இயற்கை தீட்டும் ஓவியத்திற்கு முன்னால் நாம் செய்வதெல்லாம் ஒன்றுமே இல்லை என்ற எண்ணம் எனக்கு அங்கே ஏற்பட்டது. பயணங்களின் போது அங்கேயே அமர்ந்து ஸ்கெட்ச் செய்வது எனது வழக்கம். ஆனால் கைலாய மலையைக் கண்ட பிரமிப்பில் என்னால் பலவற்றை பதிவு செய்யவே இயலவில்லை. அந்தக் குளிரில் கையுறையைப் போட்டுக் கொண்டு பென்சிலை எடுத்தால் ஸ்பரிச உணர்வே தெரியவில்லை. என்றாலும், அவற்றை உள்வாங்கிக் கொண்டு இங்கே வந்த பிறகு வரைந்தேன். கிட்டத்தட்ட 40 நாட்கள் அங்கே இருந்தேன். இயற்கையையே நான் அங்கு கடவுளாகக் கண்டது மறக்க இயலாத அனுபவம்.

கே: வெளிநாடுகளில் இருக்கும் முக்கியமான ஓவியக் கண்காட்சிகளுக்குப் போயிருப்பீர்கள். அந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்!
ப: சிங்கப்பூர், நார்வே சென்றிருக்கிறேன். சென்ற ஆண்டு லண்டன், பாரிஸ் சென்றேன். ஓவியர்கள், கலைஞர்கள் கொண்டாடுகின்ற முக்கிய ஊர் பாரிஸ். ஒவ்வொரு ஓவியனும் தன் வாழ்நாளில் ஒருமுறையேனும் பார்த்து விட வேண்டிய நகரம். கலைஞர்களுக்கு ஐரோப்பியர்கள் கொடுக்கும் மரியாதை, படைப்பின் மீது அவர்களுக்கு இருக்கும் ஆர்வம், அக்கறை, 12ம் நூற்றாண்டிலிருந்து அவற்றைப் பாதுகாத்து வைத்திருக்கும் தன்மை எனப் பல விஷயங்கள் எனக்கு பிரமிப்பையும், நமது நாட்டில் இது போன்று பல பொக்கிஷங்கள் இருந்தும் பாதுக்காக்க இயலவில்லையே என்ற ஏக்கத்தையும் தந்தது. அதுவும் பல கி.மீ. நீளத்தில் அமைந்திருக்கும் லூவர் மியூஸியத்தைப் பார்த்து பிரமித்துவிட்டேன். அதைச் சுற்றிப் பார்க்கவே எனக்கு நேரம் போதவில்லை. அரை கிரவுண்ட் அளவிற்கு ஒரு ஓவியக்கிழி (கேன்வாஸ்), அதில் நூற்றுக்கணக்கான உருவங்கள் என பிரமாண்டமான ஒவ்வொரு ஓவியத்தையும் பார்க்கவே பலமணி நேரம் பிடித்தது. இந்த பிரமிப்பு என்னை விட்டு இன்னும் அகலவில்லை.

கே: வெளிநாடுகளில் ஓவியர்களுக்கும், ஓவியங்களுக்கும் கிடைக்கும் முக்கியத்துவமோ, மரியாதையோ நம் நாட்டில் கிடைப்பதில்லை என்பது பற்றி உங்கள் கருத்து என்ன?
ப: முழுமையாக அப்படிச் சொல்ல முடியாது. அது ஒவ்வொரு காலகட்டத்தைச் சேர்ந்தது. மற்றுமொரு முக்கியக் காரணம் சூழல். சென்னையில் இருந்து பணிபுரிவதற்கும், மும்பையில் இருந்து பணிபுரிவதற்கும், இண்டர்நேஷனல் லெவலில் பணி புரிவதற்கும் ஏற்றவாறு வரவேற்பும், முக்கியத்துவமும் இருக்கும். படைப்பு முதலில் உலகத்திற்குத் தெரிய வேண்டும். ரஹ்மானின் இசை ஆஸ்கர் அளவிற்குப் போனது போல ஒரு படைப்பு முன்னெடுத்துச் செல்லப்பட்டால் நிச்சயம் அது அதிக கவனம் பெறும் என்பதில் ஐயமில்லை. அதே சமயம் அங்கீகாரம் என்பது எல்லோருக்கும் எப்போதும் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. அதற்கு காலம், சூழல் என பல காரணிகள் உண்டு. உதாரணமாக தியாகராஜ சுவாமிகளை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் அங்கீகாரத்திற்காகவா அத்தனை சாகித்தியங்களைப் படைத்தார்? அவர் பக்தி மேலீட்டால் அன்று பாடிய பாடல்கள் இன்று உலகெங்கும் பரவி, அமெரிக்காவில் தியாகராஜர் உற்சவம் நடக்கும் அளவிற்கு வளர்ந்திருக்கிறது. ஒரு கலைஞன் படைப்பை உண்மையான உழைப்போடும், அர்ப்பணிப்பு உணர்வோடும் தந்தால் போதும். அதுவே அவனுக்கு வெற்றியைத் தரும்.

கே: ஓவியர் என்ற முறையில் பல இலக்கியவாதிகளுடன் உங்களுக்கு நெருங்கிய தொடர்பு இருக்கும். அவர்களுள் உங்களைக் கவர்ந்தவர் யார், ஏன்?
ப: சுஜாதா, பிரபஞ்சன், வாலி, வைரமுத்து, ஸ்டெல்லா புரூஸ், பாலகுமாரன், இளையராஜா, இந்திரா சௌந்தர்ராஜன், பட்டுக்கோட்டை பிரபாகர் என்று பல எழுத்தாளர்களைச் சொல்லலாம். அவர்களது படைப்புகளை வாசிக்கும் போதே அந்த மூட் வந்து விடும். சுஜாதா ஓவியத்திற்காக நிறைய ரெஃபரன்ஸ் அனுப்புவார். தான் படித்த, சேகரித்த விஷயங்களை நமக்கும் அனுப்பி வைப்பார். அதேபோல் தான் பிரபஞ்சனும். அவர்கள் என்ன மூடில் எழுதினார்களோ அந்த ‘மூட்' எனக்கும் வரும்போது படைப்பு சிறப்பாக வெளிப்படுகிறது. ஸ்டெல்லாபுரூஸின் ‘மாய நிலா' தொடரின் லோகநாதன் கேரக்டர் எல்லாம் இன்னும் என் நினைவில் இருக்கிறது. முதலில் அந்தப் படைப்பிற்கு நான் ரசிகனாக இருக்க வேண்டும், அதன் பின்னர்தான் வாசகனை ரசிக்க வைக்க முடியும். ‘ரத்தம் ஒரே நிறம்' ஓவியம் அப்படி வரைந்தது தான். அது குமுதத்தில் ஆரம்பத்தில் கறுப்பு-சிவப்பு-வெளுப்பு என்று மூன்று இதழ் மட்டும் தொடராக வெளி வந்தது. பின் நின்று விட்டது. நான் அப்போதுதான் என் கேரியரில் காலூன்றிக் கொண்டிருந்த நேரம். தொடர் நின்று போனதும் எனக்கு மிகவும் வருத்தமாகி விட்டது. அப்புறம் மீண்டும் சுஜாதா ‘ரத்தம் ஒரே நிறம்' என்று அதை எழுதியபோது என்னையே ஓவியம் வரையச் சொன்னார்கள். அதற்கு நான் பாக்கியம் ராமசாமி,(ஜ.ரா.சு) ரா.கி. ரங்கராஜன், புனிதன், பால்யூ, எஸ்.ஏ.பி என்று பலருக்கு நன்றி சொல்ல வேண்டும். அந்த வாய்ப்பை எனக்குத் தான் வழங்க வேண்டுமென்று கட்டாயம் இல்லை. ஆனாலும் கொடுத்தார்கள். நானும் அதைச் சிறப்பாகச் செய்தேன். இப்படிப் பல விஷயங்களைச் சொல்லலாம்.

சுஜாதா ஒரு அற்புதமான மனிதர். என்னை ‘பாண்டவாஸ்' 3D அனிமேஷன் படத்திற்காகக் கட்டாயப்படுத்தி, அழைத்துச் சென்று பயன்படுத்திக் கொண்டார். அவருடைய 'பூக்குட்டி' தொடருக்கு வாட்டர்கலரில் வரைந்தது மறக்க முடியாதது.

கே: விவேகானந்தர் இல்லத்தில் பண்டைய இந்து கலாசாரத்தை ஓவியங்களாகத் தந்திருக்கிறீர்கள். இதுபோன்று பல புதுமைகளைச் செய்திருக்கிறீர்கள். அந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்!
ப: ராமகிருஷ்ண மடத்துடன் எனக்கு பல ஆண்டுகளாகத் தொடர்பு உண்டு. ராமகிருஷ்ண விஜயத்தில் நான் தொடர்ந்து வரைவதுண்டு. அதன் மூலம் கிடைத்த வாய்ப்புதான் அது. விவேகானந்தர் இல்லத்தில் உள்ளே நுழைந்ததும் பார்த்தால் சுவாமி விவேகானந்தரை ஊர்வலமாக அழைத்து வரும் ஒரு மிகப் பெரிய ஓவியம் இருக்கும். அது உண்மையில் சிறு ஓவியமாக சுவாமி விவேகானந்தரின் நூற்றாண்டையொட்டி ராமகிருஷ்ண விஜயத்திற்காக நான் வரைந்தது. சுவாமி வெளிநாட்டுச் சுற்றுப் பயணத்தை முடித்து விட்டுச் சென்னைக்கு வந்தபோது அளித்த வரவேற்பைச் சித்திரிப்பது. கோச் வண்டி, பழைய விவேகானந்தர் இல்லம், அதன் நுழைவாயில், சுவாமிஜி, மற்ற கேரக்டர்கள் என்று வரைவதற்கு மிகவும் நேரம் எடுத்துக் கொண்ட படம் அது. அதை மடத்தினர் மிகவும் விரும்பியதால், பெரிதாக்கி, திரும்ப பெயிண்ட் செய்து, டிஜிடைஸ் செய்து அங்கே வைக்கப்பட்டது. மூன்று தளங்களில் அங்கே என் ஓவியங்கள் இருக்கின்றன.

கே: உங்களது திரைப்பட அனுபவங்கள் குறித்து...
ப: திரைப்படத்துறையில் உள்ள நண்பர்களுக்கு ஆலோசனைகள் சொல்வதுண்டு. கோட்டோவியம் அளித்து உதவுவதுண்டு. பாரதிராஜாவின் ‘நாடோடித் தென்றல்' பீரியட் படத்துக்கு விளம்பரப் பணிகளில் பங்கு பெற்றிருக்கிறேன். அப்புறம் பாண்டியராஜன், யூகிசேது ஆகியவர்களுக்காக டைட்டில், பப்ளிசிட்டி போற வேலைகளைச் செய்திருக்கிறேன். டிராயிங்கை முதலில் நான் வரைந்து விட்டுச் செய்ய இயலுவதால் 3D அனிமேஷன் போன்றவற்றைச் செய்கிறேன்.

##Caption## கே: ஓவியம் சம்பந்தப்பட்ட மறக்க முடியாத சம்பவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்!
ப: பல சம்பவங்கள். ஒரு புத்தகத்தின் அட்டைப்படத்திற்காக எம்.எஸ். உதயமூர்த்தி அவர்களை வரைந்திருந்தேன். அதைப் பார்த்துவிட்டு அவருக்கு மிகவும் ஆச்சரியம். 'எப்படித் தம்பி, சின்ன வயசுல என் முகம் இப்படித்தான் இருந்தது, எப்படி உங்களால அதைப் பார்க்காம, அப்படியே அச்சு அசலா வரைய முடிஞ்சிச்சு' என்று கேட்டார்.

கள்ளிக்காட்டு இதிகாசத்திற்காக ஒரு படம் போட்டிருந்தேன். வெள்ளிக்கிழமை இதழில்தான் வெளியாகும். திங்கட்கிழமை அதிகாலையில் எனக்கு ஒரு போன். “படம் ரொம்ப அற்புதமாக இருக்கிறது” என்று. இதழே இன்னும் வெளியாகவில்லை, யாரோ ஒருவர் பாராட்டுகிறாரே என்று, “சார், இஷ்யூ இன்னும் வரவேயில்லையே. நீங்க எங்கயும் போஸ்டர்ல பாத்துட்டுப் பேசறீங்களா?” என்றேன். “என்ன மணியம் செல்வன், நான் பாலசுப்ரமணியம் பேசறேன். டேபிள் காபி வந்தது. பார்த்தேன். ரொம்ப பிரமாதம், அதான் உங்களக் கூப்பிட்டுச் சொல்லலாம்னு போன் பண்ணேன்” என்றார். நான் ஆடிப் போய்விட்டேன். எதற்கு இதைச் சொல்கிறேன் என்றால். நான் 77ல் இருந்து படம் போட்டுக் கொண்டிருக்கிறேன். ஓர் ஓவியருக்கு ஒரு பெரிய பத்திரிகையின் நிர்வாகி போன் செய்து பேசவேண்டிய அவசியமே இல்லை. இது மறக்க முடியாதது.

இதுபோன்ற அனுபவங்கள் மட்டுமல்ல; சில வித்தியாசமான சம்பவங்கள் கூட நடந்திருக்கின்றன. அந்தச் சம்பவங்களினால் நான் எனது ஓவியங்களில் வன்முறை, கொலை, விபத்து போன்றவற்றை வரைவதை முற்றிலுமாக நிறுத்தி விட்டேன். நல்ல விஷயங்களை மட்டுமே நமது படைப்பில் சொல்ல வேண்டும் என்பதை அந்தச் சம்பவங்கள் எனக்கு உணர்த்தின.

கே: அந்தச் சம்பவங்களைப் பற்றிக் கூற முடியுமா?
ப: ஒரு ஓவியம் பார்ப்பவனை நெகிழச் செய்ய வேண்டும். மகிழச் செய்ய வேண்டும். எதிர்மறை எண்ணங்களை ஏற்படுத்திவிடக் கூடாது. அதனால் நான் ரத்தம், கொலை, கொள்ளை, மரணம் எனப் பலவற்றை தற்போது வரைவதில்லை. போர்க் காட்சிகளை வரைந்திருக்கிறேன். அது வேறு. அதாவது ஒரு டாக்டர் மருத்துவம் செய்வதற்காக கத்தி எடுப்பதற்கும் கொலைகாரன் கத்தி எடுப்பதற்கும் இருக்கும் வேறுபாட்டைப் போன்றது.

ஒருமுறை விகடனில் ஒரு கார்ட்டூன் போட்டிருந்தேன். ஊழலினால் ஒரு விமானம் பாதியாகி இரண்டாக உடைந்து அதிலிருந்து எல்லோரும் கீழே விழுகின்ற மாதிரி. அது ஒரு ஜோக் கார்ட்டூன். ஆனால் அந்த இதழ் வெளியான அதே வாரத்தில் குவாஹாத்தியில் ஒரு ஃபிளைட் அதே மாதிரி விபத்து ஆகிவிட்டது. ஒரு நாவலில் கார் தீப்பற்றி எரிவது போல் போட்டிருந்தேன். சில நாள்களில் என் மனைவி வெளியே செல்லும்போது எங்கள் காரில் தீப்பிடித்து விட்டது. காப்பாற்றியது பொதுமக்கள்தான். ஒரு படைப்பில் அது சாதாரண ஓவியமாக இருந்தாலும் கூட எதிர்மறை எண்ணங்கள், காட்சிகளை வைக்கக் கூடாது என்பதை உணர்த்துவதற்காக இந்த அனுபவங்கள் ஏற்பட்டதாக நான் கருதுகிறேன். வாழ்க்கைத் தேவைக்காக நாம் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நினைப்பே தவறானது.

கே: விருதுகள் பற்றி உங்கள் கருத்தென்ன, நீங்கள் பெற்ற விருதுகள் குறித்து...
ப: உலகத்திலேயே மிகவும் கடினமான பணி சிற்பம் வடிப்பதுதான். அப்படிப்பட்ட சிற்ப சாஸ்திரம் அறிந்த கணபதி ஸ்தபதி அவர்கள் தன்னுடைய தந்தையாரின் நூற்றாண்டு நினைவு நாளின்போது என்னை அழைத்து கௌரவப்படுத்தியிருக்கிறார். ஆகம சாஸ்திரத்தில் மிகப்பெரிய நிபுணர் சர்வேஸ்வர குருக்கள். சமஸ்கிருதக் கல்லூரியில் பணியாற்றியவர். சாஸ்திர விற்பன்னர். அவர் என்னை அழைத்து கௌரவப்படுத்தியிருக்கிறார். ஒரு சிவாச்சாரியாருக்கும் ஓவியருக்கும் எந்த சம்பந்தமும் இருக்க வாய்ப்பில்லை. இருந்தாலும் என் படைப்பினால் கவரப்பட்டு என்னை அழைத்து கௌரவித்தார். மூத்த ஓவியர் கோபுலு, சாவி ஆகியோர் அழைத்து கௌரவம் செய்திருக்கின்றனர். ராமகிருஷ்ண மடத்தினருக்கு என்மீது மிகுந்த அன்புண்டு. அவர்கள் விருது வழங்கியிருக்கின்றனர். பல அமைப்புகள் எனக்கு விருதுகள் வழங்கி கௌரவம் செய்திருக்கின்றன. விருதுகளைத் தேடிச் செல்லும் வழக்கமும் எனக்கில்லை.

கே: உங்கள் எதிர்காலத் திட்டங்கள் என்னென்ன?
ப: படைப்பு என்பது ஒரு தியானம் போன்றது. எல்லாவற்றையும் உள்வாங்கிக் கொண்டு, அர்ப்பணிப்பு உணர்வோடும், கலையம்சத்தோடும், அழகுணர்ச்சியோடும் வெளிப்படுத்தப்படுவதுதான் கலை. அதை வெறுமனே ஊதியத்திற்காக மட்டும் செய்வது சரியாகாது. நாம் எதைப் படைத்தாலும் அதனால் நம் கலாசாரம், பண்பாட்டுக்கு இழிவு நேர்ந்துவிடக் கூடாது என்பதை நான் மிக முக்கியமாகக் கருதுகிறேன். பெயிண்டிங்கில் இன்னும் நிறையச் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. ஆன்மீக ஓவியங்களும், சமகால சாதனையாளர்கள் பற்றிய ஓவியங்களும் தீட்ட வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. நிறைய வெளிநாடுகளுக்குச் சென்று பல ஓவியக் கண்காட்சிகளைப் பார்க்கும் ஆர்வமும் இருக்கிறது.

கே: அமெரிக்காவில் வாழும் தமிழர்களுக்கு நீங்கள் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?
ப: 1970-80களில் என் ரசிகர்களாக இருந்தவர்கள் பலர் இன்று வெளிநாடுகளில் இருக்கிறார்கள். அதன் பிறகு அவர்கள் ஆர்வங்கள் மாறிப் போயிருக்கலாம்ம். தமிழ்ப் பத்திரிகை பார்ப்பதே கூடக் குறைந்து போயிருக்கும். ஆனால் இன்றும் என் அக்காலப் படைப்புகளை மறக்காமல், இங்கு வரும்போது என்னைச் சந்தித்து தங்களது பழைய அனுபவங்களை நினைவு கூர்வதும், என் ஓவியங்களை கேட்டு வாங்கிச் செல்வதும் என்னை நெகிழச் செய்கிறது. வெளிநாட்டுச் சூழல் காரணமாக ஆர்வங்கள் மாறி விடுகின்றன. ஆனாலும் அவர்கள் தமிழ்ப் பத்திரிகைகளுக்கென்று நேரம் ஒதுக்குவதும், ஆதரிப்பதும் மகிழ்ச்சியானது.

தென்றல் வாசகர்களுக்காக நேரம் ஒதுக்கி, விரிவாக நம்மோடு உரையாடிய மணியம் செல்வம் அவர்களுக்கு நன்றி கூறி விடைபெற்றோம்.

***

ஆதியந்த மகாப்ரபு

ஒருமுறை சென்னை மத்ய கைலாஷ் ஆலயத்தின் நிர்வாகி என்னை அணுகினார். ஆதியந்த மகாப்ரபுவின் ஓவியம் வரைந்து தர வேண்டுமென்று என்னைக் கேட்டார். மகாபாரதத்தை வியாசர் சொல்லச் சொல்ல எழுதத் தொடங்கியவர் விநாயகர். அதனை முடித்து வைத்தவர் ஆஞ்சநேயர். இருவருமே பிரம்மசாரிகள். இருவருமே மனித உடலும், மிருக முகமும் கொண்டவர்கள். இப்படி இருவருக்குமிடையே பல ஒற்றுமைகள். அவர்கள் இருவரும் இணைந்த தோற்றத்திலான ஒரு சிலையை பிரதிஷ்டை செய்ய விரும்புகிறோம். அந்த ஓவியத்தை நீங்கள்தான் வரைந்து தரவேண்டும் என்றார்.

நான் தெய்வப் படங்களை வரைவதற்கு முன்னால் முதலில் யோக சூத்திரங்களைப் பார்த்து, அந்த அடிப்படையில்தான் வரைவேன். ஆனால் ஆதியந்த மகாப்ரபுவைப் பற்றி யோக சூத்திரக் குறிப்புகள் இல்லை. என்னை வற்புறுத்தவே, ‘நான் வரைந்து தருகிறேன். ஆனாலும் அது சரிதானா என்பதை ஆன்மீகப் பெரியவர்களிடம் காட்டி உறுதிசெய்து கொண்டு பின்னர் உங்கள் வேலையைத் தொடங்குகள்' என்று கூறிவிட்டு அதற்கான பணியை ஆரம்பித்தேன். தினந்தோறும் நானும் என் மனைவியும் விடியற்காலையில் எழுந்து சுற்று வட்டாரத்தில் இருக்கும் பல விநாயகர், ஆஞ்சநேயர் ஆலயங்களுக்குப் போவோம். நன்கு அவதானித்த பின் ஆதியந்த மகாப்ரபுவின் 11 ஓவியங்கள் வரைந்தேன். நான் வரைந்தேன் என்று சொல்வதை விட, என்னுள் அந்த இறைவன் புகுந்து வரையச் செய்தான் என்பதுதான் உண்மை. அதில் எனது பெயரைக் கூட நான் போட்டுக்கொள்ளவில்லை. காபிரைட் உரிமை உட்பட எல்லாவற்றையும் அவர்களிடமே கொடுத்து விட்டேன். அவற்றுள் ஒன்றைத் தேர்ந்தெடுத்தனர். காஞ்சி மகாபெரியவரின் சகோதரர் சிவம் மிகப் பெரிய சாஸ்திர விற்பன்னர். அவரிடம் காட்டி ஒப்புதல் பெற்ற பின்னர் சிலை வடிக்கப்பட்டது. மத்ய கைலாஷ் ஆலயத்தில் இப்போதும் அந்த கம்பீரமான சிலையைப் பார்க்கலாம்.

- ம.செ.
***

திருக்குறள் ஓவியங்கள்

திருக்குறளுக்கு வரைந்த ஓவியம் மறக்க முடியாதது. உலகத் தமிழ் மொழி அறக்கட்டளையின் சார்பாக அமெரிக்காவிலிருந்து ராம் மோகன் அவர்கள் என்னுடன் தொடர்பு கொண்டார். திருக்குறளைச் செம்பதிப்பாகத் தாம் கொண்டுவரப்போவதாகவும், அதற்கு அதிகாரத்துக்கு ஒன்று வீதம் 133 படங்களை வரைந்து தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். பத்து குறட்பாக்களிலிருந்தும் ஒரு மையக் கருத்தைத் தேர்ந்தெடுத்து, அதை அந்த ஓவியம் விளக்குவதாக இருக்க வேண்டும். மிகவும் கடினமாக உழைக்க வேண்டி இருந்தது. அதிக நேரம் எடுத்துக் கொண்டேன் என்பதும் உண்மை. முதல் சில அதிகாரங்களுக்கும் காமத்துப்பால் முழுவதற்கும் வரைந்து விட்டேன். ஆனால் நடுவில் உள்ள பொருட்பால் அதிகாரங்களை வரைவது மிகுந்த சிரமமாகி விட்டது. நிறைய ரெபரன்ஸ் செய்து பின்னர்தான் அந்தப் பணியை முடித்தேன். உண்மையிலேயே அது ஒரு சவாலான, மனநிறைவைத் தந்த பணி.

-ம.செ.
***

தேடிவந்த கொண்டைப் பறவைகள்

‘விழிப்புணர்வுக் கதைகள்' என்று விகடனில் ஒரு தொடர் வந்தது. 'கொண்டைக் குருவி'யை சப்ஜெக்டாகக் கொண்டு ஒரு கதை. நான் வரைய வேண்டியது கொண்டைக் குருவியைத் தான். அதை நான் பார்த்ததில்லை. அதன் ஆங்கிலப் பெயரும் எனக்குத் தெரியாது. என்னிடம் உள்ள என்சைக்ளோபீடியா கலெக்‌ஷனிலிருந்து அது போன்ற அமைப்பு உள்ள படத்தைத் தேடி, அதற்கு மிகவும் நெருக்கமாக இருந்த ஒன்றை வரைந்தேன். தாய், தந்தை, அதன் குஞ்சு என மூன்றையுமே வரைய வேண்டும். மிகவும் கஷ்டப்பட்டு, இரவு பகலாகக் கண் விழித்து அதை வரைந்து அனுப்பினேன். அது விகடன் எம்.டி.யின் மேஜைக்குப் போனது. அவர் மறுநாள் என்னை வரச் சொன்னார். என்னிடம், “நீங்கள் நன்றாக முயற்சித்திருக்கிறீர்கள். ஆனால் பறவையின் சரியான உருவம் இதுதான்” என்று கூறி அதன் புகைப்படத்தைக் காட்டினார். நானும் அங்கேயே புதிதாக ஒன்றை வரைந்து கொடுத்துவிட்டு வந்தேன்.

இதழ் வெளியான மறுநாள், விடியற்காலை. எனது ஓவிய அறைக்கு உள்ளே நுழைந்த நான் ஜன்னலைப் பார்த்ததும் திடுக்கிட்டுப் போனேன். அதிர்ச்சி+ஆனந்தம். என் மனைவியின் பெயரைச் சொல்லி சத்தமாக அழைத்தேன். என்னவோ ஏதோ என்று பயந்த என் மனைவி, மைத்துனர் எல்லோரும் என் அறைக்கு ஓடி வந்தனர். நான் எந்தப் பறவையை முந்தின நாள் வரைந்திருந்தேனோ அதே பறவைகள் இரண்டும் என் அறை ஜன்னலின் அருகே அமர்ந்திருந்தன. நான் திகைத்துப் போய் நின்று விட்டேன். அந்தப் பறவைகள் ஏன் அங்கு வந்தன?

இந்தப் பறவைகளை எவ்வளவு சிரமப்பட்டு கடமையுணர்வோடு வரைந்தேன் என்பது எனக்கும் அந்த உருவத்திலிருந்த அந்தப் பறவைகளின் ஆன்மாவிற்கும் தான் தெரியும். அதைப் பாராட்டும் விதமாகவே அந்த ஆன்மாக்கள் அங்கு வந்ததாக நான் உணர்கிறேன். அந்தப் பறவைகள் அதற்குப் பிறகு இதுநாள்வரை என் கண்ணில் படவில்லை. இது ஒரு மெய்சிலிர்க்கும் அனுபவம். எனது படைப்பைப் பாராட்டுவதற்காக அந்தப் பறவைகள் ரூபத்தில் ஆண்டவனே வந்ததாக உணர்கிறேன். அப்போதைய எனது உணர்ச்சிகளை வார்த்தைகளால் விவரிப்பது மிகக் கடினம்.

-ம.செ.
***

சந்திப்பு, புகைப்படங்கள்: அரவிந்த் சுவாமிநாதன்

© TamilOnline.com