ஸ்ரீலங்கா தமிழர் - ஒரு நேரடி ரிப்போர்ட்
ஆங்கிலத்தில்: கௌரி மகேந்திரன்
தமிழ்வடிவம்: மதுரபாரதி

ஸ்ரீலங்காவில் துன்பத்தின் எல்லையையே தொட்டுவிட்ட தமிழர்களுக்குப் பெருமளவில் உதவும் அமைப்புகளில் ஒன்று சின்மயா மிஷன் ஆகும். இதன் சார்பாக நிவாரணப் பணிகள் ஆற்றும் கௌரி மகேந்திரன் (பார்க்க: ‘ஸ்ரீலங்கா தமிழருக்கு உதவ சின்மயா மிஷன் வேண்டுகோள்', தென்றல், மே 2009) அங்கே சென்றிருந்தபோது தாம் கண்டவற்றை விவரிக்கிறார்...

செட்டிகுளம், வவுனியா, மன்னார் ஆகிய பகுதிகளுக்கு நானும் எனக்கு உதவியாக இருக்கும் சூரியதேவாவும் ரயிலில் போனோம். மே 13 அன்றைக்குக் காலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்றோம். உள்நாட்டில் புலம்பெயர்ந்தோர் முகாம்களுக்குச் சென்றோம். காட்டுமரங்களை அகற்றி அமைக்கப்பட்ட திறந்தவெளிச் சிறைகளாக அவை இருந்தன. சுற்றி வளைத்து முள்கம்பி வேலி. அங்கிருப்போர் வெளியே செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. தகரக் கூரை போட்ட பத்தடிக்கு ஐந்தடிக் கூடாரத்தில் 3 குடும்பங்கள் இருக்கும். 12 மணி உச்சிவெயிலில் நாங்கள் 2.30 மணிநேரம் காத்திருந்து அங்கிருந்த ஒருவரைச் சந்திக்க ராணுவத்தின் அனுமதி பெற்றோம்.

தனது உறவினர் ஒருவரைச் சந்திக்க வந்திருந்த எங்கள் தூரத்து உறவினர் ஒருவரோடு நாங்கள் முகாமுக்குள் போனோம். யாரையாவது அவர்கள் சந்திக்க வேண்டுமென்றால் சுமார் 2-3 கி.மீ. தூரம் நடந்து செக்-பாயிண்டை அடைய வேண்டும். தமது உற்றாரைப் பார்த்ததும் அவர்கள் கதறுவது மனத்தை உருக்கும் காட்சி. அங்கே உணவு கிடையாது, குடிநீருக்கும் பஞ்சம் என்று அறிய வந்தோம். அநியாய விலை என்பதால் இவற்றை வாங்கவும் முடியாது. தண்ணீர் ஒரு லிட்டர் பாட்டிலின் விலை ரூ. 500. ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போல ஓரளவு வசதி படைத்தவர்கள்தாம் இந்த முகாம்களில் பெரும்பாலும் இருக்கிறார்கள் என்றாலும் இவர்களை ‘உள்நாட்டில் புலம்பெயர்ந்தோர்' (Internally Displaced Persons) எனக்கூறி இங்கே அடைத்துப் போட்டிருக்கிறார்கள்.

எங்களுக்குக் கொடுக்கப்பட்டது 15 நிமிடங்கள்தாம். பிஸ்கட், உணவுப் பொட்டலம், துணிமணி எதையுமே பார்க்க வருவோர் தர அனுமதியில்லை. நல்ல வேளையாக நாங்கள் ஒன்றன் மேல் ஒன்றாக 3-4 ஆடைகளை அணிந்து சென்றிருந்தோம். அவற்றிலிருந்து கழட்டிக் கொடுத்தோம். முந்தைய வாரம் பெய்த மழையில் அவர்களது பாய்களும் கம்பளங்களும் நனைந்து போயிருந்தன, வேறு வழியில்லாமல் அவற்றையே அவர்கள் பயன்படுத்த வேண்டியிருந்தது.

சென்ற ஆண்டு ஜூன் மாதத்துக்குப் பிறகு குழந்தைகள் பள்ளிகளுக்குச் செல்லவில்லை. அரசாங்க அனுமதியோடு அவர்களுக்குப் புத்தகங்கள் கொடுக்கவும் ஆசிரியர்களை ஏற்பாடு செய்யவும் முயல்கிறோம். 14 வயதிலிருந்து 25 வயதுக்குட்பட்ட இளையோரை முகாம்களிலிருந்து அகற்றி யாருமறியாத இடத்தில் வைத்திருப்பதாக அறிய வந்தோம். கரும்பலகை, நோட்டுப் புத்தகங்கள், எழுது பொருள்கள் ஆகியவை கிடைத்தால் பாடம் நடத்த ஆசிரியர்கள் தயார். மண்டல நிர்வாகம் இவற்றைத் தர எங்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. தவிர, ஆசிரியர்கள் அணிந்து கொள்ளப் புதிய உடைகளைத் தரவேண்டும். பழைய உடைகளை அரசு அனுமதிப்பதில்லை. மிக நல்ல நிலையில் இருந்தால் அவற்றைத் துவைத்து, இஸ்திரி போட்டு, புதியவை போலத் தரமுடியும். உடைகள், காலணிகள், மருந்துகள் ஆகியவையும் அவசியத் தேவைகள்.

இவற்றையெல்லாம் சாதிக்கப் பெருமளவு நிதி தேவை. நன்கொடைகளுக்கு 501(c)(3) பிரிவின் கீழ் வரிவிலக்கு உண்டு. Tax ID: 51-017-5323. ‘Chinmaya Mission West' என்ற பெயரில் காசோலைகளை அனுப்ப வேண்டும். காசோலையில் கீழே “CORD-Sri Lanka” என்று தவறாமல் குறிப்பிட வேண்டும். முகவரி: Chinmaya Mission West, Meera Raja, 2246 West Cullom Ave., Chicago, IL 60618, USA.

எல்லைகளில்லா மருத்துவர்கள் செய்யும் எல்லையற்ற நற்பணிகள்
##Caption## ஸ்ரீலங்காவில் போரினால் பாதிக்கப்பட்ட ஒன்றரை லட்சம் தமிழர்களுக்கு அவசர மருத்துவ உதவியை எல்லைகளில்லா மருத்துவர்கள் (Doctors Without Borders) என்ற அமைப்பு வழங்கி வருகிறது. மருத்துவமனைகளிலும் முகாம்களிலும் உயிர்காக்கும் அறுவை சிகிச்சை, மனநல மருத்துவம், ஐந்து வயதுக்குட்பட்ட சிறார், கருவுற்ற/தாய்ப்பாலூட்டும் தாய்மார்களுக்கு உணவுத் திட்டம் எனப் பலவகைச் சேவைகளையும் இந்நிறுவனம் செய்துவருகிறது. பன்னாட்டு மருத்துவ உடல்நல அமைப்பிலிருந்து (International Medical Health Organization) உடனடியாக 50000 டாலர் வழங்கக் கோரியுள்ளது இந்த அமைப்பு. சற்றேறக்குறைய 280 பணியாளர்கள் ஸ்ரீலங்காவின் பாதிக்கப்பட்ட இடங்களில் சேவை புரிந்து வருகின்றனர்.

488 படுக்கைகள் கொண்ட வவுனியா மருத்துவ மனையில் 1135 நோயாளிகள் உள்ளனர் என்றால் நிலைமையின் தீவிரத்தைப் புரிந்து கொள்ள முடியும். ஏப்ரல் மாதத்தின் ஒரே வாரத்தில் மட்டுமே 841 காயமுற்றோர் சேர்க்கப்பட்டனர். அந்த வாரத்தில் மட்டுமே 407 அறுவை சிகிச்சைகள் நடத்தப்பட்டன என்றால் அங்கிருக்கும் மருத்துவர் எவ்வாறு அயராது உழைக்கின்றனர் என்பதையும் புரிந்து கொள்ளலாம்.

சொத்துக்கள் இழப்பு, குடும்பத்திலுள்ளவரின் கோர மரணம், காயம், உறவினர் காணாமற் போவது, தொடர்ந்து இடப்பெயர்ச்சி, பிரிவுத் துயர், சுதந்திரமின்மை என்று பல காரணங்களால் இவர்கள் மனநலமும் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளனர். கணவர் ஒரு முகாமிலும் மனைவி மற்றொரு முகாமிலும் இருந்தபோதும் ஒருவர் உயிரோடு இருப்பது மற்றொருவருக்குத் தெரியாமல் போகலாம். மனநல மருத்துவர் ஒருவர் 25-30 மருத்துவப் பணியாளர்களுக்குப் பயிற்சி தந்து வருகிறார்.

எல்லைகளில்லா மருத்துவர்களின் இந்தப் பணிகளுக்கு நீங்கள் உதவத் தொடர்பு கொள்ள: Allison Morris - 212-655-3795 - allison.morris@newyork.msf.org

ஆங்கிலத்தில்: கௌரி மகேந்திரன்
தமிழ்வடிவம்: மதுரபாரதி

© TamilOnline.com