பா. ராகவன்
தமிழ் இலக்கியப் பரப்பில் புதுமைப்பித்தன் தொடங்கி பல்வேறு எழுத்தாளர்கள், பல்வேறு கால கட்டங்களில் தங்களது கருத்துக்களாலும், கதை சொல்லும் உத்திகளாலும், நடையம்சங்களாலும் முத்திரை பதித்துச் சென்றுள்ளனர். ஈராயிரத்தின் பிற்பகுதிகளில் இளைஞர்கள் பலர் பலவித புத்திலக்கிய முயற்சிகளில் ஈடுபடத் தொடங்கினர். அவர்களுள் இயல்பான வாழ்க்கைச் சித்திரிப்பில், சம்பவ விவரிப்பில், கதை உரையாடல்களில் தனிக் கவனம் செலுத்தி, புதுமையான பல சிறுகதைகளையும் நாவல்களையும் படைத்து வரும் எழுத்தாளராக அதிகக் கவனம் பெறுபவர் பா. ராகவன்.

38 வயதாகும் பா. ராகவன், சென்னையில் பிறந்தவர். பள்ளிப்படிப்பு சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில். தொடர்ந்து இயந்திரவியலில் பட்டயப் படிப்பை முடித்த இவர், எழுத்தார்வம் காரணமாகப் பத்திரிகையுலகின் மீது கவனம் செலுத்தினார். தாய், அமுதசுரபி, கணையாழி போன்ற இதழ்களில் சிறுகதைகள் வெளியாகின. பின்னர் கல்கி மாத இதழில் துணையாசிரியராகச் சேர்ந்தார். விமர்சனம், பேட்டி, சிறுகதை, கட்டுரை, குறுநாவல் என ஆர்வங்கள் பல தளங்களில் விரிய, கல்கி ஒரு சிறந்த பயிற்சிக் களமானது. அப்போது இவருடைய முதல் குறுநாவலான 'நிலா வேட்டை', முதல் சிறுகதைத் தொகுப்பான 'மூவர்' ஆகியவை வெளியாகிப் பரவலான கவனத்தைப் பெற்றது. கல்கியிலிருந்து விலகிக் குமுதம் நிறுவனத்தில் இணைந்த ராகவன், அதன் துணையாசிரியராகவும், பரவலான வாசக கவனத்தைப் பெற்ற 'குமுதம் ஜங்ஷன்' இதழின் பொறுப்பாசிரியராகவும் பணியாற்றினார்.

##Caption## ஜங்ஷன், தமிழின் குறிப்பிடத் தகுந்த பத்திரிகை முயற்சிகளுள் ஒன்றாக இன்றளவும் நினைவுகூரப் படுகிறது என்றும், நவீன இலக்கியப் படைப்பாளிகளுக்கும் வெகுஜன வாசகர்களுக்கும் இடையிலான சரியான பாலமாக அமைந்த சிறந்த இதழ் என்றும் குறிப்பிடும் ராகவன், தற்போது நியூ ஹொரைசன் மீடியாவின் முதன்மை ஆசிரியராகப் பணியாற்றுகிறார். இவரது தலைமையில் 500க்கும் மேற்பட்ட நூல்கள் வெளியாகி இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. நாவல், சிறுகதை, கட்டுரை, அரசியல் நூல்கள் என இதுவரை நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கும் பா. ராகவன், முழுநேர எழுத்துப் பணியே தனது பொழுதுபோக்கு, தியானம் எல்லாம் என்கிறார்.

சர்வதேச அரசியல் விஷயங்களை அவதானித்து இவர் எழுதிய அரசியல் கட்டுரைகளுக்கு மிகுந்த வரவேற்பு கிடைக்கவே தொடர்ந்து பல கட்டுரைத் தொடர்களைப் படைத்தார். அந்த வகையில் இவர் எழுதிய அமெரிக்க அரசியல் வரலாறு, பாகிஸ்தான் அரசியல் வரலாறு, 'நிலமெல்லாம் ரத்தம்', (http://nilamellam.blogspot.com/) போன்றவை வாசகர்களை ஈர்த்ததுடன், புத்தக வடிவிலும் விற்பனையில் சாதனை படைத்தன. கனமான விஷயங்களை எளிமையாக எழுதும்போது வாசக வரவேற்பு நிச்சயம் இருக்கும் என்பதை அவரது 'மாயவலை', 'யுத்தம் சரணம்' போன்ற பல அரசியல் தொடர்கள் நிரூபித்தன.

'பாரதிய பாஷா பரிஷத்' விருது பெற்றுள்ள பா. ராகவனை 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' இந்தியாவின் பிரபலமான இளம் பத்து எழுத்தாளர்களுள் ஒருவராக அறிமுகப்படுத்தியுள்ளது. 'அலகிலா விளையாட்டு', 'மெல்லினம்' போன்ற இவரது நாவல்கள் இலக்கியப்பீடம், திருப்பூர் தமிழ்ச் சங்க விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளன. 'தீமொட்டு' என்ற இவரது சிறுகதை இலக்கியச் சிந்தனை பரிசைப் பெற்றுள்ளது. இவற்றுடன் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சிறந்த இளம் எழுத்தாளர் விருது, கம்பம் பாரதி இலக்கியப் பேரவை விருது உட்படப் பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறார் ராகவன்.

திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களுக்கும் தற்போது வசனம் எழுதி வரும் ராகவன், ஆய்வுகள் பல செய்து அரசியல் கட்டுரைகள் படைத்திருந்தாலும் தமிழ் இலக்கிய உலகில் அதிக கவனம் பெறுவது அவரது சிறுகதை மற்றும் நாவல்களுக்காகவே! அசோகமித்திரன், ஆதவன் என்று நடுத்தர மக்களின் இயல்பான வாழ்வை படைப்புகளாக்கி அளித்த எழுத்தாளர்கள் வரிசையில் பா. ராகவனும் ஒரு முக்கியமான இடத்தைப் பெறுகிறார்.

(இவரது நூல்கள், வசனம் எழுதும் படங்கள்/சின்னத்திரைத் தொடர்கள் இன்ன பிறவற்றை அறியப் பார்க்க வேண்டிய தளம்: http://www.writerpara.com)

அரவிந்த்

© TamilOnline.com