மார்ச் 15, 2009 அன்று வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கம், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை மற்றும் தமிழ் இலக்கிய ஆய்வுக் கூட்டம் இவை மூன்றும் இணைந்து புறநானூறு சிறப்பு இலக்கியக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.
பல்வேறு புலவர்களால் எழுதப்பட்ட நானூறு சங்ககாலத் தமிழ்ப் பாடல்களைக் கொண்ட தொகுப்பே புறநானூறு. எட்டுத் தொகையில் ஒன்று.
வாசு ரெங்கநாதன் என்னும் பென்சில்வேனியா பல்கலைக்கழகப் பேராசிரியர் முதலில் பேசினார். அவர் புறநானூற்றிலும் பக்தி இலக்கியத்திலும் ஆய்வுகள் செய்து வருகிறார். அவர் புறநானூற்றுக் காலத்தில் இருந்த தமிழ்ச் சொற்களையும் பின்னால் பக்தி இலக்கியத்தில் காணப்படும் சொற்களையும் ஒப்பிட்டுப் பேசினார். நவீனகாலத் தமிழின் ஆரம்பம் பக்தி இலக்கியங்களிலிருந்து தொடங்கியவை என்றார். எடுத்துக் காட்டாக, புறநானூற்றில் ‘கொள்', ‘விடு' போன்ற சொற்கள் தனியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் பக்தி இலக்கியக் காலத்தில் அவை ஆட்கொள், விட்டுவிடு என்று கூட்டுச் சொற்களாக மாறியிருக்கின்றன என்பது போன்ற சுவையான செய்திகளைக் கூறினார். பின்னர் பேராசிரியர் வாசு புறநானூற்றில் உள்ள உருவகங்களையும், உவமைகளையும் பற்றிப் பேசினார். குறிப்பாக யானையும், பரியும் அதிகப் பாடல்களில் பயன்படுத்தப் பட்டிருப்பதாகக் கூறினார்.
அடுத்து முனைவர் பிரபாகரன் 'புறநானூறு காட்டும் தமிழ்ச் சமுதாயம்' என்ற தலைப்பில் பேசினார். புறநானூற்றில் இதுவரை கிடைத்தது 397 பாடல்கள், முதலில் அவற்றை வெளியிட்டது உ.வே. சாமிநாத ஐயர், பாடியவர்களின் எண்ணிக்கை 157, பாடப்பட்டவர்களின் எண்ணிக்கை 139 என்ற புள்ளி விவரங்களை அனாயாசமாக அள்ளித் தெளித்தார். சங்ககாலத்தில் தமிழ்ச் சமுதாயம் எப்படியெல்லாம் இருந்தது என்பதைப் பல புறநானூற்றுப் பாடல்களின் மூலம் சுட்டிக்காட்டினார். அன்றைய தமிழ்ச் சமுதாயம் கல்வி அறிவு மிகுந்ததாக இருந்தது என்பதற்குப் பெண்பாற் புலவர்களான ஒளவையார், பாரிமகளிர், காக்கைப்பாடினியார், மருத்துவரான உறையூர் மருத்துவன் தாமோதரனார், ஆசிரியரான மதுரை கணக்காயனார் போன்றவர்களை எடுத்துக்காட்டாகக் குறிப்பிட்டார். அரசர்கள் அறிவிலும் ஆற்றலிலும், வீரத்திலும் சிறந்து விளங்கினார்கள் என்று சொன்ன பிரபாகரன், போர் செய்யாத மன்னனே இருந்ததாகத் தெரியவில்லை என்றும், தமிழர்களிடையே ஒற்றுமை இருக்கவில்லை என்பதற்கான சான்றும் புறநானூற்றுப் பாடல்களில் இருப்பதாக ஒத்துக்கொள்கிறார்.
அடுத்து திரு. சங்கரபாண்டி 'புறநனூற்றுக் காலமும் தற்காலமும்' என்ற தலைப்பில் பேசினார். புறநானூறு தமிழ்நாட்டையும் தாண்டி சர்வதேசப் புகழ் அடைந்திருக்கிறது, பிற நாட்டறிஞர்கள் புறநானூறு பற்றி கருத்துக் கூறியிருக்கின்றனர் என்பதைச் சுட்டிக்காட்டினார். அண்மையில் மறைந்த செக் குடியரசைச் (Czech Republic) சேர்ந்த பேராசிரியர் முனைவர் கமில் ஸ்வலபில், "சங்ககாலத் தமிழ் இலக்கியம் ஒப்பற்றது. இதனைப் பழஞ்சிறப்பு வாய்ந்த கிரேக்க இலக்கியங்களுக்கு இணையாகப் குறிப்பிடலாம்" என்று சொல்லியிருக்கிறார். பின், புறநானூறு காலப் போர் முறைகள் பற்றிய பல செய்திகளைக் கூறினார். கபிலர் ஒரு பாடலில், பகைவன் நாட்டு வீதிகளை கழுதை பூட்டிய ஏரில் உழுது நாசம் செய்தார்கள். விளைந்த பயிர் வயலை குதிரைகள் பூட்டிய தேரை ஓட்டிப் பாழாக்கினார்கள். குளங்களில் யானைகளை விட்டு நாசம் செய்தார்கள் என்றெல்லாம் பாடி வைத்திருப்பதைச் சுட்டிக் காட்டினார்.
சங்கரபாண்டி, எப்படி இதனை தற்காலத்துடன் இணைக்கிறார்? தற்காலப் போரில் நாடுகளுக்கிடையே எந்த வரைமுறைகளும் இல்லை. அதனால்தான் ஜெனீவா மற்றும் திஹேக் வரமுறைகள் வரையறுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அமெரிக்கா உட்படப் பல நாடுகள் இந்த விதிமுறைகளை மீறியிருக்கின்றன. ஸ்ரீலங்கா போன்ற நாடுகள் தன் நாட்டு மக்களின் மீதே எந்த வரைமுறையின்றி இன அழிப்பைச் செய்துகொண்டிருக்கிறது, மருத்துவமனையின் மேலேயே சமீபத்தில் கொத்துக் குண்டுகளை (cluster bombs) வீசியுள்ளது என்கிற மிக முக்கியமான செய்தியைக் கோடிட்டுக் காட்டினார்.
போர், வீரம் என்றெல்லாம் கேட்டபின், நகைச்சுவை இடைச்செருகலாக இருந்தது திரு சுவாமி கண்ணனின் 'புறநானூற்று முத்துக்கள்' உரை. இலக்கிய வட்டத்தில் மற்றுமொரு இளைஞர். வரவேற்க வேண்டிய விசயம். புறநானூற்றில் தனக்குப் பிடித்த சில அரிய வார்த்தைகளை நம்முடன் பகிர்ந்துகொண்டார். சில உதாரணங்கள்: 'ஞெள்ளல்' என்றால் 'தெரு' அல்லது 'வீதி' என்று பொருளாம்! யாராவது ரெங்கநாதன் தெரு எங்கே இருக்கிறது என்று கேட்டால் "பக்கத்தில் உள்ள ஞெள்ளல் தான்' என்று சொல்லிப்பாருங்கள் என்று சுவாமி சொல்ல, அங்கே சிரிப்பு அலை அடித்தது. 'கிழித்தல்' என்றால் தின்னுதல், 'மடுப்புதல்' - ஊட்டுதல், 'மாந்தல்' - உண்ணுதல், 'முக்குதல்' - நிரம்ப உண்ணுதல், 'குழிசி' - பானை என்று பல அரிய, சுவையான சொற்களை எடுத்துக் காட்டினார்.
‘புறநானூற்றில் எனக்குப் பிடித்த பாடல்கள்' என்ற தலைப்பில் அடுத்து திரு. அரசு செல்லையா பேசினார். புறநானூற்றுப் புலவர்கள் மானம் மிகுந்தவர்களாகவும், பயமில்லாதவர்களாகவும், அறிவு நிரம்பியவர்களாகவும், ஒற்றுமையை நிலைநாட்டக் கூடியவர்களாகவும் இருந்தனர். உதாரணத்திற்கு ஒளவையார் அதியமானுக்காகத் சமாதானத் தூதுபோயிருக்கிறார். மன்னரைக் கடிந்திருக்கிறார். அரசர்களைப் பற்றி புகழ்பாடி பொருள் ஈட்ட நினைக்காமல், அரசர்கள், மற்றும் அவர்களின் நாட்டின் நலனுக்காக எப்படியெல்லாம் ஆலோசனை கூறியிருக்கிறார்கள் புலவர்கள் என்பதற்கு சில புறநானூற்றுப் பாடல்களை அரசு செல்லையா உதாரணமாக விளக்கினார்.
அடுத்து வந்தது திரு. பீட்டரின் பல்லூடக இலக்கியக் கலந்துரையாடல். இதில் 'தொல்காப்பியர்', 'அகத்தியர்' என்று இரு அணிகள். ஒவ்வொன்றிலும் ஐந்து பேர். பீட்டர் ஒரு பல்லூடக வினாடிவினா நிபுணர். புறநானூற்றுப் பாடல்களைத் திரையில் படிக்கும் போதே பின்னணியில் அது ஒலிக்கும். அதற்கான படங்களையும் திரையில் பார்க்கலாம். பின்னர் அந்தப் பாடலின் அடிப்படையில் ஒரு கேள்வி கேட்கப்படும். இந்த நிகழ்ச்சியில் ஒலித்த சில பாடல்களைப் பாடியவர்கள் லதா கண்ணன், பாலாஜி போன்ற சக தமிழ் அன்பர்களே! சற்றுக் கடினமான தமிழ் இலக்கியத்தை நமக்கு எளிய முறையில் புகட்டி வரும் பீட்டரின் முயற்சிகளுக்கு பாராட்டுகள் பல.
இக்கூட்டத்திற்கு வந்த பலருக்கும் புறநானூறைப் படிக்கும் ஆர்வம் எழுந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதுவே தமிழ் இலக்கிய ஆய்வுக் கூட்டத்தின் வெற்றி.
தாரா சிவா, வர்ஜீனியா |