மார்ச் 21, 2009 அன்று மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக பொம்மலாட்டம் திரைப்படத்தின் 100-வது நாள் விழா ஹாலிவுட் திரையரங்கில் கொண்டாடப்பட்டது. படத்தின் இயக்குநர் பாராதிராஜா விழாவில் கலந்து கொண்டார்.
படத் தயாரிப்பாளர் பால்பாண்டியனுடன் வந்திருந்த பாராதிராஜாவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் ராம்கி. இராமகிருஷ்ணன் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் மலர்க்கொத்து அளித்து வரவேற்றனர். படத்தின் நூறாவது நாளை பாரதிராஜா கேக் வெட்டிக் கொண்டாடியதுடன், அங்கு கூடியிருந்த குழந்தைகளுக்கும் கேக் ஊட்டி மகிழ்வித்தார். பின் தனது ஏற்புரையில் இப்படம் தனது வழக்கமான கிராமியப் பாணி படம் இல்லை எனவும், மிக வித்தியாசமாக இருக்கும் என்றும் கூறி, அனைவரையும் திரைப்படம் பார்க்க அழைத்தார். மக்களுடன் அமர்ந்து அவரும் அப்படத்தைக் கண்டு களித்தார்.
பொதுவாக அமெரிக்காவில் திரையிடப்படும் தமிழ்ப் படங்களுக்கு முதல் சில வாரங்களுக்கு மட்டுமே கூட்டம் இருக்கும். ஆனால் 100-ம் நாள் அன்றும் திரையரங்கம் நிரம்பி வழிந்தது இந்தப் படத்திற்குத் தான் என்றால் அது மிகையாகாது.
படத்தின் முடிவில் பாரதிராஜா தன் ரசிகர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும், தமிழ்ச் சங்கத்திற்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
பரணீதரன் ராதாகிருஷ்ணன், டல்லாஸ் (டெக்ஸாஸ்) |