மிச்சிகன் தமிழ்ச் சங்கம் குழந்தைகளுக்கான போட்டிகள்
மார்ச் 28, 2009 அன்று திருக்குறள், தமிழ்ப் பேச்சு, எழுத்து போட்டிகளை மிச்சிகன் தமிழ்ச் சங்கம் நடத்தியது. இதில் 60 குழந்தைகள் கலந்து கொண்டனர். பெற்றோர் மிகவும் ஆர்வத்துடன் குழந்தைகளைத் தயார் செய்திருந்தனர். அரங்கில் மூலைக்கு மூலை கடைசி நிமிட கோச்சிங் வேறு!

முதலில் ஐந்து வயதுக்கும் குறைவான குழந்தைகள் ஒரு குறள் சொன்னார்கள். கணீரென்ற குரலில் நல்ல உச்சரிப்புடன் கூறினர். வந்திருந்தோ மகிழ்ச்சியுடன் கைதட்டி ரசித்தனர். நடுவர்களுக்குத்தான் திண்டாட்டம் - யாருக்குப் பரிசு கொடுப்பது என்று!

அடுத்து, 5-8 வயது குழந்தைகள். இவர்கள் இரண்டு குறள்கள் சொல்லி, அர்த்தமும் கூறினர். இவர்கள் எழுத்து போட்டியிலும்,பேச்சு போட்டியிலும் பங்கு கொண்டனர். இந்தியா, தமிழ் மொழி, எங்கள் குடும்பம், அன்னையர் தினம் போன்ற தலைப்புகளில் பேசினர்.

கடைசியாக ஒன்பது வயதுக்கு மேற்பட்ட சிறுவர், சிறுமியர். இவர்கள் பல குறள்களைச் சொல்லி, பொருளும் கூறி, அனைவரையும் பிரமிக்க வைத்தனர். இவர்களும் மேலே காணப்படும் தலைப்புகளில் தயக்கமின்றிப் பேசியது ஊக்கத்தையும் மன உறுதியையும் காண்பித்தது. நடுவர்களால் ஒருவரைத் தேர்ந்தெடுக்க முடியாத பொழுது, மேலும் கேள்விகள் கேட்டு அல்லது வார்த்தைகள் கொடுத்துத் தீர்மானிக்க வேண்டியதாயிற்று. இந்த நிகழ்ச்சியின் புரவலர்களான ‘தென்றல்' மாத இதழ், ரேணுகா சாலக்கோடு தம்பதியினர் பாராட்டுக்குரியவர்கள். நடுவர்களாகப் பொறுப்பேற்ற சேதுராமன், அம்புஜா வெங்கடேசன், தீபா இளங்கம்பன், மோஹம் சந்திரன், ஹரிஹரன் ஆகியோருக்கும் சங்கத்தின் நன்றி உரியது.

டாக்டர் மஹாதேவன்

© TamilOnline.com