வித்யா சுப்ரமணியம் கர்நாடக இசை செயல்முறை விளக்கம்
ஏப்ரல், 2009 அன்று க்ளிஃப்டன் பார்க்-ஹாஃப்மூன் நூலக அரங்கில் (NY) பாரம்பரிய இந்திய இசை பற்றிய சித்திரம் சார்ந்த வர்ணனையுடன் நிகழ்ச்சியைத் தொடங்கினார் திருமதி வித்யா சுப்ரமணியன். ஹிந்துஸ்தானி இசைக்கும், தென்னிந்தியாவின் சொத்தான கர்னாடக இசைக்கும் உள்ள அடிப்படை வேறுபாடுகளை விளக்கினார் வித்யா. இந்தியக் கலாசாரத்துக்கு வித்தான வேத நூல்களில் ஒன்றான சாம வேதத்தில் இசைபற்றிய குறிப்புகளைச் சுட்டிக்காட்டிய அவர், 15ம் நூற்றாண்டில் வாழ்ந்த சங்கீத பிதாமகர் புரந்தரதாஸர் பற்றியும், 18ம் நூற்றாண்டில் வாழ்ந்த சங்கீத மும்மூர்த்திகள் (ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமி, ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர், ஸ்ரீ ஸ்யாமா சாஸ்திரி) பற்றியும், அவர்களது இசைப்பணிகள் அனைத்தும் ஓர் அசைவிலா பக்தி மார்கம் என்பதைப் புரிந்துகொள்வது அவசியமானது என்றும் எடுத்துறைத்தார். இப்படிப்பட்ட இசை குரு-சிஷ்ய பரம்பரை அடிப்படையில் பல நூற்றாண்டுகளாகப் பாதுகாக்கப்பட்டு வந்திருக்கிறது என்பதையும் விளக்கினார்.

கர்னாடக இசைக்கு ராகம், தாளம் இரண்டு கண்கள் என்பதைத் தெளிவுபடுத்தினார். மேலும், சப்தஸ்வரங்களை மேற்கத்தியப் பாரம்பரிய இசையோடு ஒப்பிட்டது அங்கிருந்த அமெரிக்க இசை ரசிகர்களுக்கு வியப்பாக இருந்தது என்றே சொல்லலாம்.
அடுத்த கட்டமாக ‘கர்னாடக இசை மேடைக் கச்சேரி' பற்றி விவரிப்பதற்காக ஒரு சுருக்கமான கச்சேரி செய்து காண்பித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்திவிட்டார் வித்யா. பக்கவாத்தியத்தின் முக்கியத்துவம் பற்றித் துல்லியமாக விளக்கினார். பாரம்பரியக் கச்சேரி அம்சங்களான வர்ணம், ஆலாபனை, நிரவல், கல்பனாஸ்வரம், தனி ஆவர்த்தனம், தில்லானா, மங்களம் எல்லாம் நிறைந்த கச்சேரியாக அது அமைந்திருந்தது. வயலினில் உடன் வாசித்த ரவி ஸ்ரீனிவாசன் பல முக்கியமான தகவல்கள் கொடுத்தார். மேற்கத்திய இசைக் கருவியான வயலின் கர்னாடகக் கச்சேரியில் ஓர் இன்றியமையாத அங்கம் என்றும் அது எவ்விதப் பரிமாணத்தை அளித்திருக்கிறது என்றும் விவரித்தார்.

மிருதங்கத்தில் உடன் வாசித்த கணேஷ் சங்கரநாராயணன் அவர்கள், அதன் கட்டுமானம், அமைப்பு, ஒலி எழும் விதம், ஸ்ருதி மாற்றம், போன்ற நுணுக்கங்களை எளிதே புரியும்படி விளக்கினார். தஞ்சாவூர் மற்றும் பழனி பாணிகள் இடையே உள்ள வேறுபாட்டை எடுத்துக் காண்பித்தது மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.

இந்தியாவில் பிரபல வித்வான்களில் ஒருவரான பத்மவிபூஷண் லால்குடி ஜெயராமன் அவர்களிடம் முறைப்படி சங்கீதம் பயின்ற திருமதி வித்யா சுப்ரமணியன், தற்சமயம் அமெரிக்காவில் வசித்தபடி, தனது இசைப் பயணத்தை தொடர்ந்து மேற்கொண்டுள்ளார். இசை கற்றுக் கொடுப்பதோடு கச்சேரிகளும் செய்து வருகிறார்.

தியாகராஜன் எஸ், அல்பனி,
நியூ யார்க்.

© TamilOnline.com