இதயம் நனைத்த இறைவனின் திருமணம்.
பங்குனி உத்திர நன்னாளன்று கனடாவின் டொரொன்டொவிலிலுள்ள வரசித்தி வினாயகர் கோவிலில் கேதீஸ்வர நாதரின் திருக்கல்யாண உத்சவம் நடந்தேறியது. ஐயனுக்கும் அம்மைக்கும் முதலில் பலவித வாசனை திரவியங்களும், பாலும், சந்தணமும், பன்னீரும், தேனும் கொண்டு அபிஷேகங்கள் நடைபெற்றன.

மாலையில் வேதியர் ருத்திர ஜபம், சங்காபிஷேகம், கலசபூஜை ஆகியன செய்தனர். நாதசுரம் முன் செல்ல சீர் எடுத்து இறைவனை ஊர்வலமாக கோவிலைச் சுற்றி அழைத்து வந்தனர். மேடையில் சிவஸ்ரீ சோமேஸ்வர குருக்களுடன் சிவஸ்ரீ பஞ்சாட்சர குருக்கள் அமர்ந்து மந்திரங்கள் ஜபித்து கங்கணம் கட்டி, ஊஞ்சலாட்டினர். பெண்கள் பால் பழம் தந்து, பல்வகை நிற அன்னங்களால் திருட்டி சுத்தி திருமண நியமங்களைச் செய்தனர். நல்ல நேரத்தில் திருமாங்கல்ய தாரணம் நடந்தது.

அதன்பின் ஓர் உள்ளம் கவரும் நிகழ்ச்சி நடைபெற்றது. பிரதான குருக்களான திரு. பஞ்சாட்சரக் குருக்கள் உருக்கமாக ஒரு விஷயத்தை விவரித்தார். சமீபத்தில் இலங்கைத் தமிழ் மக்கள் வாழ்வில் வருத்தமும், சங்கடமுமே நிறைந்து, அவர்கள் தங்கள் வீடுகளில் எந்த விழாவும் செய்யாமல் இருக்கிறார்கள். அதில் திருமணநாள் கொண்டாட்டமும் ஒன்று. அவர்கள் வாழ்வில் சந்தோஷத்தையும் முகத்தில் ஒரு சிறு புன்னகையையும் சற்றாவது கொண்டுவரவேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் தோன்றிய ஏற்பாடுதான் இது.

அங்கே வந்திருந்த 200க்கும் மேலான தம்பதிகளுக்கு மற்ற குருக்கள்கள் பூவும் அட்சதையும் அளித்தனர். அவர்கள் அதை மந்திர ஒலியுடன் இறைவன் பாதத்தில் தம்பதியராகக் கொண்டு சமர்ப்பித்தனர். பின் அவர்களுக்குச் சந்தன மாலைகள் தரப்பட்டன. குருக்கள் மந்திரம் ஓத கணவன் மனைவியர் ஒருவருக்கொருவர் மாலை சூட்டிக் கொண்டனர். சேர்ந்தாற்போல் 200 தம்பதியர் மாலைமாற்றிக் கொண்டது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. பிறகு மனைவியருக்குத் திலகமிட்டு, கூந்தலில் மலர் சூட்டினர். சிலர் வெட்கத்துடனும், சிலர் முகம் கொள்ளாச் சிரிப்புடனும் கணவருக்கு நிலம் தொட்டு நமஸ்காரம் செய்தனர். கருமேகத்தின் நடுவில் மின்னல் ஒளி வந்தது போல அவர்கள் சோக முகத்தில் வந்த புன்னகை, குருக்கள் அவர்களின் முயற்சி எத்தனை உணர்வுபூர்வமானது என்பதை நிரூபித்தது. திருமண விருந்துடன் இனிதே முடிந்தது திருக்கல்யாண உத்சவம்.

அலமேலுமணி

© TamilOnline.com