2009 ஏப்ரல் 3-5 நாட்களில் சான் டியேகோ இந்திய நுண்கலைக் கழகம் (Indian Fine Arts Academy of San Diego) ஓர் இந்திய இசை நடன விழாவை லா ஹோயா உயர்நிலைப்பள்ளி அரங்கத்தில் நடத்தியது. இந்தியச் செவ்விசை மற்றும் நடனத்தைக் கற்கவும், அனுபவிக்கவும் உரியதோர் சூழலை உண்டாக்கும் நோக்கத்தோடு, ஆறு மாதங்களுக்கும் மேலாக உழைப்பில் இந்த விழா உருவாக்கப்பட்டது.
சி.எம். வெங்கடாசலம், ரேவதி சுப்ரமணியன் ஆகியோரின் மாணவர்கள் வழங்கிய அருமையான நிகழ்ச்சிகளோடு விழா தொடங்கியது.
சுதா ரகுநாதன், சௌம்யா, எம்.எஸ். கோபாலகிருஷ்ணன், குன்னக்குடி பாலமுரளிகிருஷ்ணா போன்ற பிரபலங்கள் விழாவில் பங்கேற்றனர். சித்திரவீணை ரவிகிரண், உஸ்தாத் இர்ஷாத் கான் அவர்களோடு இணைந்து சிறப்பான ஜுகல்பந்தி ஒன்றை வழங்கினார். திருமதி பாரசாலா பொன்னம்மாள் மற்றோர் சிறப்பான கர்நாடக இசைக் கச்சேரியோடு அமெரிக்க மண்ணில் அரங்கேறினார். கேரள கலாசாரத்தின் எழிலார்ந்த நடனமான மோகினியாட்டத்தை அதன் விற்பன்னர்களான பாரதி சிவாஜி மற்றும் விஜயலக்ஷ்மி ஆகியோர் வழங்கினர். திருமதி ஷோபா ஷர்மாவின் பரத நாட்டியம், அதற்கு ரேவதி சுப்ரமணியன் குழுவினர் வழங்கிய இசை ஆகிய இரண்டுமே பெருத்த பாராட்டைப் பெற்றன. ஷோபாவின் அபிநயத்தை அந்த விழாவில் விருது பெற்ற நால்வரில் ஒருவரான டாக்டர் வி.எஸ். ராமச்சந்திரன் மிக உயர்வாகப் பேசினார்.
‘சங்கீத கலாமணி' விருது பெற்ற கீதா பென்னட் 3 நாள் நிகழ்ச்சிகளையும் ரசித்ததோடு, “அடுத்த ஆண்டு விழா எப்போது வரும் என்று ஆவலோடு காத்திருப்பேன்” என்று தனது ஏற்புரையில் குறிப்பிட்டார்.
இசையும் நடனமும் மட்டுமின்றி, இந்தியாவின் பல பகுதிகளின் சிறப்பு உணவு வகைகளையும் வந்திருந்த 4000 பார்வையாளர்கள் சுவைத்து மகிழ்ந்தனர். விழாக் குழுவினரில் ஒருவரான சேகர் விஸ்வநாதன் “சான் டியேகோவில் இந்தியப் பாரம்பரியக் கலைகளுக்கு இத்தனை ரசிகர்கள் இருப்பது இதுவரை வெளியே தெரிந்ததில்லை. அந்த ரகசியமும் இப்போது அம்பலமாகிவிட்டது” என்று வேடிக்கையாகக் கூறியதில் ஒரு பெரிய உண்மை இருக்கத்தான் செய்கிறது.
பவித்ரா, ஹர்ஷா விஸ்வநாதன், சான் டியேகோ |