வசந்தகால ஒவ்வாமை
வசந்தகாலம் வந்தாலே ஒவ்வாமையில் (allergy) தவிக்கும் மக்கள் பலர் உண்டு. சமீபத்தில் எடுத்த கணக்கெடுப்பின்படி அமெரிக்காவில் 36.5 மில்லியன் மக்கள் வசந்த காலத்தில் ஒவ்வாமையில் தவிப்பதாக தெரிகிறது. அமெரிக்காவின் ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு மாதங்களில் இந்த ஒவ்வாமை ஏற்படலாம்.

ஒவ்வாமையின் அறிகுறிகள்:

1. தும்மல்
2. மூக்கில் இருந்து நீர் கொட்டுதல்
3. கண்களில் இருந்து நீர் கொட்டுதல்
4. அரிப்பு, நமைச்சல்
5. மூக்கு அடைப்பு

இவை பெரும்பாலும் வெளியே சென்றவுடன் ஏற்படலாம். இந்த ஒவ்வாமை மரம் மற்றும் புல் வெளியில் பரவலாக காணப்படும் மகரந்தப் பொடியால் (Pollen) உண்டாகிறது. நம்மைச் சூழ்ந்த காற்றில் இருக்கும் மகரந்தத்தின் எண்ணிக்கையை அவ்வப்போது பல்வேறு அமைப்புகள் கணக்கெடுக்கின்றன.

ஒவ்வாமை எப்போது வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம். சிறுவர் முதல் பெரியவர் வரை யாவரையும் தாக்கலாம். அதே ஊரில் பல வருடங்கள் தங்கி இருப்பவரையும் திடீரென்று ஒரு வசந்த காலத்தில் தாக்கலாம். அல்லது, ஓர் ஊரில் இருந்து வேறோர் ஊருக்குப் பயணிப்பவரை அல்லது மாற்றலில் வந்தவரைத் தாக்கலாம்.

அமெரிக்காவில் மார்ச் முதல் அக்டோபர் வரை இந்த நோய் பரவலாகக் காணப் படுகிறது. வசந்த கால இனிமையில் இது ஒரு கசப்பான அனுபவம். வருடா வருடம் அதே மாதங்களில் வேதனைப்பட வைக்கும் அனுபவம். அமெரிக்க ஒவ்வாமைக் கழகம் இந்த நோய் நாட்டில் பரவியிருப்பதைத் தமது வலைதளத்தில் விளக்கியுள்ளனர். தெற்குப் பகுதிகளில் ஜனவரி மாதம் முதலாகவும், வடக்குப் பகுதிகளில் மார்ச், ஏப்ரல் மாதங்களிலும் மரங்களின் மகரந்தம் தாக்கலாம். இதையடுத்துப் புற்களின் மகரந்தம் மே மாதம் முதல் பரவும். அதைத் தொடர்ந்து களை மகரந்தம் (weed pollen) பரவும்.

எந்த மாதங்களில் இந்த நோய் தாக்கலாம் என்பதை வெவ்வேறு நிறங்களில் விளக்கி யுள்ளனர். மேலும் விவரங்களுக்குப் பார்க்க வேண்டிய வலைதளம்: http://www.aaaai.org/patients/topicofthemonth/0305

தடுக்கும் முறைகளைப் பார்க்கலாம்:

1. வசந்த காலத் துப்புரவு செய்தல் எனப்படும் விவரமான சுத்த முறையைக் கையாள வேண்டும். குளிர் காலம் முடிந்ததும் வீட்டின் பல்வேறு இடங் களைச் சுத்திகரிக்க வேண்டும். ஜன்னல், கதவு, புத்தக அறை, இடுக்குகள், புகைபோக்கி ஆகியவற்றைத் தூசுதட்டித் தூய்மைப்படுத்த வேண்டும்.
2. வெளி வேலைகளைக் காலை 10 மணிக்குப் பிறகு செய்யமுடிந்தால் நல்லது. காலை 5 மணி முதல் 10 மணி வரை மகரந்தத் துகளின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படுகிறது.
3. உங்கள் சுற்று வட்டாரத்தின் மகரந்த எண்ணிக்கையை அறிந்து கொள்ளுங்கள்.
4. கூடுமானவரை சாளரங்களைத் (windows) திறக்காமல் இருப்பது நல்லது.
5. வாகனத்தில் பயணிக்கும்போதும், குளிர் சாதனத்தைப் பயன்படுத்துங்கள்.
6. மிகவும் வெம்மையான வறண்ட நாட்களில் வீட்டிலேயே இருப்பது உசிதம்.
7. புல்வெளியைச் சுத்தப்படுத்தும் போது முகமூடி (mask) அணிந்து கொள்ள வேண்டும்.
8. துணிகளை வெளியில் உணர்த்தாமல் இருப்பது உசிதம். துணிகளில் மகரந்தம் ஒட்டிக்கொள்ளும் அபாயம் உள்ளது.
9. படுக்கை உறைகளை வாரம் தோறும் துவைப்பது நல்லது.
10. தினமும் இரவில் தலைக்குக் குளிப்பதின் மூலம் உடலிலும், தலையிலும் ஒட்டியுள்ள மகரந்தத்தை அகற்றுங்கள்.
11. மழை நாட்களைத் தொடர்ந்து பூசணம் (mold) பிடிக்கும் அபாயத்தை அறிந்து கொள்ள வேண்டும்.

இந்தத் தவிர்ப்பு முறை களைக் கையாண்ட பின்ன ரும் ஒவ்வாமை ஏற்பட்டால், antihistamine என்று சொல்லப் படும் ஒவ்வாமை எதிர்ப்பு மருந்துகளை உட்கொள்வது தகுந்தது. முதன்மை மருத்து வரையோ அல்லது ஒவ்வாமை நிபுணரையோ கலந்து ஆலோசித்தே இதைச் செய்ய வேண்டும். மகரந்தத் துகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் நாட்களில் முன் னெச்சரிக்கையாக இந்த மருந்தை உட்கொள்வதன் மூலம் சிலருக்கு ஒவ்வாமை வருவதைத் தவிர்க்கலாம். பலருக்கு வசந்த காலம் முழுவதுமே இந்த மருந்துகளைத் தினமும் உட்கொள்ள வேண்டி வரலாம். காசநோய் (ஆஸ்த்துமா) உள்ளவர்கள் இந்தக் காலகட்டத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

இதையும் மீறி ஒவ்வாமையால் அவதிப்படுவோர், ஒவ்வாமை நிபுணரை நாடவேண்டும். எந்தவகைப் புரதத்துக்கு ஒவ்வாமை இருக்கிறது என்பதைத் தோல் பரிசோதனையில் கண்டுபிடித்து, அதற்கான மருத்துவ முறைகளைக் கையாளலாம். குறைவாகவே ஒவ்வாமை உள்ளோருக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படவும் இந்தச் சிகிச்சை முறையில் வாய்ப்பு உள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். வசந்தகாலத்தில் மகிழ்ச்சியோடு இருங்கள்.

மரு.வரலட்சுமி நிரஞ்சன்

© TamilOnline.com