சான் பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம்
சித்திரைக் கொண்டாட்டம் 2009

ஏப்ரல் 4, 2009 அன்று சான் ரமோனில் வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் சித்திரைக் கொண்டாட்டம் 2009 நிகழ்ச்சியைவழங்கியது. உபதலைவர் சோலை அழகப்பன் அறிமுகம் செய்ய, கார்த்திக் செல்லதுரை தொகுத்து வழங்கினார்.

நிகழ்ச்சியின் முதற்பகுதியில் கர்நாடக இசை, கிடார் இசை, மெல்லிசை, பரத நாட்டியம், பொய்க்கால் குதிரை, புலி ஆட்டம், குறவன், குறத்தி ஆட்டம், மூன்று தலை முறையினர் இணைந்து கண்ணன் பாடலுக்கு ஆடிய நடனம், கருப்பு வெள்ளை திரைப் பாடலில் இருந்து வண்ணத் திரைப் பாடல் வரை இணைத்து வழங்கிய நடனம், மழலைத் தமிழில் குறுநாடகம், தேர்ந்த தமிழில் தெருக்கூத்து ஆகியவை இடம்பெற்றன.

இடைவேளைக்கு முன், மன்றத் தலைவர் லேனா கண்ணப்பன் அறிமுகம் செய்ய, முனைவர். அலர்மேல் ரிஷி அவர்கள் சொற்பொழிவாற்றினார். தமிழ் இலக்கியத்தில் நகைச்சுவை பற்றியும் சிலேடை மூலமாகச் சிந்திக்க வைக்கும் தமிழ் அறிஞர்களையும் பேசினார். தொடர்ந்து பெர்க்கலி பல்கலைக் கழகம், தமிழ் இருக்கையின் பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் அவர்கள், பல்கலைக் கழகத்தில் ஏப்ரல் 25, 26 தேதிகளில் நடக்க இருக்கும் தமிழ் மாநாடு பற்றி அறிமுகம் செய்தார்.

பெர்க்கலி பல்கலைக் கழகத்தில் பல ஆண்டுகளாகத் தமிழ் கற்பித்து வரும் முனைவர். கௌசல்யா ஹார்ட், தென்றல் மாத இதழில் தொடர்ந்து தமிழ் படைப்புகளை அளித்தும், வெற்றிகரமான தொழில் அதிபராகவும் திகழும் பிரபாகர் சுந்தர்ராஜன், சின்மயா மிஷன் பள்ளியின் மூலம் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இளம் தலைமுறையினருக்குத் தமிழ் கற்பித்து வரும் V.J. மோகன், சங்கரா கண் அறக் கட்டளை மூலம் இந்தியாவில் வாழும் ஏழைகளுக்கு கண் பார்வை அளிக்க அயராது உழைத்து வரும் K. முரளிதரன், இருபது மாணவர்களுடன் துவங்கி, பத்தாண்டுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்குத் தமிழ் கற்பித்து வரும் கலிபோர்னியா தமிழ்க் கழகம் - என இந்தத் தனியார் மற்றும் நிறுவனங்கள் தமிழ் மன்றத்தால் நினைவுப் பரிசுகளை அளித்து கௌரவிக்கப் பட்டன.

வளைகுடாப் பகுதியிலேயே முழுவதும் தயாரிக்கப் பட்ட முதல் தமிழ்ப் படமான ‘மெய்ப்பொருள்' படத்தில் இருந்து சில காட்சிகள் அதன் இணைத் தயாரிப்பாளரும், இயக்குநரும் ஆன திரு. நேட்டி குமார் அவரகளின் அறிமுகத்துடன் அரங்கில் திரையிடப் பட்டன.

ஒரு சிறிய இடைவேளக்குப் பிறகு “ராகலயா” குழுவினரின் மெல்லிசை நிகழ்ச்சி நடை பெற்றது.

இந்த நிகழ்ச்சியின் புகைப் படங்கள், You Tube ஒளி வடிவத் தொகுப்பு, மேலும் வரவிருக்கும் நிகழ்ச்சிகள் பற்றிய விவரங்கள் அனைத்தும் காண: www.bayareatamilmanram.org



© TamilOnline.com