ஸ்ரீ லலித கான வித்யாலயா மும்மூர்த்திகள் விழா
ஏப்ரல் 5, 2009 அன்று ஸ்ரீ லலித கான வித்யாலயாவின் மும்மூர்த்திகள் தின விழா கபர்லி திரையரங்கில் நடைபெற்றது. ஆசிரியர் லதா ஸ்ரீராம் தொகுத்து வழங்கினார். விழாவிற்கு சங்கீத ரத்னாகரா கலைமாமணி துரை, டாக்டர் வி.வி. சுந்தரம், கோமதி சுந்தரம் மற்றும் பத்ரிகாஷ்ரம் சுவாமிஜி ஆகியோர் தலைமை தாங்கினர். நிகழ்ச்சி, ஸ்ரீ குருவாயூர் துரையின் பிரதான சிஷ்யரான உமவூர் ஸ்ரீ பாபு, ரவீந்திர பாரதி ஸ்ரீதரன், பாலாஜி மகாதேவன் ஆகியோரின் மிருதங்கத்துடனும், நாகராஜ் மாண்டியா, லக்ஷ்மி பாலசுப்ரமண்யா, ஆனந்த் கல்யாணி ஆகியோரின் வயலினுடனும் துவங்கியது. தொடர்ந்து பஞ்சரத்ன கீர்த்தனை இடம் பெற்றது. சிறுவர் முதல் பெரியோர் வரை தியாகராஜ கீர்த்தனைகளை உச்சரிப்புச் சுத்தத்துடன் அர்ப்பணிப்பு உணர்வுடன் பாடினர்.

தொடர்ந்து ஸ்ரீமதி லதா ஸ்ரீராமின் மாணவிகள் தனியாக மும்மூர்த்திகளின் க்ருதிகளை அற்புதமாகப் பாடினர். தியாகராஜரின் ‘கிரிராஜ சுதா'வில் ஆரம்பித்து மத்யமாவதி ‘ராமநாமம் பஜரே'யில் பாடல் முடிந்தது. இடையில் மோகனத்தில் ராமர் பாட்டு, வசந்தா ராகத்தில் ‘சீதம்மா மாயம்மா' அருமையிலும் அருமை. சிறுகுழந்தைகள் பாடிய ‘நாராயண ஹரி' க்ருதி, பகவானையே கண்முன் நிறுத்தியது.

லதா ஸ்ரீராம் தனது மகன், மகளுடன் ஸ்யாமா சாஸ்திரிகளின் ‘ஓ ஜகதம்பா' மற்றும் முத்துசாமி தீக்ஷிதரின் க்ருதிகளைப் பாடினார். தொடர்ந்து லதா தமது மாணவர்களுடன் பாடிய நவக்ரஹ க்ருதி அற்புதம். தனி ஆவர்த்தனமும் நேர்த்தியாக இருந்தது.

கலைமாமணி துரை, சுந்தரம் ஆகியோர் குழந்தைகளை வாழ்த்தியதுடன், குரு லதா ஸ்ரீராமைப் பாராட்டி தங்களது கலையுலக அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர். பத்ரிகாஷ்ரம் சுவாமிஜியும் வாழ்த்துரை வழங்கினார்.

சுஜாதா ஐயர்,
ஃப்ரீமாண்ட்

© TamilOnline.com