வாஷிங்டன் சிவாஜி கணேசன் கலைமன்ற 15ம் ஆண்டு விழா
ஏப்ரல் 11, 2009 அன்று சிவாஜிகணேசன் கலை மன்றம் தனது 15ம் ஆண்டு நிறைவு விழாவை வாஷிங்டன் முருகன் ஆலய வளாகத்தில் கொண்டாடியது. விழாவில் தனது புதிய தயாரிப்பான ‘சங்கல்பம்' என்ற நாடகத்தையும் அரங்கேற்றியது.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் ‘தீம்தனனா' இசைக் குழுவினரின் திரையிசை நிகழ்ச்சி நடைபெற்றது. ‘நாளாம் நாளாம் திருநாளாம்' என்ற பாடலை விழாவிற்கேற்றவாறு வரிகளை மாற்றிப்பாடி லதாவும், பாலாஜியும் கைதட்டலைப் பெற்றனர். பழைய மற்றும் புதிய பாடல்களை ஐயப்பன், திருச்செல்வன், லதா மற்றும் பாலாஜி பாடி மகிழ்வித்தனர்.

அதன் பிறகு ‘சங்கல்பம்' நாடகம் அரங்கேறியது. ஸ்ரீதர் ஐயங்கார் இயக்கி நடித்த இந்நாடகத்தில் லதா, நளினி, ரமா, அனுமந்தா, பத்மநாபன், சுந்தர் ஆகியோர் பங்கேற்றனர். சகோதரிகளாக நடித்த லதா, நளினியின் நடிப்பு வெகு சிறப்பு. நிகழ்ச்சியின் இறுதியில் நாடகக் கலைஞர்கள் பேசினர். இயக்குநர் ஸ்ரீதர் ஐயங்கார், இந்நாடகக் குழு சிவாஜி கணேசனின் ஆசியுடன் தொடங்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

இடைவேளைக்குப் பிறகு திருமதி ராணி டேவிட் இயக்கி அமைத்த மூன்று நடனங்கள் அரங்கேறின. தமிழின் பல்வேறு கலாசாரங்களைச் சித்திருக்கும் வகையில் அந்நடனங்கள் அமைந்திருந்தன. அதில் ஆடிய சிறுவர், சிறுமியரின் நடனங்கள், பாடல்கள் சிறப்பாக இருந்தன.

இதுபோன்ற தரமான நிகழ்ச்சிகள், நம் பாரம்பரியக் கலைகள் நசிந்துவிடாது என்ற தெம்பினை அளிக்கின்றன

ஆவன்னா,
மேரிலேண்ட்

© TamilOnline.com