ஏப்ரல் 11, 2009 அன்று லாஸ் ஏஞ்சலஸ் அருகில் உள்ள ரோசெமூர் நகரில் உள்ள ஓர் அரங்கில் தமிழ் புத்தாண்டான விரோதி ஆண்டின் வரவைத் தமிழர்கள் கொண்டாடினர்.
தலைவர் ஹரி அவர்களின் தொடக்க உரையோடு விழா துவங்கியது. சிறுவர் சிறுமியர் பல்வேறு திரைப்படப் பாடல்களுக்கு நடனம் ஆடினார்கள். ‘கண்ணன்' பாடலுக்கு நடனமும் பாரதியார் பாடலுக்கு பரத நாட்டியமும் வெகு சிறப்பாக ஆடினார்கள். ‘நகைச்சுவை நேரம்' என்ற தலைப்பில் சிறுவர் சிறுமியர்களின் நிகழ்ச்சி ஒன்று மிகச் சுவையாக இருந்தது. இளநங்கையர் கும்மியாட்டம் ஆடினார்கள். ‘வெள்ளைப் புறா ஒன்று' என்ற பாடலை ஒரு ஜோடி இனிமையாகப் பாடியது.
இந்த விழா நடைபெறுவதற்கு முக்கிய காரணமான ஸ்ரீராம்- அனு தம்பதியினர் என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் அனு அவர்கள் ‘யார் அடுத்த வைரமுத்து' என்ற போட்டியை அறிவித்தார்கள். இதில் வைரமுத்து எழுதிய ‘சின்ன சின்ன ஆசை' என்ற திரைப்பாடலுக்கு எட்டு வரிகளைச் சொந்தமாக எழுத வேண்டும். சுமார் இருபது பேர்கள் கலந்து கொண்டதில், மிக அழகாக எழுதிய நால்வருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் ‘சின்ன சின்ன ஆசை' பாடலை இரு சிறுவர்கள் கீபோர்டில் வாசித்து பலத்த கைதட்டல் பெற்றனர். கடைசியாக ஆஸ்கார் வென்ற "ஜெய் ஹோ" பாடலுக்கு மூன்று சிறுவர்கள் நடனம் ஆடியது மனதைக் கவர்ந்தது. நிகழ்ச்சியை அருள்குமரன், இந்துமதி ஆகியோர் தொகுத்து வழங்கினர். நாராயணன் நன்றியுரை வழங்கினார்.
அகி |