ஏப்ரல் 11, 2009 அன்று உதவும் கரங்கள் இயக்கத்தின் சான் ப்ரான்ஸிஸ்கோ விரிகுடாப் பகுதி வட்டம் கலாட்டா-2009 பல்சுவை நிகழ்ச்சியை லாஸ் ஆல்டோஸ் ஹில்ஸ் நகரிலுள்ள புட்ஹில்ஸ் கல்லூரியின் ஸ்மித்விக் அரங்கத்தில் நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் 900-க்கும் மேலானோர் கலந்து கொண்டனர்.
இதில் திரட்டப்பட்ட நிதி, உதவும் கரங்களின் தொடரும் ‘ஜீவன் திட்டம்' போன்ற சமூகநலப் பணிகளுக்கு அளிக்கப்படும். பொருளாதார நிலை சரியில்லாத தருணத்திலும் கூட, 65-குழந்தைகளை வருடம் முழுவதும் பராமரிக்கத் தேவையான நன்கொடையை அளித்தனர்.
நாள் முழுவதும் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளுக்கும் போட்டிகளுக்கும் உச்சமாக மாலையில் விரிகுடாப் புகுதியிலன் பிரபல பல்லவி குழுவினரின் மெல்லிசை நிகழ்ச்சி அமைந்தது. நிகழ்ச்சியில் பல சமீபத்திய பாடல்கள் இடம் பெற்றன. ஆஸ்கார் விருது பெற்ற ஏ.ஆர். ரஹ்மானின் ஸ்லம் டாக் மில்லியனேர் பாடல்களும் கூடத்தான். பல நாட்டியங்களும் நிகழ்ச்சியை அலங்கரித்தன. ஒரு மெக்ஸிகன் மாரியாச்சிக் குழுவும் பங்கேற்றது விசேஷமானது. இன்னும் சிறப்பளித்தது, புதிய ‘பாலக்காட்டுப் பக்கத்திலே' ரீமிக்ஸ் பாடலுக்கு விரிகுடாப் பகுதியிலுள்ள ஒரு பொம்மலாட்டக் குழு பொருத்தமாக பொம்மைகளை ஆட வைத்ததுதான்.
இடைவேளைக்கு முன்பு 16 சிறுவர் சிறுமியர்களை இந்திய தேசியக் கொடி வண்ண ஆடைகளில் பாடிய ரஹ்மானின் ‘தாய் மண்ணே வணக்கம் - வந்தே மாதரம்' பாடல் வெகு அழகு. இப்பாடலை மிக அருமையாகப் பாடிய குழந்தைகளும் அவர்களுக்குப் பயிற்சியளித்தவர்களும் பாராட்டுக்குரியவர்கள்.
இன்னோரு முக்கிய நிகழ்ச்சி கலாட்டா ஐடல். நூற்றுக்கும் மேலானவர்கள் தமது பாட்டுத் திறமையை இதில் காட்டினர். முதல் இரண்டு இடங்களைப் பிடித்து ஸ்மிருதி ஜெயராமன், வெங்கடேஷ் விஸ்வநாதன் இருவரும், பல்லவி குழுவினருடன் சேர்ந்து பாடினர். அரை இறுதிப் போட்டியில் இருவரும் ஒரே எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்றது ஒரு தனி விசேஷம். பார்வையாளர் அளித்த வாக்குக்களால் வெங்கடேஷ் 2009-ன் கலாட்டா ஐடலாகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். முதல்முறையாக நடத்தப்பட்ட டூயட் பாடல் போட்டியில் ஷ்ருதி-ப்ரஹ்லாத் ஜோடி வெற்றி பெற்றது. ‘என்ன பொருத்தம்' என்னும் கணவன்-மனைவி போட்டியில் ஜெயஸ்ரீ-குமார் தம்பதி வெற்றி பெற்றது. கலாட்டா கேரம் போட்டியில் விவேக் கேரம் ராஜாவாகவும், அருணா கேரம் ராணியாகவும் திகழ்ந்தனர். இவையும் முதல்முறைப் போட்டிகளே.
உதவும் கரங்கள், தன் நற்பணிக்காக நன்கொடை தரவும் தொண்டராகப் பணியாற்றவும் தொடர்பு கொள்ள: www.ukdavumkarangal-sfba.org, www.galaata.org
கதிரவன் எழில்மன்னன் |