லேக் கவுன்டித் தமிழர்கள் தமிழ்ப் புத்தாண்டு விழா
ஏப்ரல் 18, 2009 அன்று கிரேஸ்லேக்கில் உள்ள ஹிந்துக் கோவிலில் Tamil Folks Of Lake County தமிழ்ப் புத்தாண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடியது. டாக்டர் மாதங்கி சேகரன் வரவேற்புரையாற்றினார். தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி துவங்கியது. பின்னர் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அனிதா சங்கர், ஜோதி அருண் ஆகியோர் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினர். மிருதங்கக் கச்சேரியில் சிறுவர்களின் தேர்ந்த பயிற்சி வெளிப்பட்டது. புஷ்பாஞ்சலி மற்றும் நடேச கவுத்துவ நடனத்தில் பரத நாட்டியத்தின் பல்வேறு பரிணாமங்களைக் காண முடிந்தது. 3 முதல் 6 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் மாறுவேடப் போட்டி சிறப்பாக இருந்தது.

சுமார் 80 குழந்தைகளுக்கு மேல் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் தமிழ்ப்புலமைப் போட்டி சிறப்பாக இருந்தது. நடுவர்களாக டாக்டர் கமலா ராதாகிருஷ்ணன், டி.வி சுப்ரமணியன், ரவிசங்கர் ஆகியோர் பங்கு பெற்றனர்.

கர்நாடக சங்கீதமும் திரைப்பாடல்களும் நிகழ்ச்சியில் குழந்தைகள், தங்கள் மழலைக் குரல்களில் பாடி பார்வையாளர்களை மயக்கினர். ‘தில்லானா' ஆட்டம் மிக நேர்த்தி. மதுக்குமார் அவர்களின் தலைமையில் ஏற்பாடுகள் அற்புதம். சின்னச்சாமி ஆறுமுகம் நன்றியுரையாற்றினார். அருண் இரத்தினம் குழுவினர், சுபாஷ் ஆகியோர் ஆடியோ, வீடியோ நிர்வாகத்தைச் சிறப்பாகக் கையாண்டனர்.

பூர்ணிமா பாண்டியராஜ்,
இல்லினாய்ஸ்

© TamilOnline.com