வாஷிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கம் புத்தாண்டு விழா
ஏப்ரல் 18, 2009 அன்று வாஷிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம் புத்தாண்டு மற்றும் சித்திரைத் திருவிழாவை மேரிலேண்டில் உள்ள பெதஸ்டா நகரத்தின் வெஸ்ட்லேண்ட் நடுநிலைப்பள்ளியில் கொண்டாடியது. வாஷிங்டன் பகுதியைச் சேர்ந்த தமிழ்ப் பள்ளி மாணவ, மாணவியர் பாடிய தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. துணைத்தலைவர் ஜான் பெனடிக்ட் வரவேற்புரை வழங்கினார். ஜமுனா மற்றும் பாலாஜி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினர்.

வாரணமாயிரம், கனக்கண்டேனடி போன்ற சொற்றொடர்கள் ஆண்டாளின் நாச்சியார் திருமொழியில் இருந்து எடுக்கப்பட்டதாகக் கூறிய பாலாஜி, 'வாரணம்' என்றால் ‘யானை' என்று பொருள் என்பதைத் தெரிவித்தார். ‘'ஏத்தி ஏத்தி' என்ற தற்காலத் தமிழ்ப் பாடலுக்கு சிறுவர், சிறுமியர் சிறப்பாக ஆடினர். ஓரிரு நிகழ்ச்சிகளைத் தவிர மற்றவை அனைத்தும் அட்டவணைப்படி நடந்தேறின. அமெரிக்காவின் புகழ்பெற்ற பல பரத நாட்டியப் பள்ளிகளிலிருந்து வந்திருந்த மாணவிகள் பரத நாட்டியம் மட்டுமின்றித் திரைப்பாடல்களுக்கும் நடனமாடினர். நிகழ்ச்சிகள் விறுவிறுப்பாக இருந்த போதும் ஒலிபெருக்கித் தொந்தரவுகள் இருக்கத்தான் செய்தன.

பரத நாட்டிய நிகழ்ச்சிகளில் திருமதி பிரதிமா குழுவினரின் மல்லாரி, ஜதிஸ்வரம், காவடி ஆகிய தொடர் நடனங்கள், திருமதி தயா ரவியின் ‘கலைநிறை கணபதி' முதலான நான்கு நடனங்கள் குறிப்பிடும்படியாக இருந்தன. குமாரி கிருதி ராமசாமியின் ‘கோவிந்தன் குழலோசை' தனிநடனம் மிக நேர்த்தியாக அமைந்திருந்தது.

நிகழ்ச்சியில் 'தென்றல் முல்லை' இதழை அதன் ஆசிரியர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுப் பேசினார். பின்னர் தலைவர் சேதுராமன் சிறப்புரையாற்றினார். உணவு இடைவேளைக்குப் பின் FeTNA தலைவர் முத்துவேல் செல்லையா, ஜூலை மாதத்தில் அட்லாண்டாவில் நடக்கவிருக்கும் விழாவுக்கு அனைவருக்கும் அழைப்பு விடுத்தார். தொடர்ந்து ஜான் பெனடிக்ட் தமிழ் என்பது பற்றிச் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் பங்கேற்றோருக்குத் கோமதி நாகராஜ் சார்பில் நினைவுக் கோப்பைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியின் இறுதியில் பீட்டர் எரோணி மூஸ் அவர்களால் தமிழ் இலக்கிய விநாடி-வினா நிகழ்த்தப் பெற்றது. நேரப் பற்றாக்குறையால் அது நிறைவு பெறாமலே நிகழ்ச்சி முடிவுற்றது.

ஆவன்னா,
மேரி லேண்ட்

© TamilOnline.com