மே 2009: வாசகர் கடிதம்
எனது இளவயதில் விகடன், குமுதம் ஆகியவற்றுக்காக ஆவலோடு காத்திருப்பது வழக்கம். இப்போது, தென்றலுக்காக! இந்த மிக நல்ல பணிக்கு எனது வாழ்த்துக்கள்.

அலமேலு மணி, கனடா.

*****


தமிழ் குறுக்கெழுத்துப் புதிரைத் திறம்பட வடிவமைக்கும் உங்களுக்கு எனது பாராட்டுகள். நான் குமுதம் உட்படப் பல தமிழ் குறுக்கெழுத்துப் புதிர்களைப் பார்த்திருக்கிறேன். குறும்பு, சாதுர்யம், திசைதிருப்பல் என்று இவ்வளவு நன்றாக, கிட்டத்தட்ட ஆங்கிலத்தில் இருப்பது போலவே, அவர்களால் செய்ய முடியவில்லை. உங்கள் புதிர் மிக வித்தியாசமானது. ஆங்கிலப் புதிர்களுக்கு எந்த வகையிலும் குறைந்ததல்ல.

டாக்டர் வாஞ்சிநாதன் தமிழ் இலக்கியம், கர்நாடக சங்கீதம், தற்காலத் தமிழ்நடை என்று பலவற்றிலும் தேர்ந்தவராக இருக்க வேண்டும்.

குறுக்கெழுத்துப் புதிர் நிஜமாகவே மூளைக்கு வேலை தருவதாக இருக்கிறது. எனது பாராட்டுகள்.

பத்மாவதி சித்தானந்தம், ப்ரீமாண்ட் (கலி.)

*****


ஒவ்வொரு மாதமும் தென்றலுக்காகக் காத்திருந்து அதை மிகவும் ரசித்துப் படிக்கிறேன். பல சிறுகதைகளுடன் ஏப்ரல் 2009 இதழ் மிக நன்றாக இருந்தது. ‘ஒரு பிரசவ டயரி' என்ற தலைப்பிலான ரம்யா நாகேஸ்வரனின் கதை, வெளிநாடுகளில் நமக்கு என்ன கிடைப்பதில்லை, இந்தியச் சூழலில் எப்படிக் கற்பனை செய்துகொள்கிறோம் என்பவற்றை முழுமையாகப் படம் பிடித்தது. தி.நகர், மயிலாப்பூர், மெரீனா, கச்சேரிகள், சபாக்கள், கோவில்கள் ஆகியவை, மேற்கத்திய நாடுகள் போலத் தூய்மையாக இல்லாவிட்டாலும், மிகுந்த மதிப்பு வாய்ந்தவை, உற்சாகம் தருபவை.

பல விஷயங்களையும் எழுதுகிற தென்றல் எழுத்தாளர்களுக்கு எனது வாழ்த்துகள்.

பத்மா ஸ்ரீனிவாசன், ப்ரீமாண்ட் (கலி.)

*****


ஏப்ரல் மாதம் எழுத்தாளர் பகுதியில் வெளியான ரம்யா நாகேஸ்வரன் அவர்களின் சிறுகதை ‘இக்கரைக்கு அக்கரைப் பச்சை' என்ற திரைப்படத்தை நினைவுபடுத்தியது. 'மூன்றாண்டுகளுக்குப் பிறகு' வற்றாயிருப்பு சுந்தர் அவர்களின் எழுத்து ரசிகர்களுக்கு நல்ல விருந்து. போட்டிக் கதைகள் மூன்றுமே பாராட்டுக்குரியன. ‘எங்கள் வீட்டில்' புகைப்படங்கள் பொன்னான ஒரு பக்கம் வீண். மற்றபடி அனைத்துப் பக்கங்களும், பகுதிகளும் படுசிறப்பு. நாஞ்சில்நாடன் அவர்களின் சிறுகதைகளைத் தென்றலில் வெளியிடலாம். முக்கியமான விஷயம், ஏப்ரல் மாத தென்றலின் அட்டைப்படம் ‘மெய்யாலுமே' அசத்தல்.

இந்திரா காசிநாதன்

© TamilOnline.com