வார்த்தை சிறகினிலே
சந்திராயன் செயற்கைக் கோளை ஒரே மூச்சில் நிலவுக்குக் கொண்டு செல்வது சிரமமான விஷயமாக இருந்தது. “எதுக்கு ஒரே அட்டெம்ப்ட்ல சந்திராயனை நிலவை நோக்கிச் செலுத்தணும்? முதல்ல அதை பூமிக்கு வெளியே நிலை நிறுத்துவோம். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா உயரத்தை அதிகரிப்போம். நிலவுக்குப் பக்கத்தில போனதும் சின்ன ராக்கெட்டை நிலவில் தரையிறக்குவோம்னு சொன்னேன். அக்டோபர் 22-ம் தேதி ஏவப்பட்ட சந்திராயன், நவம்பர் 14-ம் தேதி நிலவை நெருங்கியது. குட்டி ராக்கெட் நிலவில் இந்தியக் கொடியைப் பதித்தது.
மயில்சாமி அண்ணாதுரை

பாகிஸ்தானிலிருந்து கப்பல் ஏறி வந்து, மும்பைத் துறைமுகத்தில் இறங்கி, துப்பாக்கிகளால் வேட்டை ஆடுகிறார்கள். வெடி வைத்துத் தகர்க்கிறார்கள் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகள். மும்பையின் முகம் கிழிந்து தொங்குகிறது. அந்தத் தீவிரவாதிகளின் அடுத்த இலக்கு சென்னை என்று சொன்ன பிறகும், நம் அரசுகளுக்குச் சொரணை வரவில்லை. பாகிஸ்தானுடன் மூன்று மாதங்களாக சாவகாசமாகப் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்கிறார் பிரதமர் மன்மோகன் சிங்.
பழ. கருப்பையா, இலக்கியவாதி, பேச்சாளர்

தினமும் காலையில் ஒரு மணி நேரம் வாக்கிங் போகிறேன். அடுத்த அரைமணி நேரம் யோகா. இதை நான் விடாமல் கடைப்பிடிக்கிறேன். ஆடம்பரமும் ஆரவாரமும் எனக்குச் சுத்தமாகப் பிடிக்காது. நான் எதற்கும் அலட்டிக் கொள்வதில்லை. அடக்கமாக இருக்கிறேன்.
மு.க.ஸ்டாலின்

தொடர்ந்து நான் எழுத்தாளனாக இருப்பது, என்னை எழுதத் தூண்டுவது என் கிராமத்து மண்ணும் என் கிராமப்புற விவசாய மக்களின் அவலங்களும் தான். இன்னும் சொல்லப் போனால் அடித்தட்டு மக்களைப் பற்றி எழுதுகிறேன். அடித்தட்டு வர்க்கத்தின் மக்களை நோக்கியே எழுதுகிறேன்.
மேலாண்மை பொன்னுச்சாமி, எழுத்தாளர்

நகரங்களில் குடிநீர், குடிக்கும் பாலை விட அதிக விலை கொடுத்து வாங்கப்படும் காலத்தில் இருக்கிறோம். வரும் காலங்களில் நீருக்கென யுத்தம் நடக்காதிருக்க வேண்டும். இயற்கையாகக் கிடைத்த பழங்கள், காய்கறிகள், தானியங்கள் விலை கொடுத்து வாங்கப்படுவது போல இயற்கை அளித்த வளமான நீரையும் விலை கொடுத்து வாங்க ஆரம்பித்து விட்டோம். இனி என்ன மிச்சம் வைக்கப் போகிறோம்?
கவிஞர் மதுமிதா

அரவிந்த்

© TamilOnline.com