ஊட்டியிலிருந்து முதுமலைக்குச் சென்றோம். முதுமலையை நெருங்கக் நெருங்கக் குளிர் குறைந்து வெப்பம் தாக்கியது. மான் கூட்டம் ஒன்று சாலையைக் கடந்து சென்றது. பழுப்பு படர்ந்த யானையொன்றும் பாகனும் மௌனமாகச் சாலையோரம் நடந்து கொண்டிருக்க எங்கள் வாகனம் சற்றுத் தயங்கி அவர்களைக் கடந்தது. மதியம் முதுமலை வன அலுவலகத்திலிருந்து கிளம்பும் சஃபாரிக்குச் சீட்டுகள் வாங்கி, வண்டியிலேற சந்தையைப் போலப் பயணிகள் இரைச்சலாக இருக்க, ஓட்டுனர் எழுந்து “மிருகங்களப் பாக்கணும்னா இப்படி இரைச்சல் போடாம அமைதியா வரணும். ட்ரிப்பு முடியற வரைக்கும் யாரும் பேசாதீங்க” என்று அறிவிக்க, எல்லாரும் மௌனமானார்கள். சாலையிலிருந்து சட்டெனப் பிரிந்து வனத்திற்குள் செல்லும் பாதையில் வாகனம் செல்ல, நிறைய பாம்புப் புற்றுகள், மான்கள், சிங்கவால் குரங்குகள் என்று தென்பட்டன. காட்டு யானை எதுவும் தென்படவில்லை என்பது ஏமாற்றம்.
அங்கிருந்து கர்நாடக எல்லை பத்து கிலோ மீட்டருக்குள். “பர்மிட் வாங்கிட்டுப் போலாம் ஸார்” என்று ஓட்டுனர் பரிந்துரைத்தாலும், மாலை நான்கு மணியாகிவிட்டதால் இரவுப் பயணத்தைத் தவிர்க்க விரும்பி மறுத்துவிட்டேன். “சரி பார்டர் வரைக்கும் போய்ட்டு வந்துரலாம்” என்று சொல்லிவிட்டு ஓட்டினார். கர்நாடக எல்லைச் சோதனைச் சாவடி வரை சென்று ஒரு U டர்ன் அடித்துத் திரும்பினோம். ஊட்டியை நெருங்குகையில் ‘கல்லட்டி அருவி' என்ற தேய்ந்த பெயர்ப்பலகையைப் பார்த்து வண்டியை நிறுத்தச் சொல்லிவிட்டு ஆளரவமில்லாத ஒற்றையடிப் பாதையில் அரைக் கிலோ மீட்டர் நடக்க, அடர்ந்த புதர்கள், சிறிய மரப்பாலம், பல படிகள், ஓடை, பெரிய பாறை ஆகியவற்றைத் தாண்டிப் பார்த்தால் ஆக்ரோஷமாகக் கொட்டிக் கொண்டிருந்தது அருவி. வாகனத்தை நிறுத்தி உடனே பார்க்கும் இடங்களில்தான் கூட்டம் அம்முகிறது. இம்மாதிரி நடந்து சென்று பார்க்கவேண்டும் என்றாலே பெரும்பாலானோர் அப்பீட்டு ஆகிவிடுகிறார்கள். அம்மாதிரி இடங்களைப் பார்ப்பதில் எனக்கு ஒரு அதீத திருப்தி!
##Caption## மனமில்லாமல் அருவியைப் பிரிந்து ஊட்டி திரும்பி மாலையே கோவைக்கு இறங்கத் துவங்கி இரவு எட்டு மணிவாக்கில் கோவை எல்லையிலிருந்த அன்னபூர்ணாவின் புதிய கிளை உணவகத்தில் நிறுத்தினோம். முன்பெல்லாம் கோவை நகரத்திலிருக்கும் அன்னபூர்ணாக்களில் நாம் சாப்பிட உட்கார்ந்தால் அடுத்த வாடிக்கையாளர் நம்மையொட்டி நின்றுகொண்டு காத்திருப்பார். சும்மா எதற்காகவேனும் எழுந்து நின்றால்கூட நாற்காலி காணாமல் போய்விடும். நல்லவேளை இந்தத் தடவை அவ்வளவு கூட்டமில்லை. இரவுணவை முடித்துவிட்டுப் பணம் செலுத்துமிடத்தில் இருந்த இனிப்பு பீடா ஒன்றையும் (கிட்டத்தட்ட பத்து வருடங்கள் கழித்து பீடா) வாங்கி ஒதுக்கிக்கொண்டேன். மறுநாள் சதாப்தியில் திருச்சி.
காணி நிலம் இல்லாவிட்டாலும் எதிர்காலத்தில் ஒரு சிறிய வீடு கட்டுவதற்காகவாவது நிலம் வாங்கிப் போடவேண்டும் என்ற நெடுங்காலத் திட்டம் ஊருக்குத் திரும்புவதற்கு ஒரு வாரம் முன்பு திடீரென நினைவுக்கு வர நாளிதழ்களின் வரி விளம்பரங்களை மேய்ந்தேன். முன்பு செண்ட், கிரவுண்ட் அளவைகளில் விலை குறிப்பிடுவார்கள். இப்போது சதுர அடி அளவையில் இருக்க திருச்சியிலிருந்து இருபது கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் நிலங்களின் விலை சதுர அடிக்கு 200 ரூபாய் என்றார்கள் (ஒரு கிரவுண்டு கிட்டத்தட்ட நாலரை லட்சம் ஆகிறது). சரி தந்தை பெயரில் ஒரு பவர் ஆஃப் அட்டர்னியாவது வாங்கிக் கொடுத்துவிட்டு ஊருக்குப் போகலாம் என்ற முடிவு செய்தபோதுதான் சார்பதிவாளர் அலுவலகம் என்ற குகைக்குப் போகவேண்டுமே என்று உறைத்தது. தென்னூர் ரோட்டை ஒட்டி இருந்த அந்த அலுவலக காம்பவுண்டைத் தாண்டவே முடியவில்லை. ஈக்கள் மாதிரி மக்கள் கூட்டம். அதில் நுழைந்து தேடியதில் அலுவலர்கள் எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. ஆஸ்பெஸ்டாஸ் ஷெட் ஒன்றில் கடை பிரித்து நான்கைந்து டாக்குமண்ட் ரைட்டர்ஸ் அலுவலகங்கள் மும்முரமாக புரோக்கர்கள் நிரம்பி இயங்கிக்கொண்டிருக்க தரையில் படுத்திருந்த நாயின் வாலை மிதிக்காமல் உள்ளே நுழைந்து ஈசான மூலையில் பொதுத் தொலைபேசிக் கூண்டு அளவு இருந்த அறையில் அமர்ந்திருந்த டாக்குமண்ட் ரைட்டரைப் பார்க்கப் போனேன். அவர் ஈஸிசேரில் அமர்ந்திருப்பதைப் போல நாற்காலியில் சாய்ந்து அமர்ந்திருக்க மூக்கின் நுனியில் கண்ணாடி, சட்டையின் மேல்பட்டன்கள் திறந்திருக்க, காலரில் கைக்குட்டை சுற்றியிருந்தார். அருகில் இன்னொரு இருக்கையில் சோனியாக ஒரு பெண் அமர்ந்து கணினியில் எதையோ தட்டச்சிக்கொண்டிருக்க, என்னைப் பார்க்காமலே “என்ன?” என்றார்.
“ஒரு பவர் ஆஃப் அட்டர்னி வேணும் ஸார்”.
“யார் பேருக்கு?”
“அப்பா பேருக்குத்தான்”
“செஞ்சிரலாம்” என்று சொல்லிவிட்டு மனக்கணக்கு போட்டு “ஆயிர்ரூவா கொடுங்க” என்றார்.
நூறு ரூபாய் ஸ்டாம்ப் பத்திரம். ஏற்கனவே ஆயிரம் முறை உபயோகித்த இரண்டு பக்க டெம்ப்ளேட்டை கணிணியிலிருந்து உருவி என் பெயர், என் அப்பா பெயர், முகவரி விவரங்கள் மாத்திரம் நுழைத்து அச்சு எடுக்க வேண்டும். ஆயிரம் அநியாயமாகத் தோன்றியது.
“கொஞ்சம் பாத்து செய்ங்க ஸார்” என நான் இழுக்க, அவர் இன்னமும் நிமிராமல் “இங்க பாருப்பா. ஆயிரத்தெட்டு வேலை இருக்கு. நிறைய பத்திரம் பதிய வேண்டியிருக்கு (அதில்தான் காசு). பவர் ஆஃப் அட்டர்னில்லாம் உடனே கொடுக்க மாட்டாங்க. ஆயிரம் கொடுத்தா நாளைக்கு கெடைக்கும். சப்-ரிஜிஸ்தார்லருந்து எல்லாத்துக்கும் கொடுக்கணும்ல? எனக்கு அம்பதுதான் நிக்கும்.”
நிற்க முடியாமல் வெளியில் வந்துவிட்டேன்.
அங்கிருந்து விரைந்து ஸ்ரீரங்க கோபுரத்திலிருந்து திருவானைக்காவல் செல்லும் சாலையில் இருந்த சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நண்பனோடு வந்தேன். எதிர்பட்ட பியூனிடம் விசாரிக்க “வெளில ரைட்டர்ட்ட போயி சொன்னீங்கன்னா அவங்களே எல்லாத்தையும் செஞ்சு கொடுத்துருவாங்க” என்றதும் வெளியே வந்து பார்த்தபோது மையமாக டைப்ரைட்டர் ஒன்று இருப்பது கண்ணுக்குத் தெரிந்தது. அதன் முன் படபடத்துக்கொண்டிருந்தவரிடம் நெருங்கிக் கேட்டதில் அவர் “ஆயிரம் கொடுங்க” என்று கேட்க, நான் தயங்கினேன். பணம் கொடுப்பது பெரிய விஷயமில்லை. ஆனால் மனம் வரவில்லை. “வெளிநாட்ல இருக்கேன்னு சொல்றீங்க. ஆயிரத்துக்கு இம்புட்டு யோசிக்கறீங்களே” என்றார். வெளிநாட்டிலும் ஆயிரம் ரூபாய் மரத்தில் விளைவதில்லை என்று சொல்ல நினைத்தேன். “நியாயமாக் கேக்கறேன். தொள்ளாயிரம் கொடுத்திருங்க. உள்ள எல்லாத்துக்கும் கொடுக்கணும்” என்றார்.
நான் பேசாமல் எழுந்து நடக்க முதுகுக்குப் பின் கேலி சிரிப்புகள் கேட்டன. “விஜிலென்ஸ்க்கு கம்ளெயிண்ட் கொடுக்கலாம்னு பெரிசா போஸ்டர் ஒட்டியிருக்கானுங்களே. ஒரு போன் போட்டு சொல்லிரலாமா” என்று நண்பன் கேட்க சற்று சபலமாகத்தான் இருந்தது. ஆனால் அடுத்த வாரம் ஊர் திரும்ப வேண்டியிருந்ததால் அத்திட்டத்தைக் கைவிட்டேன். இவற்றில் எதுவும் புதிதல்ல - பல்லாண்டுகளாக அரசு இயந்திரத்தின் முனை மழுங்கிய பற்சக்கரங்களின் வழியாக மொத்தமும் பரவியிருக்கும் லஞ்சப் பேய் எல்லாருக்கும் தெரிந்த பேய்தான். இவர்களோடு போராட திராணியில்லாமல் வியர்வை பொங்க உழைத்த காசைக் கொடுத்துவிட்டு காரியத்தை முடித்துவிட்டுப் போய்க் கொண்டேயிருக்கிறார்கள். கொடுக்காவிட்டால் தலையால் தண்ணீர் குடித்தாலும் காரியம் ஆகாது என்பது நிதர்சனம்.
இன்னும் வரும்...
வற்றாயிருப்பு சுந்தர் |