எங்கோ ஆட்டோ சத்தம் கேட்டு கண்விழித்தேன். தலை விண்ணென்று வலித்தது. இரவு இரண்டு மணிவரை கம்ப்யூட்டரில் வேலை செய்ததன் விளைவு. தலையை லேசாகத் திருப்பி மணி பார்த்தேன். காலை மணி 6:30. பாத்திரங்கள் சத்தம் ஒரு தாளத்தோடும் ஒட்டாமல் குளறுபடியாகக் கேட்கிறது. அம்மா சமைத்துக் கொண்டிருக்கிறாள் போலிருக்கிறது. ச்சே, கொஞ்சம் சீக்கிரம் எழுந்திருந்தால் அவளுக்குச் சமையலில் ஒத்தாசையாக இருந்திருக்கலாமே என ஒரு பக்கம் தோன்றினாலும், மனம் கம்ப்யூட்டரில் என்ன பதில் வந்திருக்கிறது என பார்த்துவிடலாமே என எண்ண, கம்ப்யூட்டரை ஆன் செய்தேன்.
“ரேணு, எழுந்துட்டயா? ஆபீஸுக்கு நேரம் ஆச்சுடி” அம்மா குரல் கொடுத்தாள்.
“வந்துட்டேம்மா”. இது ஒன்று! நம் அவசரத்துக்கு வேகமாக இணையதளம் திறக்க மாட்டேங்கிறது என வெறுப்போடு அந்த இடத்தை விட்டு அம்மாவிடம் வந்தேன்.
அம்மா காபியை என் கையில் கொடுத்தபடி, “என்னடி நேத்து ராத்திரி அவ்வளவு நேரம் கம்ப்யூட்டரில் என்ன செய்த?”
“என்னுடைய டேட்டாவைச் சரிபார்த்தேன்மா,” பொய் சொன்னேன்.
சட்டென்று எழுந்த குற்றவுணர்வை ஒரு நொடியில் மறந்துவிட்டு, என்ன பதில் வந்திருக்கும் என மனம் நினைத்தது.
என் மன ஓட்டத்தை அறிந்தவள் போல் “சரி, மறுபடியும் போய் கம்ப்யூட்டரில் உட்காராதே. கிளம்பு நேரமாச்சு” என்றாள் அம்மா.
##Caption## என் எண்ணத்தைப் பிறர் கணிக்குமளவுக்கு என் செயல் ஒரே மாதிரி இருந்ததை எண்ணிச் சிறிது வெட்கமாக இருந்தது. இருந்தாலும் மன உந்துதலைக் கட்டுபடுத்த முடியாமல் வேகமாக உள்ளறைக்குச் சென்றேன். நல்ல வேளை ஃபோரம் இணையதளம் திறந்திருந்தது. இதயத் துடிப்பு அதிகரிக்க என்னுடைய கருத்துக்கு மற்றவர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் எனப் பார்த்தேன். யாரும் லாகின் செய்யவில்லை போலிருக்கிறது. பதிலேதும் இல்லை. சிறிது ஏமாற்றத்துடன் அவசரமாகக் கிளம்பி, அவசரமாகச் சாப்பிட்டுவிட்டு அலுவலகத்துக்கு விரைந்தேன்.
பஸ்சில் வீட்டிற்கு திரும்பி வரும்பொழுது யாரோ நிலா டிவியில் ஞாயிறுதோறும் ஒளிபரப்பாகும் காவ்யாவின் கலந்துரையாடல் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். அந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சிதானே என்னுடைய தினசரி நடவடிக்கை மாற்றத்திற்கு ஆரம்பக் காரணமாக இருந்தது!
ஒருநாள் வீட்டில் பேச ஆள் இல்லாததால் தொலைக்காட்சியைப் பேசவைத்தேன். புஷ்பவனம் குப்புசாமியோடு காவ்யா உரையாடிக்கொண்டிருந்தார். என்ன சகஜமான உரையாடல்! மனம் நிறைந்ததால் பார்க்கத் தவறிய பாகத்தை மறுநாள் ஆன்லைனில் பார்க்க வார்த்தைகளை கூகுள் செவ்வகத்தில் போட்டு இணையதளத்தைத் தேடினேன். நிஜ வாழ்க்கையைப் போலவே தேடியது கிடைக்காமல் தேடாதது கிடைத்தது. காவ்யா தன் ரசிகர்களுக்கு பதில் அளிக்கும் ஃபோரம் இணையதளம். முந்தின நாள் நிகழ்ச்சியைப் பற்றி அவர்களிடம் பாராட்டுகளைத் தெரிவிக்க விழைந்து அந்நிகழ்ச்சியை விமர்சித்து ஒரு கடிதம் அனுப்பினேன். என்ன ஆச்சர்யம்! காவ்யா அவர்கள் நன்றி தெரிவித்து, நான் கடிதம் எழுதிய விதத்தைப் பாராட்டி பதிலளித்தார்.
அவர்களின் பாராட்டு எனக்கு ஆர்வத்தை அதிகரித்தது. மீண்டும் எழுதத் தூண்டியது. ஆதலால் காவ்யாவின் நிகழ்ச்சி மட்டுமல்லாது மற்ற நிகழ்ச்சிகளுக்கும் விமர்சனங்களை எழுதினேன். தொடர்ந்து விமர்சனம் எழுதியதால் பல உறுப்பினர்களுக்குப் பரிச்சயம் ஆனேன். பலர் எனக்குப் பரிச்சயம் ஆனார்கள். முகமறியாவிட்டாலும் எழுத்துக்கள் அவர்களை அடையாளம் காட்டியது. பரிச்சயம் வளர்ந்து நட்பானது. நன்முகத்தை மட்டும் காட்டும் இந்த நட்பு இனித்தது. இந்த இனிப்பு எனக்குத் திகட்டவில்லை. திகட்டாத இனிப்பு மேலும் வேண்டி நிறைய நேரம் செவ்வகப் பெட்டிகளுடனேயே செலவழித்தேன். ஆனால் எந்த வினைக்கும் எதிர்வினை உண்டல்லவா?
இன்றைக்கும் அப்படித்தான் சிறந்த பாடகர் நிகழ்ச்சியை பற்றிக் கருத்துத் தெரிவித்திருந்தேன். அதற்கு என்ன பதில் வரும் என எதிர்பார்த்து வீட்டிற்கு வந்தவுடன் கம்ப்யூட்டரை ஆன் செய்தேன். அம்மாவும் தங்கையும் நான் அலுவலகத்தை விட்டு வருவதற்கு முன்பே சந்தைக்குப் போயிருந்தார்கள். நானும் எந்த இடையூறும் இல்லாததால் நேரம் போவது தெரியாமல் ஃபோரத்திலேயே இருந்துவிட்டேன். சலசலப்புக் கேட்டு நேரம் பார்த்தேன். மணி எட்டரை. இன்று அவர்கள் வீட்டுக்கு வருவதற்கு ஏனோ தாமதம் ஆகிவிட்டது போல.
“அம்மா, பசிக்குது சாப்பிடலாமா” எனக் கேட்டுகொண்டே சமையலறைக்குள் நுழைந்தேன். அம்மா அமைதியாக அரிசியைக் கழுவிக் கொண்டிருந்தார். அம்மா கோபமாக இருந்தால் மௌனமாக இருப்பாள். அன்றும் அப்படித்தான். குற்றவுணர்வு உறுத்தியது.
“சாரிம்மா. நான் சாப்பாடு வைக்க மறந்துட்டேன்”.
“அம்மா, பசிக்குது” எனக் கூவியபடியே தவறான நேரத்துல சரியாக வந்தாள் என் தங்கை திவ்யா. அம்மா இப்பொழுதுதான் அடுப்பில் சாதம் வைப்பதைப் பார்த்துவிட்டு, “அக்கா, நீ என்ன சமைச்சு வைக்கலையா?” என்று கேட்டது என் குற்றவுணர்வை அதிகரித்தது.
நான் சமைக்காததன் காரணத்தை உடனே புரிந்துகொண்டு “சமைச்சிருப்பா, ஆனா அக்காதான் எப்பப் பார்த்தாலும் கம்ப்யூட்டர்ல முகம் தெரியாதவங்க கிட்ட பேசிகிட்டு இருக்கா இல்ல, அநேகமா அவங்கதான் அக்கா செஞ்சி வெச்சத சாப்பிட்டு இருக்கணும்” என தன் கோபத்தைக் கிண்டலாக வெளிப்படுத்திவிட்டு என்னை முறைத்தபடி போனாள்.
முன்பெல்லாம் ஏளனம் செய்யும்பொழுது அவ்வளவாகத் தெரியவில்லை. ஆனால் இப்பொழுது நெருடியது. அவர்களுடைய பேச்சில் நியாயம் இருந்தது. அதனால் மறுபேச்சு பேசமுடியவில்லை. என்மேல் எனக்கு எழுந்த கோபத்தில் காய்கறிகள் வேகமாகத் துண்டுகளாயின. அதே வேகத்தில் இனிமேல் தொலைக்காட்சி, கம்ப்யூட்டரைத் தவிர பிற விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது என மனதிற்குள் தீர்மானம் எடுத்தேன்.
##Caption##உணர்வுப் பெருக்கில் எடுத்த பல தீர்மானங்கள் காலத்துடனேயே கரைந்துவிடும் என்பார்கள். என்னுடைய தீர்மானங்கள் மட்டும் விதிவிலக்கா என்ன? கம்ப்யூட்டரிடம் உள்ள என் தொடர்பைத் துண்டிக்க மனமில்லை. அதனால் தங்கையின் புலம்பல் அதிகமானதும் என்னைப் பாதிக்கவில்லை. அம்மாவின் சில நேர மௌனமும் என்னைச் சலனப்படுத்தவில்லை. என் வட்டத்தில் உள்ள எனக்கு நெருக்கமான மனிதர்கள் என்னைவிட்டு விலகுவது எனக்கு அப்போது புலப்படவில்லை. ஆனால், காலம் தனது கடமையைச் செய்யாமல் போகுமா என்ன?
ராதா, என் தோழி. ஏழாம் வகுப்பு முதல் இன்று ஒரே அலுவலகதில் வேலை செய்யும்வரை ஒன்றாகவே பயணிக்கிறோம். ஒன்றாகவே பயணம் செய்வதால் என் அனுபவங்களில் அவளுடைய பங்கும், அவளுடையதில் என்னுடைய தாக்கமும் இருந்தது. என்னவோ தெரியாது அவளைப் பார்த்தால் ஓர் உற்சாகம் என்னை வந்து தொற்றிக் கொள்ளும். அவளுடன் இருக்கும்போது நான் நானாகவே இருப்பேன். என்னைப் பற்றிய எந்தக் கவலையும் எனக்கு அப்போது இருப்பதில்லை. இந்தச் சுதந்திர உணர்வுதான் நட்பின் குறியீடோ? வழக்கம்போல் அலுவலகத்தில் சாப்பாட்டு நேரத்தில் சந்தித்தோம். அன்று ராதா கொஞ்சம் படபடப்பாக இருப்பது மாதிரித் தெரிந்தது.
“ஏன் ஒரு மாதிரி இருக்க. ஒடம்புக்கு ஒண்ணும் இல்லையே?”
“அதெல்லாம் ஒண்ணும் இல்ல. அடுத்த வாரம் என்னைப் பொண்ணு பார்க்க மாப்பிள்ளை வீட்டிலயிருந்து வராங்களாம்” என வேகமாகப் பேசினாள்.
அவள் பேசிய விதத்தைப் பார்த்துச் சிரித்துவிட்டேன். ராதாவிற்கு என் சிரிப்பு லேசான கோபத்தை வரவழைத்தது. “உன்கிட்ட சொல்லியே இருக்கக் கூடாது” என்றவள் என்ன நினைத்தாளோ தீடீரென்று அவள் முகத்தில் சாந்தம் வந்தது. “ஏய், அவங்க வர்ற அன்னிக்கு நீ என்னோட இருடி. எனக்குக் கொஞ்ம் தெம்பாக இருக்கும்”.
ஆ! இதுகூட செய்ய மாட்டேனா என் நினைத்தபடி “எப்ப வர்றாங்க?” எனக் கேட்டேன்.
ஒருவித தயக்கதோடு என் முகத்தை ஆழ்ந்து பார்த்தபடி “ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம் ஏழு மணிக்கு” என்றாள்.
சிறந்த பாடகர் நிகழ்ச்சி நேரம்.
“அதுக்கென்ன வரேன்” எனச் சொல்லுவேன் என எதிர்பார்த்தவளை “ஓ!” என்ற என்னுடைய ஓரெழுத்து பதில் ஆத்திரப்படுத்தியது. “உன்னக் கேட்டிருக்கவே கூடாது” என்று வெறுப்போடு சொல்லிவிட்டுச் சாப்பிடாமல் அந்த இடத்தை விட்டுப் போய்விட்டாள்.
ஓரெழுத்து வார்த்தையில் கூட என்னுடைய சிந்தனையை முழுமையாக அறிந்துக்கொள்ளக் கூடியவள் இப்பொழுது தொலைதூரத்தில்! மனம் கனத்தது. இந்நிலை மாறுமோ? மாற்றம்தானே காலத்தின் நியதி.
என் வாழ்க்கை ஒரே சீராகச் சென்றதால் மூன்று மாத காலம் கடந்ததை நான் உணரவில்லை. இப்பொழுது இரண்டு நாட்களாக வலது பக்கக் கீழ்வயிற்றில் லேசான வலியை உணர்ந்தபோது காலம் மெதுவாக ஊர்வதாக நினைத்தேன். இன்றைக்கு முக்கிய வேலை இருந்ததால் ஒரு க்ரோசின் மாத்திரையைச் சாப்பிட்டு விட்டு அலுவலகத்துக்கு வந்தேன். கம்மியாக இருந்த வலி நேரம் ஆக ஆக அதிகரித்துத் தாங்க முடியாத அளவுக்குப் போனது. இந்த வலியுடன் சத்தியமாக வீட்டிற்குத் தனியாகப் போகமுடியாது. அதனால் ராதாவிற்கு போன் போட்டு நிலைமையைச் சொன்னேன். ஐந்து நிமிடத்தில் ஓட்டமும் நடையுமாக என்னிடம் வந்தாள். "ரொம்ப வலிக்குதாடி?" என்று கேட்டபடி என்னைப் பார்த்த அவளது கண்கள் "நான் இருக்கிறேன், கவலைப்படாதே" என்பதைச் சொல்லாமல் சொன்னது.
அவள் வந்ததும் எனக்கு வலியை தாங்கிக் கொள்ளக் கூடிய புதிய தெம்பு வந்தது. மனதுக்கு நெருக்கமானவர்கள் அருகில் இருந்தாலே போதும் மனதிடம் தானாகவே வரும் என்பதை அப்போது உணர்ந்தேன். இந்த உணர்வு எனக்குப் புதியது. உயிர் இல்லாத கம்ப்யூட்டர் மூலம் வளர்ந்த என் நட்புறவுகள் என்றும் இந்த உணர்வைக் கொடுத்ததில்லை. நிழலுக்கும் நிஜத்திற்கும் வித்தியாசம் புரிந்தது. புரிந்தபோது மனதில் தெம்பு இருந்தும் வலி பொறுக்க முடியவில்லை. அப்படியே மயக்கமாகிப் போனேன்.
அதன் பிறகு நடந்தது எனக்கு அவ்வளவாக நினைவில்லை.
நினைவு வந்தபொழுது அம்மா, தங்கை, ராதா உடன் இருந்தார்கள். எனக்கு அப்பெண்டிசைடிஸ் ஆபரேஷன் செய்திருந்தார்கள். நான் கண் விழித்ததும் அம்மாவின் முகத்தில் ஒரு நிம்மதி தெரிந்தது. அம்மா என் தலையை நீவி விட்டாள். இதமாக இருந்தது. தங்கை "டாக்டர், பயப்படுவதற்கு ஒன்றும் இல்லைன்னு சொன்னாரடி" எனக்கு ஆறுதல் சொல்வதுபோல் சொல்லி அவள் தன்னைச் சமாதானப்படுத்திக் கொண்டது என்னை நெகிழ்த்தியது. இந்த நொடி முதல், என் பழைய தீர்மானத்தைப் புதுப்பித்தேன். இது தீர்க்கமான முடிவு. இந்த முடிவு நிச்சயம் நிலைக்கும். ஏனென்றால் இது உணர்ச்சியில் எடுத்த முடிவு அல்ல, அனுபவத்தில் எடுத்தது.
சில நாட்களில் பழைய நிலைமைக்கு வந்து அலுவலகம் போய்வர ஆரம்பித்திருந்தேன். ஒரு நாள் மதிய இடைவேளையில், "ரேணு, அடுத்த வாரம் எஸ்.பி.பி. இசை நிகழ்ச்சிக்கு இரண்டு டிக்கெட் இருக்கு, போலாமா?" என்று ராதா கேட்டாள்.
"எப்போ?" ஆர்வத்துடன் கேட்டேன்.
"ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம் ஏழு மணிக்கு" என்றவளைப் பார்த்துப் புன்னகைத்தேன். தீர்க்கமான என் புன்னகை ஒப்புதலுக்கானது என அவளுக்கு தெரியும்.
சாரதா ரமேஷ் |