ஒலி வடிவத்தில் கேட்க - Audio Readings by Saraswathi Thiyagarajan
குழந்தைகளே, எல்லாம் நலம்தானே! இந்தக் கதையக் கேளுங்க.
அது ஒரு கிராமம். அந்தக் கிராமத்திலேயே செல்வாக்கு மிகுந்தவர் பண்ணையார். அவர் மிகப் பெரிய மாட்டுப் பண்ணை ஒன்றை வைத்திருந்தார்.
பண்ணையார் செல்லமாக ஒரு நாயை வளர்த்து வந்தார். அதன் பெயர் டாமி. அது தன் இஷ்டம்போல் சுற்றிக் கொண்டிருக்கும். தனக்குத்தான் எல்லாம் சொந்தம் என்பது போல நடந்து கொள்ளும்.
வேலையாட்களுக்கு எரிச்சல் வந்தாலும், அது பண்ணையாரின் செல்லம் என்பதால் அமைதியாக இருந்தனர்.
ஒருநாள்... பண்ணையார் புதிதாக சில உயர்தரப் பசுக்களை வாங்கி வந்திருந்தார். அவற்றுக்காகத் தனி இடமும் ஏற்பாடு செய்திருந்தார். அதில் வைக்கோல் போர்களையும், தண்ணீர்த் தொட்டிகளையும் ஆங்காங்கே அமைத்திருந்தார்.
ஒரு நாள் டாமி அங்கே வந்தது. அங்கும் இங்கும் சுற்றிய அது, தனக்கு வசதியாக அமைந்திருந்த ஒரு வைக்கோல் போரில் ஏறிப் படுத்துக் கொண்டது. சற்று நேரத்தில் பசியோடு அங்கு வந்த பசு ஒன்று, நாய் போரின் மேல் படுத்திருப்பதைப் பார்த்தது. “எனக்குப் பசிக்கிறது, நீ வேறிடத்துக்குப் போய்ப் படுத்துக் கொள்” என்று பசு வேண்டிக் கொண்டது. நாய் அதைச் சட்டை செய்யவில்லை.
குளிருக்கு இதமாகவும், சுகமாகவும் இருந்ததால் அங்கேயே படுத்துக் கொண்டிருந்தது. பசு பலமுறை சொல்லியும் நாய் கேட்பதாக இல்லை.
வெகுநேரமாகியும் உணவுண்ணச் சென்ற பசுவைக் காணாததால் மற்ற பசுக்கள் அங்கு வந்தன. நாய் வைக்கோலின் மேல் படுத்திருப்பதையும் பசு பசியோடு காத்திருப்பதையும் கண்டன. நாயை வேறிடம் செல்லுமாறு அந்தப் பசுக்கள் வேண்டிக் கொண்டன. ஆனால் நாயோ எழுந்து சோம்பல் முறித்து விட்டு மீண்டும் அலட்சியத்துடன் படுத்துக் கொண்டது.
பலமுறை கெஞ்சியும் நாய் கேட்காததால் மாடுகளுக்குக் கோபம் வந்தது. அவை தமது கொம்பினால் குத்தி வைக்கோல் போரைத் தூக்கி வீசின. நாயும் அத்துடன் போய்க் கீழே விழுந்தது. அதற்கு வயிற்றிலும் காலிலும் பலத்த அடி. ஊளையிட்டுக் கொண்டே நொண்டி நொண்டி அங்கிருந்து ஓடியது.
இப்படித்தான் குழந்தைகளே, சிலர் தாமும் பயன்படுத்த மாட்டார்கள், பிறரையும் உபயோகிக்க விட மாட்டார்கள். இப்படித் தொந்தரவு செய்வதால் யாருக்கு என்ன லாபம்?
சரி, அடுத்த மாதம் இன்னொரு கதையோடு வந்து உங்களைப் பார்க்கிறேன்.வணக்கம்.
- சுப்புத் தாத்தா |