மே 2009: குறுக்கெழுத்துப் புதிர்
சென்னை மாநிலக் கல்லூரியில் படித்து, இங்கிலாந்து கேம்ப்ரிட்ஜில் ஆய்வுப் பட்டம் பெற்று அமெரிக்காவில் சிகாகோ பல்கலையில் பல்லாண்டுகள் பணிபுரிந்த எஸ். சந்திரசேகர் 1983ல் நோபல் பரிசு பெற்றவர். நட்சத்திரங்களின் அமைப்பு, உருவாகும் விதம் பற்றியும் கருந்துளைகள் பற்றியும் நிறைய ஆய்வு செய்தவர்.

கிரிக்கெட்டில் பந்தை வீசும்போது இடைஞ்சலான இடத்தில் பந்தை விழவைத்தால் (அவ்வளவு பொருத்தமின்றி) blackhole-ல் போட்டதாகக் குறிப்பிடுகிறார்கள். ஆங்கிலத்தில் ஒரு துறையின் கலைச் சொற்களை (ஓரிரு சமயம் தப்பாகவும்) பொதுப்புழக்கத்தில் கொண்டு வருகிறார்கள். (chain reaction, quantum leap, metamorphosis இவற்றைக் கூறலாம்).

தமிழ்நாட்டினர் ஒருவர் உலகப்புகழ் அடையும்வரை ஆய்வு செய்த, ‘கருந்துளை' தெரிந்து கொள்ள வேண்டிய சொல் என்று சென்ற மாதப்புதிரில் கொணர்ந்தேன். வழக்கமாகப் புதிர்மன்னராகிவிடுபவர்கள் கலைச்சொல்லால் தவற விட்டதாகத் தோன்றியதால் இவ்விளக்கம். அதுசரி, திண்டிவனத்துக்கருகே ‘கருங்குழி' என்ற ஊரில் மலிவாக வீட்டுமனைகள் கிடைப்பதாக என் அலைபேசியில் தொந்தரவுச் செய்திகள் தாங்கவில்லை. இதை நிறுத்த வழி கூறினால் நான் உங்களுக்கு நோபல் பரிசுக்குச் சிபாரிசு செய்கிறேன்.

குறுக்காக
3. உலகுக்கு சக்தியளிப்போன் மாப்பிள்ளை கலங்கி முன்னே நிற்கும் கதி (5)
6. மதுரைக்காரருக்கு நீர்நிலைக் கண் உயிரைப் போக்கிக்கொள் (4)
7. சீடையை நொறுக்கும் பல்லிருக்கும் இடம் மசித்துத் தருக (4)
8. 25 x 53 பக்தர்கள் படிக்கும் நூலின் பெயர் சற்றே மாறுபட்டது. (6)
13. கலகலக்கும் கை சுற்றிவர பாரம் தலையிறங்கும் (6)
14. வெட்டும் ஆயுதம் கொள்ளை வாட்டு வால், இடையின்றித் துடிக்கும் (4)
15. உயர்ந்தவள் அரிசியின் ஆடைக்குள் ஒளித்து மறைத்த வேதமில்லை (4)
16. ஹெர்ஸாக் எழுதியதால் நோபல் பரிசைப் பெற்றவர் இவர் (2,3)

நெடுக்காக
1. பிந்துசாரன் ஆட்சிக்குட்பட்ட மூன்று ஸ்வரங்களை விரும்பு? (3,2)
2. தேன் துளியுடன் கர்ப்பிணி விரும்புவது முந்நேர் (5)
4. வெற்றிக்கு நெற்றிக்கிடு (4)
5. முழுகவன வாசிப்பில் ஆழ்ந்த மனிதன் நாகரிகமில்லாதவன் என்பர் (4)
9. ரதி பாதியாக அழகான முகத்தில் கட்டுவதால் கலகம் விளையும் (3)
10. தள்ளிவை சதுரங்கம் ஆடு (5)
11. கால் கட்டு போட்டுக்கொள்ள காலால் செய்! (3,2)
12. மையத்தில் வேடனின் ஆயுதத்திற்கு முன் மரத்தை வை (4)
13. மருதாணியில்லாமலே கை சிவக்கும் பணியில் ஈடுபடுபவர் (4)

நீங்கள் புதிர் மன்னரா?

குறுக்கெழுத்துப் புதிருக்கான சரியான விடைகளை 15-க்குள் அனுப்பும் முதல் மூன்று வாசகர்களின் பெயர்கள் 'புதிர் மன்னர்கள்' சாதனைப் பட்டியலில் இடம் பெற்று அடுத்த இதழில் வெளிவரும். விடைகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: thendral@tamilonline.com. 15க்குப் பிறகு, விடைகளை www.tamilonline.com என்ற சுட்டியில் காணலாம்.

vanchinathan@gmail.com

ஏப்ரல் 2009 புதிர் அரசிகள்/மன்னர்கள்

© TamilOnline.com