1998ல், பெண்களுக்கு அரசியல் அதிகாரம் என்பது பற்றி, இங்கிலாந்தில் நான் ஆய்வு செய்து கொண்டிருந்தேன். அப்போது பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் முதல் சிறுபான்மை இனப் பெண் உறுப்பினராக இருந்த திருமதி. ஷ்ரீலா ஃபிளாதரைச் சந்திக்க நேர்ந்தது. அறுபது வயது ஆனாலும் அவர் வசீகரமான இளமைத் தோற்றத்துடன் இருந்தார். இரண்டு மணிநேரம் என்னுடன் பேசினார். பிரபுக்கள் சபை உறுப்பினர் பலருக்கு என்னை அறிமுகப்படுத்தி வைத்தார். இந்திய வம்சாவளி உறுப்பினரான ஸ்வராஜ் பாலுக்கும் அறிமுகம் செய்து வைத்தார்.
ஷ்ரீலா, லாகூரைச் சேர்ந்த கொடைவள்ளல் சர். கங்காராமின் பேத்தி என்பதை அறிந்து நான் பூரித்துப் போனேன். நாட்டுப் பிரிவினைக்கு முன் கங்காராம் லாகூரில் மருத்துவமனை உள்பட பல அறக்கட்டளை நிறுவனங்களை அமைத்திருந்தார். பிரிவினைக்குப் பின் அம்மருத்துவமனையில் ஃபாத்திமா ஜின்னாவின் மருத்துவக் கல்லூரி இடம் பிடித்துக் கொண்டது. அதனால் கங்காராமின் நண்பர்கள் ஒன்றுசேர்ந்து டெல்லியில் அவருடைய பெயரில் ஒரு மருத்துவமனையை நிறுவினர். (அதில்தான் என் தந்தை பணிபுரிந்தார்). லாகூரில் பிறந்த ஷ்ரீலா, கல்வி கற்க இங்கிலாந்து சென்றார். பிரிவினைக்குப் பிறகு லாகூர் திரும்புவதில் அர்த்தமில்லை என்பதை உணர்ந்து இங்கிலாந்திலேயே தங்கிவிட்டார். வழக்குரைஞர் தொழிலில் இருந்த ஒரு ஆங்கிலேயரை மணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள். பால்ஃபிளாதர், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் வேலை செய்தார். மற்றொருவர் மருத்துவர்.
ஷ்ரீலாவின் சாதனைகள்
##Caption## ஷ்ரீலா அந்த உயர் பதவிக்கு ஒரே நாளில் வந்து விடவில்லை. இங்கிலாந்தில் சிறுபான்மை இன மக்களின் முதல் உறுப்பினராகி, பதினைந்து ஆண்டுகள் வெற்றிகரமாக அதில் பணியாற்றினார். வெள்ளையர்கள் மிக அதிகமாக உள்ள தொகுதியான வின்ட்சர் நகர் மேயராக பல ஆண்டுகள் கெளரவ சேவை செய்த பிறகு 1990ல் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரபுக்கள் சபை உறுப்பினர் ஆனார். மூன்று தடவை முயற்சி செய்து, அதில் இரண்டு முறை தோற்ற பின்னர்தான் அவரால் வின்ட்ஸர் மேயராக வெற்றிபெற முடிந்தது. பெண்கள், தங்களுக்கேற்படும் கஷ்டங்களைத் தாங்கிக் கொள்ளும் உடல், மன வலிமையைப் பெருக்கிக் கொண்டு பலசாலியாக இருக்கவேண்டும். ஆனால் இரக்கமற்ற கடின சித்தம் உள்ளவர்களாக ஆகிவிடக் கூடாது என்பது அவர் கருத்து.
'நான் வேலை பார்த்த ஒவ்வோரிடத்திலும், பல ஆங்கிலேயப் பெண்களால் கவிழ்க்கப்பட்டிருக்கிறேன். எனது தோழியும், சிறுபான்மை இன மக்களுக்குப் பணியாற்ற நான் கொண்டுவந்து சேர்த்தவருமான ஒரு பெண்மணி, நான் சமுதாயப்பணிகளில் ஈடுபடக்கூடாது என்றும், முஸ்லீம்கள் என்னை இந்து என்று கருதுவதாகவும் சொல்லி என்னை எச்சரித்தார். என்னை அமைப்பிலிருந்து வெளியேற்றவும் அவள் முயற்சி செய்தாள். அவற்றால் நான் பெரிதும் அதிர்ந்து போனேன். பிறகு அவள் ஒரு போட்டி நிறுவனத்தை உருவாக்கினாள். பெண்கள் மற்றப் பெண்களைக் கவிழ்ப்பதிலே தங்கள் பெரும் பகுதி நேரத்தைச் செலவிடுகின்றனர் என்பதே உண்மை. அவர்கள் சக மனிதர்களுடன் போட்டியிடுவதற்குப் பதிலாக குழுக்களிலேயே தங்களை ஒடுங்கி விடுகின்றனர்.
பெண்களுக்கு இட ஒதுக்கீடு
எல்லாவற்றிலும் பெண்களுக்குப் பங்கு இருக்க வேண்டும் என்பதை ஷ்ரீலா ஃப்ளாதர் விரும்பவில்லை. பெண்கள் அரசியல் வாழ்க்கையில் பங்கு பெறாதவரை, அவர்களுக்காகத் தனி இடம் ஒதுக்க வேண்டும் என்று கூறுவது அர்த்தமற்றது என்பது அவர் கருத்து. பங்கு கொண்டு செய்யும் பணியின் தரம்தான் முக்கியம். பத்துப் பேர்கள் இருந்து எதுவும் செய்யாததை விட ஓரிருவர் செய்யும் சிறப்பான வேலையே போற்றத்தக்கது. ஆகவே பெண்கள் பொதுப் பணியிலும், அரசியலிலும் பங்கு கொண்டு முன்னேற வேண்டுமென்று அவர் விரும்புகிறார்.
”பல பெண்கள் எதிலும் அக்கறை கொள்வதில்லை. உள்ளூர் அரசுகளுக்கான தேர்தலில் போட்டியிடப் பெண் வேட்பாளர்களைக் கொண்டு வர முயற்சி செய்தபோது, அது மிகக் கடினமானதாக இருந்தது. இனவாதமும், ஆண் பெண் வேறுபாடும் மிக முக்கியப் பிரச்சனையாக உள்ளது. பெண் தேர்வாளர்கள் பெண்களைத் தேர்ந்தெடுப்பதில்லை. எங்கள் கட்சியில் (பழமைவாதக்கட்சி) இப்படி ஒரு சிந்தனை இருக்கிறது: அதாவது ஓர் ஆடவரைத் தேர்வு செய்தால் அவருடைய மனைவியும் அவருக்காக வேலை செய்ய வருவார். ஆனால் ஒரு பெண்ணைத் தேர்வு செய்தால் அவள் தனி நபர்தான். அவள் கணவன் அவளுக்காக வேலை செய்ய வருவதில்லை. இந்நிலை மெதுமெதுவாக மாறிவருகிறது” என்கிறார் ஷ்ரீலா.
மாபெரும் பங்களிப்பு
##Caption## ஷ்ரீலாவினுடைய மாபெரும் பங்களிப்பு ஆசியர்களுக்கும் பிரிட்டிஷாருக்கும் இடையில் பாலம் அமைக்கும் பணிதான். அவர் கூற்றுப்படி 'நீங்கள் தடைகளை அமைத்துக் கொண்டால் மேற்கொண்டு முன்னேற முடியாது. முக்கியமான விஷயங்களில் நீங்கள் விட்டுக் கொடுத்து விடக் கூடாது. ஆனால் மற்றவர்களை பயமுறுத்துகிறவர்களாக நீங்கள் இருக்கக்கூடாது. மற்றவர்கள் ஏற்றுக் கொள்ளும்படியாக உங்கள் செயல்பாடுகள் இருக்க வேண்டும். ஆசியர்கள், தங்களைவிட பிரிட்டிஷார்கள் சிறந்தவர்கள் என்ற மனப்பான்மை கொண்டுள்ளனர். ஆசியர்களைப் பற்றி பிரிட்டிஷாரும் நல்ல அபிப்பிராயங்களையே கொண்டுள்ளனர். தாங்கள் கொண்டுள்ள தாழ்வு மனப்பான்மையை ஆசியர்கள் விட்டுவிட வேண்டும். இரண்டு பிரிவினரும் ஒன்றிணைந்து வேலை செய்யும் போது இந்த மனப்பான்மை மாறிவிடும்.”
ஷ்ரீலா பிரபுக்கள் சபைக்கு வந்த சமயம், அவர் ஒருவர் மட்டும்தான் பெண் உறுப்பினர். பிரபுக்கள் சபையினர் அவர் மீது பெருமதிப்பு வைத்திருந்தனர். இதில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது முக்கியமாக அவருடைய செல்வாக்கைப் பற்றித்தான். அந்தச் சபையின் கலாசாரப் பண்பாட்டையே அவர் மாற்றினார். சபைக்கு வரும்போது அவர் எப்போதும் புடவைதான் உடுத்தி இருப்பார். அந்த இடத்தைவிட வேறு எங்கும் அவர் சிறப்பாக நடத்தப்பட்டதாகத் தெரியவில்லை.
ஆங்கில மூலம்: கரியாலி ஐ.ஏ.எஸ் தமிழ் வடிவம்: திருவைகாவூர் கோ. பிச்சை |