ருசி ஹல்வா
தேவையான பொருட்கள்
பெங்களூர் கத்தரிக்காய் (சௌசௌ) தோல் நீக்கித் துருவியது - 1 கிண்ணம்
சர்க்கரை - 2 கிண்ணம்
நெய் - 2 தேக்கரண்டி
உலர் திராட்சை - 6
பாதாம் பருப்பு - 6
முந்திரிப் பருப்பு - 6
ஏலக்காய்த்தூள் - சிறிதளவு
கேசரிப் பொடி - தேவைக்கேற்ப

செய்முறை
சௌசௌ துருவலை வாணலியில் போட்டு 1/2 தேக்கரண்டி நெய் விட்டு வதக்கிக் கொள்ளவும். 2 கிண்ணம் சர்க்கரையை அதனுடன் சேர்த்து, கேசரிப் பவுடரைப் போட்டு, தண்ணீர் சேர்த்து நன்கு கிளறவும். தண்ணீர் வற்றியவுடன் மீதமிருக்கும் நெய்யை விட்டுச் சுருளக் கிளறவும். பாத்திரத்தில் ஒட்டாமல் அல்வா பதம் வரும்வரை நன்கு கிளறவும்.

பின் வறுத்த முந்திரி, திராட்சை, பாதாம் இவற்றுடன் ஏலக்காய்த் தூளையும் சேர்த்து நன்றாகக் கிளறவும். பின்பு நெய் தடவிய தட்டில் இந்தக் கிளறலை கொட்டிப் பரத்தி விடவும். சிறிது ஆறியவுடன் வில்லைகளாகப் போட்டுப் பரிமாறலாம். மிகச் சுவையாக இருக்கும்.

குறிப்பு: சௌசௌ தோலியை துவையல் அல்லது சட்னியில் உபயோகிக்கலாம்.

பிரேமா நாராயணன்,
சிகாகோ, இல்லினாய்ஸ்

© TamilOnline.com