ஸ்ரீலங்கா தமிழருக்கு உதவ சின்மயா மிஷன் வேண்டுகோள்
ஸ்ரீலங்கா அரசு கனரக ஆயுதத் தாக்குதலை நிறுத்தியதாக அறிவித்துவிட்டது. விடுதலைப் புலிகள் சுற்றிவளைக்கப் பட்டுவிட்டனர். ஆனாலும் நீடித்த இந்தப் போரில் பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் உயிரிழந்து போய் விட்டனர். எஞ்சியுள்ள சில லட்சம் பேரின் ஊர், வீடு, உடைமைகள் இல்லாமல் அரசின் தயவை வேண்டி நிற்கின்றனர். உணவு, நீர், மருந்து என்று இவைகள் அரியவையாகி, உடலோடு உயிரைத் தக்க வைத்துக் கொள்வதே பெரும் பிரயத்தனமாக உள்ளது. வழமையான நோய்கள் தவிர, காயங்கள், ஊனங்கள், அடிப்படை வசதியின்மையால் ஏற்படும் பிணிகள் என்று அவதிப்படுகிறார்கள். அவர்களது துன்பத்தைச் சொற்களால் தாங்கிவர முடியாது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த சுவாமி சின்மயானந்தா அவர்கள் தொடங்கி வைத்த சின்மயா மிஷனின் இலங்கைக் கிளை சுனாமிக்கும் முற்பட்ட காலம் தொட்டுப் பெரும் சேவையை அங்குள்ள மக்களுக்கு ஆற்றி வருகிறது. அதன் பொறுப்பாளரான திருமதி கௌரி மகேந்திரனுடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது.

“இன்றைய இலங்கையில் உணவுப் பொருட்களுக்கு 40% வட்டி, ஒரு கிலோ அரிசியின் விலை ரூ.100, ஒரு தேங்காய் ரூ. 50. ஒரு பக்கம் செயற்கையாக மனிதர்கள் ஏற்படுத்தியுள்ள இடர்கள். மறுபக்கம் சுனாமி போன்ற இயற்கைப் பேரிடர்கள்” என்று மிகுந்த வருத்தத்துடன் தமது தாய்நாட்டின் அவல நிலைமையைக் கூறினார் கௌரி.

இந்தப் போரில் அகப்பட்டு அவதிப்படும் ஸ்ரீலங்கா தமிழர்களுக்கு உடனடியாகப் பல்வேறு மனிதாபிமான உதவிகளைச் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார் கௌரியும் சின்மயா மிஷனின் பிற தொண்டர்களும். “அடிப்படைத் தேவைகளான உள்ளாடைகள் உட்பட ஆடை, சோப்பு, மருந்துகள் என்று எல்லாமே அவசரமாகத் தேவைப்படுகின்றன. அந்தச் சரணடைந்தோர் பாடிகளில் லட்சக்கணக்கானோர் உள்ளனர். எல்லோருக்கும் எல்லாம் தரும் நிலையில் அரசு இல்லை” என்று அங்கிருக்கும் நிலையை விவரிக்கிறார் மிகுந்த துயரத்தோடு கௌரி.

1981ல் சின்மயா மிஷன் இலங்கையில் நன்கொடை மற்றும் சேவை இயக்கமாக அங்கீகாரம் பெற்றது. கௌரியின் பெற்றோர் இம்மையத்தின் கொள்கைகளைப் பின்பற்றி அங்கு பல வருடங்களாகச் சேவை செய்து வந்தபோதிலும், கௌரி இம்மையத்தில் தொண்டு செய்யத் துவங்கியது கடந்த சில வருடங்களாகத்தான். இலங்கையைச் சுனாமி தாக்கியபோது சின்மயா இயக்கத்தின் ஒரு கிளையான CORD (Chinmaya Organization For Rural Development) என்ற பிரிவின் மூலம் மட்டக்களப்பு மற்றும் பிற பகுதிகளில் இவர்கள் நிவாரணப் பணிகளைத் துவக்கினர். CORD இந்தியாவில் கடந்த 25 ஆண்டுகளாகச் சேவையில் ஈடுபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சுனாமி நிவாரணத்தில் இந்தியாவைச் சேர்ந்த பல அரசு சாரா அமைப்புகள் (NGO) வீடுகள் கட்டித் தருதல், கட்டுமரம் கொடுத்தல் போன்ற உதவிகளைச் செய்ய, CORD பெண்களுக்குச் சுயதொழில் கற்பித்தலில் தனது கவனத்தைச் செலுத்தியது.

சின்மயா மகிளா மண்டல்

கௌரியும் அவரது குழுவும் இவ்விடங்களுக்குச் சென்று முதலில் தம் உதவித் திட்டத்தை அப்பெண்களுக்கு விவரித்தபோது, ஏதோ இலவச நிதி உதவி கிடைக்கப் போகிறது என முதலில் அப்பெண்மணிகள் நினைத்தனர். ஆனால் இவர்களது திட்டம் அப்படிப்பட்டதல்ல என்பதை எடுத்துச் சொல்லி, அவர்களைத் தம் காலில் தாமே நிற்கவைக்க உதவி செய்வதே CORDன் நோக்கம் என்பதைச் சின்மயா சேவகர்கள் விளக்க வேண்டியதாயிற்று.

“எங்கள் திட்டத்தின்படி ஒரே பகுதியில் வாழும் பெண்களை 19-20 நபர்கள் கொண்ட குழுக்களாக அமைத்து, ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு தலைவர், உபதலைவர், செயலாளர் என அவர்களையே தேர்வு செய்யச் சொல்வோம். ஒரே இடத்தில் வசிப்பவர்களாதலால் அவர்கள் இணைந்து செயல்படுவது சுலபமாக இருக்கும். இப்படி 8-10 குழுக்களாகப் பிரித்துச் செயலில் ஈடுபடுத்தினோம்.

##Caption## முதல் கட்டமாக ஒவ்வொரு குழு அன்பரிடமும் பேசி, அவரவர் வசதிக்கேற்பச் சொற்பத் தொகையை முடிவு செய்து, அதனை முதலீட்டின் மூலாதாரமாக்குவோம். ஒவ்வொரு வாரமும் ஒரு குறிப்பிட்ட நாளில், நேரத்தில் இவர்கள் சந்திக்க வேண்டும். ஒவ்வொரு அன்பரும் உதாரணத்திற்கு ரூ. 5 முதலீடு செய்ய வேண்டும். இப்படி 10 பேர் சேர்க்கும் முதலீட்டை, அது 50 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை கூட இருக்கலாம். அத்தொகையை அக்குழுவைச் சேர்ந்த ஒரு பெண்மணி ஒரு வாரத்துக்கு அதைக் கடன்தொகையாகப் பெறுவார். அடுத்தவாரம் இத்தொகையை ஒரு சிறிய வட்டியுடன் அவர் திருப்பித்தர, அது குழுவின் வேறொரு அன்பருக்கு கடனாகக் கொடுக்கப்படும். இவ்வாறே ஆறுமாத காலம் வரை வட்டியும் முதலும் குழு அன்பர்களிடமே கடனாக அளிக்கப்படும். இதற்குள் அவர்களுக்கும் கடனைத் நேரத்திற்கு திருப்பிக் கொடுப்பது, பிறரிடம் கூடி இணைந்து செயல்படுவது போன்ற ஒழுங்குமுறைகள் அமலில் வரும்.

அச்சமயம் அவர்களிடம் எவ்வளவு முதலீடு உள்ளதோ அதற்கேற்ப CORD அவர்களுக்கு கடன் வசதி அளிக்க முன்வரும். ஒவ்வொரு குழுவினையும் ஏதேனும் சுயதொழிலில் ஈடுபடுத்துவோம். ஒரு குழுவுக்கு அரவை எந்திரம் வாங்கிக் கொடுத்து வடை, தோசை போன்ற உணவுப் பொருட்களைச் செய்ய வைப்போம். இதனை வேறு ஒரு குழு அன்பர்கள் எடுத்துச் சென்று அங்குள்ள ஹோட்டல்கள் மற்றும் பெட்டிக்கடைகளில் விநியோகம் செய்வர். கோழிப் பண்ணை, கால்நடைப் பண்ணை துவங்க உதவுவோம். இங்கு ஈன்றெடுக்கப்படும் கன்றுகளை இலவசமாக வேறு குழு அன்பர்களுக்கு இவர்கள் கட்டாயம் அளிக்க வேண்டும்.

விசேஷங்களுக்குத் தேவையான பெரிய பாத்திரங்கள், பிளாஸ்டிக் சேர் போன்றவற்றை வாடகைக்கு விடுதல்; வீட்டுக்குத் தேவையான மாவுகள், பொடிகள் தயாரித்தல்; தையற்கலை, பாய் பின்னுதல், பின்னல் வேலைத் (knitting) தொழில் ஆகிய பலவற்றை மகிளா மண்டல் மூலம் பயிற்றுவிக்கிறோம். இவர்களுக்குத் தேவையான எந்திரக் கருவிகளை நாங்களே வாங்கிக் கொடுப்போம்.

ஆன்மீக ஆறுதல்

மகிளா மண்டல் கூட்டங்களில் தொழில் முன்னேற்றம், அதன் தற்சமய நிலையைப் பற்றி ஆராய்வோம். பிறகு சிறிது நேரம் அப்பெண்களுக்கு மன அமைதி தரும் கதைகள் கூறுவோம். பிறகு நாங்கள் இணைந்து பஜனை பண்ணுவோம். இதில் வியப்பு என்னவென்றால் அவர்களில் 70 சதவீதத்துக்கும் மேல் கத்தோலிக்கக் கிறித்துவர்கள். அப்படியும் நாங்கள் எவ்வித மத வேறுபாடுகளுமின்றி பஜனைகள் செய்வோம். நவராத்திரி, கிறிஸ்துமஸ் இரண்டு வைபவங்களையும் தவறாமல் கொண்டாடுவோம்.

இப்பெண்களின் குழந்தைகளுக்கு இலவச டியூஷன் சொல்லித் தருவோம். ரூ. 1000 வரை கடன் அளித்தல், இலவச சைக்கிள் போன்ற உதவிகளும் செய்வதுண்டு. இலங்கையில் ஆங்கில மொழியைத் தமிழ் மாணவர்கள் முறைப்படி பள்ளியில் பெற இயலாததால், அவர்களிடையே வேலையில்லாத் திண்டாட்டம் அதிகம். CORD இவர்களுக்கு ஆங்கிலம் மற்றும் கணினி வகுப்புகள் நடத்துகிறது.

மட்டக்கிளப்பு, யாழ்ப்பாணம், திரிகோணமலை போன்ற இடங்களில் நாங்கள் சேவை செய்து வருகிறோம். இளைஞர்களை மனதளவில் வேதாந்தம் மூலம் வலுவூட்டுவதே சின்மயா மிஷனின் முக்கியக் குறிக்கோள். 2001ம் வருடம் கண்டியில் உள்ள நல்லூர் மலையில் சின்மயா மிஷன் சார்பில் ஆஞ்சநேயர் கோவிலும், 2007ல் கொழும்புவில் கடற்கரையோரம் ராமர் கோயிலும் கட்டப்பட்டுள்ளன. இரண்டு சுவாமிமார்கள் இங்கு நிரந்தரமாகத் தங்கிச் சேவை செய்து வருகின்றனர்.

நிதி தாருங்கள்

நிதி ஆதாரம் இல்லாமல் எப்படி இத்தனைப் பணிகளும் நடக்கும்! “எங்களுக்கு நிதி உதவி நிறையத் தேவை. சுனாமியின் போது எங்களுக்குக் கிட்டிய தொகையை வைத்துக்கொண்டு இதுவரை உழைத்து வந்தோம். இனிமேல் தாக்குப் பிடிப்பது மிகவும் கடினம். சுனாமியில் எங்கள் உறுப்பினர்களின் தறிகள் அனைத்தும் பாதிப்புக்கு உள்ளாயின. உடனடியாகச் சில தறிகள் தேவை. இதைத் தவிர அப்பளம், ஊறுகாய் செய்யும் முறையைத் தெரிந்தவர்கள் எங்கள் முகாமிற்கு வந்து, இக்கலையைப் பயில்விக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று கேட்டுக் கொள்கிறார் கௌரி.

அயராமல் உழைக்கும் கௌரி மகேந்திரனுக்கு ஒரு மகளும் இரண்டு மகன்களும் உள்ளனர். இவரது கணவர் திரு மகேந்திரன் இவரது எல்லா முயற்சிகளிலும் உறுதுணையாக இருப்பதாகப் பெருமையுடன் கூறுகிறார் கௌரி. சின்மயா மிஷன் மற்றும் கௌரி போன்றவர்களின் தன்னலமற்ற சேவை மேலும் தொடர வாழ்த்துகிறோம்.

ஸ்ரீலங்கா தமிழர் நிவாரணப் பணிகளுக்கு நிதி உதவி பெருமளவில் தேவைப்படுகிறது. நன்கொடைகளுக்கு 501(c)(3) பிரிவின் கீழ் வரிவிலக்கு உண்டு. Tax ID: 51-017-5323. ‘Chinmaya Mission West' என்ற பெயரில் காசோலைகளை அனுப்ப வேண்டும். காசோலையில் கீழே: “CORD-Sri Lanka” என்று தவறாமல் குறிப்பிட வேண்டும். முகவரி: Chinmaya Mission West, Meera Raja, 2246 West Cullom Ave., Chicago, IL 60618, USA.

மதுரபாரதி

© TamilOnline.com