சுவாமி நித்தியானந்தர், யோகப் பயிற்சியையும் தியானப் பயிற்சியையும் ஒருங்கிணைத்து அமைத்த 'யோகம்' என்ற ஞான வழியை, முதன்முதலாக வட அமெரிக்காவின் ரொறொண்ரோவில் மார்ச் 7, 8 தேதிகளில் தொடங்கி வைத்தார்.
சுவாமிகளை வரவேற்கும் முகமாக ‘ஆடிவரும் தெப்பம்' என்ற தமிழ் கீதம் இசைக்கப்பட்டது. பதஞ்சலி யோக சூத்திரம் ஒன்றை சுவாமிகள் நிகழ்ச்சியில் விளக்கினார். 'யோகம் என்பது கட்டான உடலமைப்பிற்கும், மன அமைதிக்கும் மட்டுமின்றி அதனையும் தாண்டிய ஆனந்தானுபூதியும், மேம்பட்ட சீரான வாழ்க்கையையும் அளிப்பது. உடல், மனம், ஆன்மா மூன்றையும் ஒருமுகப்படுத்தி நித்தியானந்தத்தில் திளைக்கச் செய்யும் காயகல்பம் அது' என சுவாமிகள் விளக்கினார். நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பல்லின மக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மார்ச் 8 அன்று கல்பதரு தியான சத்சங்கம் நடந்தது. மாற்ற வேண்டியதை மாற்றுவதற்கான சக்தியையும், மாற்ற வேண்டாதவற்றை ஏற்றுக் கொள்வதற்கான புத்தியையும், நாம் எவ்வளவுதான் மாறினாலும் எது உண்மையென எமக்குத் தென்படுகிறதோ அது நித்தமும் மாறும் கனவு என்ற உண்மையை உணர்வதற்கான யுக்தியையும் அளித்து, பிரபஞ்ச சக்தியின்பால் நாம் பக்தி செலுத்துவதற்கான அறிவுரைகளையும் தந்து, இந் நான்கையும் நாம் ஒழுங்காகக் கடைப்பிடிக்கும் காலை நமக்குக் கிடைக்கும் ஜீவன் முக்தி நிலையையும் சுவாமிகள் தெளிவாக விளக்கினார்.
நித்திய தியானம் உடலிலுள்ள அசுத்தங்களை வெளியேற்றுவதுடன், நற்காற்றை உள்ளிழுத்து உடலின் ஒவ்வொரு அணுவும் பயன்படும்படி வகுக்கப்பட்டதாகும். மனிதன் தன்னைத் தானே உணர்ந்து ஆன்மபலத்தைக் கூட்டும் தியானத்தையும் கற்றுத் தந்தார். சுவாமிகளின் அனுபவப் புதையல்களாகப் புத்தகங்களும், குறுந்தகடுகளும் வெளியாகியுள்ளன. அவற்றில் பலவும் நிகழ்ச்சியின்போது முற்றிலுமாக விற்றுத் தீர்ந்தன. நிகழ்ச்சியின் முடிவில் வந்திருந்த அனைவருக்கும் வேண்டுவோர் வேண்டுவதை ஈயும் கல்பதரு தரிசனம் மூலம் நித்தியானந்த அனுபவத்தை அளித்தார் ஸ்ரீ பரமஹம்சர்.
- சபா, கனடா |