மார்ச் 7, 2009 அன்று ஓலோனி காலேஜில் உள்ள ஸ்மித் சென்டரில் ஸ்ருதி ஸ்வரலயா கலைப்பள்ளி ஆசிரியை வித்யா வெங்கடேஷ் அவர்களது மாணவி அகிலா நந்தகுமார் அவர்களின் பரத நாட்டிய அரங்கேற்றம் நடந்தது.
புஷ்பாஞ்சலியுடன் நடனத்தைத் தொடங்கினார் அகிலா. அடுத்து ஹம்ஸத்வனி ராகத்தில் விநாயகர் ஸ்துதியைத் தொடர்ந்தார். 'ஆடிக்கொண்டார்' என்ற பாடலில் நல்ல பாவத்துடன் ஆடினார். காபி ராகத்தில் அமைந்த 'நர்த்தனம் ஆடினார்' என்ற பாடலுக்கும் கைதட்டலைப்பெற்றார். குரு வித்யா வெங்கடேஷ் அவர்களின் நட்டுவாங்கம் நிகழ்ச்சிக்கு மெருகூட்டியது.
தன்னை மணக்க நீண்ட தவத்திற்குப்பிறகு சிவன் வரம் கொடுக்க அவரைத்தேடி பார்வதி தேவி வழிமுழுதும் அவர் இருக்குமிடத்தை விசாரிப்பதாக அமைந்த'குரும்பை'யில் நர்த்தகியை அனைவரும் மேடையில் தேட அவரோ அரங்கத்தின் பின்புறத்தில் இருந்து தோன்றி பார்வையாளர்களையே பார்வதி வழிகேட்பதுபோல் கேட்டு கொண்டு மேடையேறியது புதுமை, சிறப்பு.
தொடர்ந்து 'நீ இந்த மாயம்' (தன்யாசி), 'மயில்மீது' (மோகனம்), 'ராமகிருஷ்ண கோவிந்தா' ஆகிய பாடல்களுக்கு நாட்டிய அசைவுகளும் தாளக்கட்டுடன் கூடிய அடவுகளும் சிறப்பாக அமைந்தன. ஹனுமான் சாலிஸாவிற்கான நடனத்தைத் தன் பெற்றோருக்குச் சமர்ப்பித்தது ஹனுமான் பக்தர்களாகிய அவரது பெற்றோர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது. தில்லானாவுக்கு அவர் துள்ளலுடன் ஆடியது சிறப்பாக இருந்தது. இறுதியாக மங்களத்துடன் தனது குருவுக்கு நன்றி நவில நடன அரங்கேற்றம் நிறைவடைந்தது.
அகிலா நந்தகுமார், குரு வித்யா வெங்கடேஷ் அவர்களிடம் 9 ஆண்டுகள் நடனம் பயின்றிருக்கிறார். ஸ்ருதி ஸ்வரலயா குழுவினர் அனு சுரேஷ் மற்றும் மானஸா சுரேஷின் வாய்ப்பாட்டும், ரவி ஸ்ரீதரின் மிருதங்கமும், ஸ்ரீனிவாஸ் கோமுவின் வயலினும் நிகழ்ச்சிக்குப் பக்கபலமாக அமைந்தன.
- நித்யவதி சுந்தரேஷ் |